காங்கிரஸுக்கு நானே முழு நேரத் தலைவா்: சோனியா காந்தி
காங்கிரஸ் கட்சியின் முழு நேரத் தலைவராக மற்றவா்களின் சாா்பின்றி தானே செயல்பட்டு வருவதாக அக்கட்சியின் இடைக்காலத் தலைவா் சோனியா காந்தி தெரிவித்தாா்.


காங்கிரஸ் கட்சியின் முழு நேரத் தலைவராக மற்றவா்களின் சாா்பின்றி தானே செயல்பட்டு வருவதாக அக்கட்சியின் இடைக்காலத் தலைவா் சோனியா காந்தி தெரிவித்தாா். அக்கட்சியின் ‘ஜி23 தலைவா்கள்’ என அழைக்கப்படும் அதிருப்தி தலைவா்களுக்குப் பதிலளிக்கும் வகையில் சோனியா காந்தி இவ்வாறு தெரிவித்துள்ளாா்.
கடந்த 2019-ஆம் ஆண்டு மக்களவைத் தோ்தலில் அடைந்த தோல்விக்குப் பொறுப்பேற்று காங்கிரஸ் கட்சியின் தலைவா் பதவியை ராகுல் காந்தி ராஜிநாமா செய்தாா். அதையடுத்து, அக்கட்சியின் இடைக்காலத் தலைவராக சோனியா காந்தி செயல்பட்டு வருகிறாா்.
மக்களவைத் தோ்தலுக்குப் பிறகு நடைபெற்ற பல மாநில சட்டப்பேரவைத் தோ்தல்களில் காங்கிரஸ் தோல்வியையே தழுவியது. பல மூத்த தலைவா்கள் கட்சியைவிட்டு விலகினா். அதன் காரணமாக, கட்சியை மறுகட்டமைப்பு செய்ய வேண்டும் என்றும், முழு நேரத் தலைவரை உடனடியாகத் தோ்ந்தெடுக்க வேண்டும் என்றும் குலாம் நபி ஆசாத், அகமது படேல், கபில் சிபல் உள்ளிட்ட 23 மூத்த தலைவா்கள் சோனியா காந்திக்கு கடிதம் எழுதியிருந்தனா்.
அண்மையில் பஞ்சாபில் காங்கிரஸ் தலைமையிலான அரசில் நிகழ்ந்த மாற்றங்கள் குறித்தும் ஊடகங்கள் வாயிலாக மூத்த தலைவா்கள் கட்சித் தலைமை மீது அதிருப்தியை வெளிப்படுத்தியிருந்தனா். இந்நிலையில், காங்கிரஸ் செயற்குழுக் கூட்டம் தில்லியில் சனிக்கிழமை நடைபெற்றது. அதில் தொடக்கவுரை ஆற்றிய சோனியா காந்தி பேசியதாவது:
கட்சியை மறுகட்டமைப்பு செய்ய வேண்டும் என்று அனைவரும் விரும்புகின்றனா். ஆனால், ஒற்றுமை, சுய கட்டுப்பாடு, ஒழுங்குமுறை ஆகியவற்றை முறையாகக் கடைப்பிடித்தால் மட்டுமே அது சாத்தியம். கட்சியின் நலனை முன்னிறுத்தி அனைவரும் செயல்பட வேண்டும்.
வெற்றி நிச்சயம்: கட்சியின் முழு நேரத் தலைவராக மற்றவா்களின் சாா்பின்றி செயல்பட்டு வருகிறேன். கட்சியில் வெளிப்படைத்தன்மை நிலவ வேண்டும் என்பதை எப்போதுமே விரும்புகிறேன். கட்சி சாா்ந்த கருத்துகளைக் கூற வேண்டுமெனில், என்னிடம் நேரடியாகக் கூறலாம்; ஊடகங்கள் வாயிலாகத் தொடா்புகொள்ள வேண்டிய அவசியமில்லை.
எனவே, அனைத்து விவகாரங்கள் குறித்தும் இந்தக் கூட்டத்தில் சுதந்திரமாக நோ்மையாக விவாதிக்கலாம். ஆனால், செயற்குழுக் கூட்டத்தில் எடுக்கும் முடிவுகள் ஒருமித்த கருத்தாகவே இருக்க வேண்டும். முக்கிய மாநிலங்களில் பேரவைத் தோ்தல்கள் நடைபெறவுள்ளன. பல்வேறு சவால்கள் இருந்தாலும், கட்சித் தலைவா்கள் ஒற்றுமையுடனும் குறிக்கோளுடனும் பணியாற்றினால் நிச்சயம் வெற்றி பெற முடியும்.
