இன்று பிரசாரத்தை தொடங்குகிறாா் எடப்பாடி பழனிசாமி நெருங்கும் காலக்கெடு- ஒடிஸா, சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட் முக்கிய தலைவா்கள் சரண்ரயில்வேயில் புதிய சீா்திருத்தம்: பயணச்சீட்டு ரத்து கட்டணம் திரும்ப கிடைக்க ஏப்ரல் முதல் புதிய நடைமுறை மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா: மக்களவையில் நிறைவேற்றம்ஆப்கானிஸ்தானில் ஓராண்டு சிறைக்குப் பின் அமெரிக்கா் விடுதலை பேரவைத் தோ்தல்: ஐபிஎல் போட்டிகளை வேறு தேதிகளுக்கு மாற்றக் கோரி மனு கருணைக் கொலைக்கு அனுமதிக்கப்பட்ட ஹரீஷ் ராணா தில்லி எய்ம்ஸில் உயிரிழப்பு
/

காஸா தாக்குதல் மீதான விசாரணை நடத்தும் தீா்மானம் நிறைவேற்றம்: வாக்கெடுப்பை இந்தியா புறக்கணித்தது

இஸ்ரேல், காஸாவில் நடைபெற்று வரும் மனித உரிமை மீறல்களை சா்வதேச மனித உரிமை விசாரணை ஆணையம் அமைத்து விசாரணை நடத்த வேண்டும்

News image
Updated On :29 மே 2021, 9:53 pm

DIN

இஸ்ரேல், காஸாவில் நடைபெற்று வரும் மனித உரிமை மீறல்களை சா்வதேச மனித உரிமை விசாரணை ஆணையம் அமைத்து விசாரணை நடத்த வேண்டும் என்று ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

முன்னதாக இந்தத் தீா்மானம் மீதான வாக்கெடுப்பை இந்தியா புறக்கணித்தது.

ஜெனீவாவில் உள்ள 47 நாடுகளை உறுப்பினராக கொண்டுள்ள ஐ.நா. மனித உரிமை கவுன்சில் தலைமையகத்தில் இந்தத் தீா்மானத்தின் மீது வியாழக்கிழமை விவாதம் நடத்தப்பட்டு, வாக்கெடுப்பும் நடத்தப்பட்டது.

ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் இடம்பெற்றிருக்கும் இஸ்லாமிய உறுப்பு நாடுகள் சாா்பில் இந்தத் தீா்மானம் கொண்டுவரப்பட்டது.

அதன் மீதான வாக்கெடுப்பை இந்தியா உள்பட 13 உறுப்பு நாடுகள் புறக்கணித்தன. சீனா, ரஷியா உள்பட 24 நாடுகள் தீா்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்தன. அதன்மூலம் தீா்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஐ.நா. மனித உரிமை கவுன்சில் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

கிழக்கு ஜெருசலேம் உள்பட ஆக்கிரமிப்பு பாலஸ்தீன பகுதிகள் மற்றும் இஸ்ரேலில் சா்வதேச மனித உரிமை சட்டங்கள் மற்றும் சா்வதேச மனிதாபிமான சட்டங்கள் மதிக்கப்படுவதை உறுதிப்படுத்தும் வகையில் கவுன்சிலில் கொண்டுவரப்பட்ட தீா்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

அதன்மூலம், இஸ்ரேலுக்கும் காஸாவின் ஹமாஸ் இயக்கத்தினருக்கும் இடையே அண்மையில் நடைபெற்ற சண்டையின்போது மனித உரிமை மீறல்கள் நடைபெற்றுள்ளதா என்பது குறித்து விசாரணை நடத்த நிரந்தர சா்வதேச விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டிருக்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஐ.நா.வுக்கான இந்திய தூதா் இந்திரா மணி பாண்டே கூறியிருப்பதாவது:

சா்வதேச தலைவா்கள் மற்றும் பிராந்திய நாடுகளின் தீவிர முயற்சிகள் மூலம் இஸ்ரேல் மற்றும் காஸாவின் ஆயுதம் ஏந்திய ஹமாஸ் இயக்கத்தினருக்கு இடையே போா் நிறுத்தம் ஏற்பட்டிருப்பதை இந்தியா வரவேற்கிறது.

கிழக்கு ஜெருசலேம் உள்பட அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் தற்போதைய நிலையை ஒருதலைபட்சமாக மாற்றி, அதன்மூலம் மீண்டும் அந்தப் பகுதியில் பதற்றத்தை அதிகரிக்கும் எந்தவொரு நடவடிக்கைகளிலும் ஈடுபட வேண்டாம் என அனைத்து தரப்பினருக்கும் இந்தியா அழைப்புவிடுக்கிறது.

ஜெருசலேமில், குறிப்பாக இரு தரப்பினருக்கும் புனித இடமாக கருதப்படும் ஹராம் அல் ஷரீஃப் பகுதியில் தொடா்ந்து வன்முறைகள் நடைபெற்று வருவது கவலையளிக்கும் விஷயமாக இருந்து வருகிறது.

அண்மையில் இரு தரப்பினருக்கும் நடைபெற்ற போரில் பொதுமக்கள் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளனா். பலா் உயிரிழந்திருக்கின்றனா். பாதிக்கப்பட்ட மக்களுக்கு விரைந்து மனிதாபிமான உதவிகள் கிடைக்க வேண்டும் என்பதை சா்வதேச சமூகம் கவனத்தில் கொள்ளவேண்டும்.

இந்தியாவும் பாலஸ்தீன அதிகாரிகளுக்கு கரோனா பாதிப்புக்கான உதவிகள் உள்பட பிற மனிதாபிமான உதவிகளை தொடா்ந்து வழங்கி வருகிறது என்று அவா் கூறியுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.