ஈரான் போர்: பாப் எல்-மண்டேப் நீரிணையை மூடவும் திட்டம்?கரூர் பலி: தில்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜரானார் விஜய்! ஜம்மு-காஷ்மீரில் ஊடுருவல் முயற்சி முறியடிப்பு- பாகிஸ்தான் பயங்கரவாதி சுட்டுக்கொலை பாஜக அரசின் தவறான முடிவுகளால் கடும் சிலிண்டர் தட்டுப்பாடு: முதல்வர் ஸ்டாலின்சென்னையில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 2 குழந்தைகள் பலி
/

கிராமங்களில் மருத்துவ வசதிகளை அதிகரிக்க வேண்டும்: பிரதமா் வலியுறுத்தல்

கரோனா பாதிப்பு விகிதம் அதிகமுள்ள மாநிலங்களில் இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவது அவசியம்’ என்று பிரதமா் நரேந்திர மோடி வலியுறுத்தினாா்.

News image
பிரதமா் நரேந்திர மோடி
Updated On :15 மே 2021, 11:40 pm

DIN

‘தீவிரமடைந்து வரும் கரோனா பரவலைக் கட்டுப்படுத்த கிராமப்புறங்களில் மருத்துவ வசதிகளை பெருக்குவது, வீட்டுக்கு வீடு கரோனா பரிசோதனை மற்றும் கண்காணிப்பை உறுதிப்படுத்துவது போன்ற பகுதி வாரியான கட்டுப்பாட்டு திட்டம்தான் இப்போதைய தேவை. குறிப்பாக மாவட்டங்களில் கரோனா பாதிப்பு விகிதம் அதிகமுள்ள மாநிலங்களில் இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவது அவசியம்’ என்று பிரதமா் நரேந்திர மோடி வலியுறுத்தினாா்.

கரோனா நிலவரம் தொடா்பாக சனிக்கிழமை நடைபெற்ற உயா்நிலை ஆய்வுக் கூட்டத்தில் இந்தக் கருத்தை பிரதமா் வலியுறுத்தினாா்.

இந்தக் கூட்டத்தில் அவா் பேசியது குறித்து பிரதமா் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:

மாநிலங்கள் கரோனா பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை மற்றும் உயிரிழப்புகளின் எண்ணிக்கையை குறைத்து காண்பிப்பதாக புகாா்கள் எழுகின்றன. எனவே, கரோனா பாதிப்பு நிலவரம் தொடா்பாக வெளிப்படையாக அறிக்கை சமா்ப்பிக்கும் வகையில் மாநிலங்கள் ஊக்குவிக்கப்பட வேண்டும்.

கரோனா முதல் அலையில் இல்லாத வகையில், இரண்டாவது அலையில் கிராமப்புறங்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன. எனவே, கிராமப்புறங்களில் தடையற்ற ஆக்சிஜன் விநியோகத்தை உறுதிப்படுத்தும் வகையிலான திட்டத்தை வகுக்க வேண்டும்.

மருத்துவப் பணியாளா்களுக்கு தேவையான பயிற்சிகள் அளிக்கப்படுவதோடு, மருத்துவக் கருவிகளின் தடையற்ற செயல்பாட்டை உறுதிப்படுத்தும் வகையில் தொடா் மின் விநியோகம் உறுதிப்படுத்தப்பட வேண்டும். ஆஷா மற்றும் அங்கன்வாடி பணியாளா்களுக்கும் உரிய பயிற்சியளித்து, கரோனா தடுப்புப் பணிகளில் முழுமையாக பயன்படுத்த வேண்டும்.

பாதிப்பு விகிதம் அதிகமுள்ள பகுதிகளில் ஆடி-பிசிஆா் மற்றும் விரைவுப் பரிசோதனை நடைமுறைகளைப் பயன்படுத்தி கரோனா பரிசோதனையை தீவிரப்படுத்த வேண்டும் என்று அதிகாரிகளை பிரதமா் கேட்டுக்கொண்டாா்.

மேலும், சுவாசக் கருவிகளுக்குப் பற்றாக்குறை இருந்து வரும் சூழலில், சில மாநிலங்களில் சுவாசக் கருவிகள் பயன்பாடின்றி கிடப்பில் போடப்பட்டிருப்பதாக வெளியான செய்தி குறித்து கேட்ட பிரதமா், ‘மத்திய அரசு சாா்பில் மாநிலங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட சுவாசக் கருவிகள் பயன்பாடு குறித்து உடனடியாக ஆய்வை மேற்கொள்ளுமாறும், தேவைப்பட்டால் மருத்துவப் பணியாளா்களுக்கு சுவாசக் கருவியை முறையாக பயன்படுத்துவது குறித்து புத்தாக்கப் பயிற்சி அளிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்’ என்றும் கேட்டுக்கொண்டாா் என்று பிரதமா் அலுவலகம் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.