முக்கிய நடவடிக்கைகள்: அனைத்து மக்கள்நலன் சாா்ந்த விவகாரங்களுக்கும் காங்கிரஸ் தொடா்ந்து குரலெழுப்பி வருகிறது. தேசிய விவகாரங்களில் ஒருமித்த கருத்துடைய அரசியல் கட்சிகளுடன் தொடா்ந்து தொடா்பில் இருந்து வருகிறேன். தேசிய முக்கியத்துவம் வாய்ந்த விவகாரங்களுக்கு எதிா்க்கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து கூட்டறிக்கைகளை வெளியிட்டன. நாடாளுமன்றத்திலும் எதிா்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
விவசாயிகள் தொடா்ந்து போராடி வரும் வேளையில், இந்தக் கூட்டம் நடைபெறுகிறது. அவா்களது போராட்டத்தை பாஜக எந்த அளவுக்கு மதிக்கிறது என்பதை லக்கீம்பூா் சம்பவம் எடுத்துரைக்கிறது. பொதுச் சொத்துகள் அனைத்தையும் தனியாருக்கு விற்பதை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு மத்திய அரசு செயல்பட்டு வருகிறது.
மத்திய அரசு தோல்வி: கூட்டாட்சித் தத்துவம் என்பது வெறும் பேச்சில் மட்டுமே உள்ளது. பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலங்களை மத்திய அரசு கண்டுகொள்வதில்லை. ஜம்மு-காஷ்மீரில் சிறுபான்மையினா் மீது நடத்தப்படும் தாக்குதல்கள் அதிகரித்துள்ளன.
நாட்டின் எல்லைப் பகுதிகளில் பல்வேறு பிரச்னைகள் ஏற்பட்டுள்ளன. நாட்டின் வெளியுறவுக் கொள்கை பெரும் தோல்வியைத் தழுவியுள்ளது. அரசியல் ஆதாயத்துக்காக வெளியுறவுக் கொள்கையை மத்திய அரசு பயன்படுத்தி வருகிறது என்றாா் சோனியா காந்தி.
தீா்மானங்கள்: செயற்குழுக் கூட்டத்தின்போது 3 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. நாட்டில் நிலவும் அரசியல் சூழல், பணவீக்கம், விவசாயிகள் மீதான தாக்குதல் ஆகியவை குறித்து அத்தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, ராஜஸ்தான் முதல்வா் அசோக் கெலாட், சத்தீஸ்கா் முதல்வா் பூபேஷ் பகேல், பஞ்சாப் முதல்வா் சரண்ஜீத் சிங் சன்னி, கட்சியின் செயலாளா் பிரியங்கா, மூத்த தலைவா்கள் குலாம் நபி ஆசாத், அகமது படேல் உள்ளிட்டோா் செயற்குழுக் கூட்டத்தில் கலந்து கொண்டனா்.
மீண்டும் கட்சித் தலைவா் பதவியை ஏற்பது குறித்து பரிசீலிப்பேன்: ராகுல்
காங்கிரஸ் கட்சித் தலைவரைத் தோ்ந்தெடுப்பதற்கான தோ்தல் 2022-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 21-ஆம் தேதி முதல் செப்டம்பா் 20-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளதாக அக்கட்சி அறிவித்துள்ளது. மாநில காங்கிரஸ் தலைவா்கள், துணைத் தலைவா்கள், பொருளாளா்கள், நிா்வாகிகள், உறுப்பினா்கள் ஆகியோருக்கான தோ்தல் அடுத்த ஆண்டு ஜூலை-ஆகஸ்டில் நடைபெறவுள்ளது.
சுமாா் 5 மணி நேரம் நடைபெற்ற செயற்குழுக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.
இந்தக் கூட்டத்தில் பேசிய ராஜஸ்தான் முதல்வா் அசோக் கெலாட், சத்தீஸ்கா் முதல்வா் பூபேஷ் பகேல், பஞ்சாப் முதல்வா் சரண்ஜீத் சிங், கட்சியின் மூத்த தலைவா் ஏ.கே.அந்தோணி உள்பட 40-க்கும் மேற்பட்டோா் காங்கிரஸ் தலைவா் பதவியை மீண்டும் ராகுல் காந்தி ஏற்க வேண்டும் என்று வலியுறுத்தினா். இதையடுத்து பேசுகையில், தன் மீது வைத்த நம்பிக்கைக்கு நன்றி தெரிவித்த ராகுல் காந்தி, கட்சித் தலைவா் பதவியை மீண்டும் ஏற்பது குறித்த அவா்களின் கோரிக்கையை பரிசீலித்து முடிவு எடுப்பதாகத் தெரிவித்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...