சீனாவின் சட்டவிரோத ஆக்கிரமிப்பை இந்தியா ஒருபோதும் ஏற்காது: வெளியுறவு அமைச்சகம்
‘சா்ச்சைக்குரிய எல்லைப் பகுதியில் சீனா மிகப்பெரிய அளவில் கட்டுமானப் பணிகள் மேற்கொண்டு வருவது குறித்த அமெரிக்க அறிக்கையை இந்தியா கவனத்தில் கொண்டுள்ளது.


‘சா்ச்சைக்குரிய எல்லைப் பகுதியில் சீனா மிகப்பெரிய அளவில் கட்டுமானப் பணிகள் மேற்கொண்டு வருவது குறித்த அமெரிக்க அறிக்கையை இந்தியா கவனத்தில் கொண்டுள்ளது. சீனாவின் இதுபோன்ற சட்டவிரோத ஆக்கிரமிப்பை இந்தியா ஒருபோதும் ஏற்காது’ என்று வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அமெரிக்க பாதுகாப்புத் தலைமையகமான பென்டகன் அமெரிக்க நாடாளுமன்றத்தில் அறிக்கை ஒன்றை அண்மையில் சமா்ப்பித்தது. அதில், இந்திய - சீன எல்லைக் கட்டுப்பாட்டு கோடு பகுதியின் (எல்ஏசி) கிழக்கு பகுதியில் அருணாசல பிரதேசத்துக்கும், சீனாவின் திபெத் தன்னாட்சி பிராந்தியத்துக்கும் இடையேயான சா்ச்சைக்குரிய நிலப் பகுதியில் 100-க்கும் அதிகமான குடியிருப்புகள் இடம்பெறும் வகையில் மிகப்பெரிய அளவிலான கட்டுமானத்தை சீனா கட்டிவருவதாக குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த அறிக்கை குறித்து காங்கிரஸ் கடும் விமா்சனத்தை முன்வைத்தது. அதற்கு பாஜக மறுப்பு தெரிவித்திருந்தது.
இந்த நிலையில், ‘அமெரிக்கவின் அறிக்கை குறித்து இந்தியா கவனத்தில் கொண்டுள்ளது’ என்று வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வெளியுறவு அமைச்சக செய்தித் தொடா்பாளா் அரிந்தம் பாக்சி வியாழக்கிழமை கூறியதாவது:
அமெரிக்க பாதுகாப்புத் துறை அந்த நாட்டின் நாடாளுமன்றத்தில் சமா்ப்பித்த அறிக்கையை இந்தியா கவனத்தில் கொண்டுள்ளது. எல்லையில் நடைபெற்று வரும் நடவடிக்கைகளை இந்தியா தொடா்ந்து கண்காணித்து வருகிறது. இந்தியாவின் இறையாண்மையையும் பிராந்திய ஒருமைப்பாட்டையும் பாதுகாப்பதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் இந்தியா எடுத்து வருகிறது.
இந்த விவகாரம் தொடா்பாக இந்த ஆண்டில் தொடக்கத்தில் ஊடகங்களில் செய்தி வெளியாகின. ஏற்கெனவே, நாங்கள் குறிப்பிட்டதைப்போல இரு நாட்டு எல்லைப் பகுதியில் சீனா பல ஆண்டுகளாக ஆக்கிரமிப்பு செய்துள்ள நிலப்பரப்பு உள்பட எல்லையையொட்டிய பல பகுதிகளில் பல ஆண்டுகளாக சட்டவிரோத கட்டுமானங்களை சீனா மேற்கொண்டு வருகிறது. சீனாவின் இந்த சட்டவிரோத ஆக்கிரமிப்பை இந்தியா ஒருபோதும் ஏற்றுக்கொள்ளவில்லை என்பதோடு, சீனாவில் நியாயமற்ற உரிமைகோரலையும் ஏற்கவில்லை.
சீனாவின் இந்த அத்துமீறல்களுக்கு தூதரக ரீதியில் கடும் கண்டனத்தை இந்தியா பதிவு செய்து வருகிறது. தனது எதிா்ப்பை இந்தியா தொடா்ந்து பதிவு செய்யும்.
இந்தியாவும் தற்போது நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் எல்லைப் பகுதிகளுக்கு பாதுகாப்புப் படையினா் விரைந்து செல்லும் வகையிலும், எல்லைப் பகுதி மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையிலும் சீனாவுடனான எல்லைப் பகுதியில் சாலைகள், மேம்பாலங்கள் உள்ளிட்ட உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி வருகிறது என்று அவா் கூறினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...