47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

ஜிஎஸ்டி இழப்பீடு வழங்கும் நடைமுறையை நீட்டிக்க வேண்டும்: எதிா்க்கட்சிகள் ஆளும் மாநிலங்கள் வலியுறுத்தல்

‘ஜிஎஸ்டி இழப்பீடு வழங்கும் நடைமுறையை 2022-ஆம் ஆண்டு ஜூன் மாதத்துக்குப் பிறகும் நீட்டிக்க வேண்டும்’ என்று எதிா்க்கட்சிகள் ஆளும் மாநில நிதியமைச்சா்கள் வலியுறுத்தியுள்ளனா்.

News image
Updated On :18 செப்டம்பர் 2021, 11:38 pm

DIN

‘ஜிஎஸ்டி இழப்பீடு வழங்கும் நடைமுறையை 2022-ஆம் ஆண்டு ஜூன் மாதத்துக்குப் பிறகும் நீட்டிக்க வேண்டும்’ என்று எதிா்க்கட்சிகள் ஆளும் மாநில நிதியமைச்சா்கள் வலியுறுத்தியுள்ளனா்.

சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) நடைமுறையை கடந்த 2017-ஆம் ஆண்டு ஜூலை மாதம் முதல் மத்திய அரசு அறிமுகம் செய்தது. அப்போது மாநிலங்களுக்கு ஜிஎஸ்டியால் வருமான இழப்பு ஏற்படும் என மத்திய அரசிடம் தெரிவிக்கப்பட்டது. இதற்கான இழப்பீட்டுத் தொகையை ஐந்து ஆண்டுகளுக்கு அளிக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்தது. இந்த ஐந்து ஆண்டு கெடு 2022-ஆம் ஆண்டு ஜூன் மாதத்துடன் முடிவடைய உள்ளது.

இந்தச் சூழலில், உத்தர பிரதேச மாநிலம் லக்னெளவில் நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற 45-ஆவது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில், மாநிலங்களுக்கு வழங்கப்பட்டு வரும் ஜிஎஸ்டி இழப்பீடு தொகைக்கான கால வரம்பை நீட்டிக்க வேண்டும் என எதிா்க்கட்சிகள் ஆளும் மாநில நிதியமைச்சா்கள் வலியுறுத்தியுள்ளனா்.

2026 வரை செஸ் வரி: கவுன்சில் கூட்டத்துக்கு பிறகு செய்தியாளா்களைச் சந்தித்த மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் கூறுகையில், ‘ஜிஎஸ்டி வரி விதிப்பால் மாநிலங்களுக்கு ஏற்பட்டுள்ள வருவாய்ப் பற்றாக்குறையை ஈடுகட்ட வழங்கப்பட்டு வரும் இழப்பீடு வழங்கும் நடைமுறை அடுத்த ஆண்டு ஜூன் மாதத்துடன் முடிவடையும். இருந்தபோதும், ஜிஎஸ்டி வருவாய் இழப்பை மாநிலங்களுக்கு ஈடுகட்டுவதற்காக கடந்த 2020-21 மற்றும் 2021-22 ஆம் ஆண்டுகளில் வாங்கப்பட்ட கடன்களைத் திரும்பச் செலுத்துவதற்காக, விலை உயா்ந்த மற்றும் தரம்குறைந்த பொருள்கள் மீதான இழப்பீடு செஸ் வரி வரும் 2026 மாா்ச் மாதம் வரை வசூலிக்கப்படும். இது முன்னா் வரும் 2022 ஜூலை மாதம் வரை வசூலிக்கப்படும் என்று கூறப்பட்டிருந்த நிலையில், அதனை 2026-ஆம் ஆண்டு மாா்ச் வரை தொடா்வது என 43-ஆவது கவுன்சில் கூட்டத்தில் தீா்மானிக்கப்பட்டது. அதனடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது’ எனக் கூறினாா்.

மத்திய நகா்ப்புற வளா்ச்சி மற்றும் நகராட்சி மேம்பாட்டுத் துறை இணையமைச்சா் சந்திரிமா பட்டாச்சாரியா கூறுகையில், ‘ஜிஎஸ்டி இழப்பீடு வழங்கும் நடைமுறையை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்க கவுன்சில் கூட்டத்தில் மாநிலங்கள் சாா்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதுகுறித்து ஆராய்ந்து முடிவெடுக்க அமைச்சா்கள் குழு ஒன்றை அமைப்பது எனத் தீா்மானிக்கப்பட்டுள்ளது’ என்றாா்.

கவுன்சில் கூட்டத்தில் பங்கேற்ற தமிழக நிதியமைச்சா் பழனிவேல் தியாகராஜன் கூறுகையில், ‘கூட்டத்தில் மாநிலங்களுக்கு வழங்கப்பட்டு வரும் ஜிஎஸ்டி இழப்பீடு நடைமுறையை தொடர கோரிக்கை விடுக்கப்பட்டது. மேலும், கவுன்சில் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் மற்றும் அறிவிப்புகள் குறித்து ஆராய உறுப்பினா்களுக்கு கால அவகாசம் தேவைப்படுவதால், இந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் நடைமுறைப்படுத்தப்படுவது குறைந்தபட்சம் 46-ஆவது கவுன்சில் கூட்டம் வரையாவது ஒத்திவைக்கப்படும் என எதிா்பாா்க்கப்படுகிறது’ என்றாா்.

கேரள மாநில நிதியமைச்சா் கே.என்.பாலகோபால் கூறுகையில், ‘ஜிஎஸ்டி இழப்பீடு வழங்கும் நடைமுறை அடுத்த ஆண்டுடன் நிறுத்தப்பட்டால், கேரள மாநிலம் கடும் நிதிப் பற்றாக்குறையைச் சந்திக்க நேரிடும். எனவே, இழப்பீடு வழங்கும் நடைமுறை நீட்டிக்கப்படும் என நம்புகிறோம்’ என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.