

வேளாண் கழிவுகள் எரிக்கப்படுதவற்கு எதிராக அரசு விவசாயிகளை சம்மதிக்க வைக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் இன்று தெரிவித்துள்ளது. தில்லி மற்றும் அதை சுற்றியுள்ள நகரங்களில் காற்றின் மாசு மோசமாக மாறியுள்ள நிலையில், விவசாயிகளுக்கு தண்டனை கொடுக்க விரும்பவில்லை என உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி. ரமணா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து நீதிமன்றத்தில் விரிவாக பேசிய அவர், "விவசாயிகளை தண்டிக்க நாங்கள் விரும்பவில்லை. குறைந்தபட்சம் ஒரு வாரமாவது கழிவுகளை எரிக்க வேண்டாம் என மத்திய அரசு விவசாயிகளிடம் கோரிக்கை வைக்க வேண்டும். தொலைக்காட்சி விவாதங்கள் மற்றவற்றை விட அதிகமான மாசுபாட்டை ஏற்படுத்துகின்றன.
ஒவ்வொருவருக்கும் ஒரு இலக்கு இருக்கிறது. நாங்கள் இங்கே ஒரு தீர்வை உருவாக்க முயற்சிக்கிறோம்" என்றார். கடந்த ஒரு வார காலத்தில், தில்லி மாசு குறித்து உச்ச நீதிமன்றத்தில் மூன்றாவது முறையாக விசாரணை நடைபெற்றுவருகிறது. வேளாண் கழிவுகள் எரிப்பு குறித்து தரவுகள் வெளியான நிலையில், மத்திய மற்றும் தில்லி அரசின் மீது உச்ச நீதிமன்றம் விமரிசனம் மேற்கொண்டுள்ளது.
முன்னதாக, விசாரணை தொடங்கிய நிலையில், மத்திய அரசின் சார்பாக நீதிமன்றத்தில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, வேளாண் கழிவுகள் குறித்து திங்கள்கிழமை சமர்பித்த தரவுகள் காரணமாக தன் மீது மோசனமான விமர்சனங்கள் வைக்கப்படுவதாக தெரிவித்தார்.
"வேளாண் கழிவுகள் எரிக்கப்படுவதால் 4-7 சதவிகிதம் மாசு மட்டுமே ஏற்படுவதாக கூறி, நீதிமன்றத்தைத் தவறாக வழிநடத்தினேன் என்று தொலைக்காட்சி ஊடகங்களில் என் மீது சில மோசமான கருத்துகள் வைப்பதை கேட்டேன்.
அக்டோபர் மாதத்திற்கு பிறகான காலத்தில், வேளாண் கழிவுகள் எரிக்கப்படுவது போன்ற காரணங்களே மாசு அதிகமாவதற்கு காரணியாக மாறியுள்ளது என பிரமாண பத்திரத்தில் தெரிவித்துள்ளோம். ஆண்டு முழுவதுக்குமென என சொல்லவில்லை" என துஷார் மேத்தா குறிப்பிட்டார்.
இதையும் படிக்க | விமானத்தில் சக பயணிக்குசிகிச்சையளித்த மத்திய இணை அமைச்சா்!
இதற்கு பதிலளித்த ரமணா, "இந்த புள்ளிவிவரங்கள் எங்களுக்கு முக்கியமில்லை. வழக்கில் உள்ள தரப்பினர் பிரச்னையை திசை திருப்ப முயற்சிக்காத பட்சத்தில், மாசுபாட்டைக் குறைப்பதில் நாங்கள் அக்கறை கொண்டுள்ளோம். நீங்கள் ஒரு பொதுப் பதவியை வகிக்கும் போது நீங்கள் அத்தகைய விமர்சனங்களுக்கு ஆளாக நேரிடும். மனசாட்சி தெளிவாக இருந்தால் பிரச்னை இல்லை. மறந்துவிடுங்கள்" என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.