தனது சொந்தக் கட்சியை ஆரம்பிப்பதற்காக காங்கிரஸின் முதுகில் குத்திய சரத் பவார், எங்கள் குருவாக இருக்க முடியாது என்று சிவசேனை மூத்த தலைரும் முன்னாள் அமைச்சருமான அனந்த் கீதே தெரிவித்தார்.
மகாராஷ்டிரத்தில் சிவசேனையும் பாஜகவும் கடந்த 2014 முதல் 2019 வரை கூட்டணி அமைத்து ஆட்சி அமைத்திருந்தன. 2019 சட்டப் பேரவைத் தேர்தலுக்குப் பிறகு இரு கட்சிகளுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதையடுத்து காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகளின் ஆதரவுடன் சிவசேனை ஆட்சி அமைத்தது.
தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் இந்த அரசை உருவாக்கியவராக கருதப்படும் நிலையில், சிவசேனை மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான அனந்த் கீதே தனது சொந்த ஊரான ராய்கட் நகரில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் பேசியது:
சரத் பவார் எப்போதும் எங்கள் தலைவராக இருக்க முடியாது. மகாராஷ்டிர அரசு என்பது ஓர் உடன்பாடு மட்டும்தான். சரத் பவாரை யார் வேண்டுமானாலும் புகழ்ந்து கொள்ளட்டும். எங்களுக்கு அவர் குருவாக இருக்க முடியது. எங்கள் குரு, மறைந்த பால் தாக்கரேதான். இந்த ஆட்சி தொடரும். அதேவேளையில் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸýடனான கூட்டணியில் இருந்து எங்கள் கட்சி பிரிந்தால் நாங்கள் சிவசேனையில்தான் இருப்போம். கட்சியின் கட்டளைக்கு நாங்கள் கட்டுப்படுவோம்.
சிவசேனை தலைமையிலான அரசு தொடர்பான எனது கருத்துகளில் எந்த உள்நோக்கமும் இல்லை. இந்த ஆட்சி தொடரவே விரும்புகிறேன்.
காங்கிரஸின் முதுகில் குத்திய பிறகே சரத் பவார் தனது சொந்தக் கட்சியை ஆரம்பித்தார். காங்கிரஸýம் தேசியவாத காங்கிரஸýம் ஒரே கட்சியாக இருக்க முடியாதபோது, காங்கிரஸ் கொள்கைகளை சிவசேனையாலும் முழுமையாக ஏற்றுக் கொள்ள முடியாது. காங்கிரஸýக்கும் தேசியவாத காங்கிரஸýக்கும் இடையே எப்போதும் சுமுக உறவு இருந்ததில்லை என்றார்.
இந்நிலையில், அனந்த் கீதேவின் கருத்து தொடர்பாக சிவசேனையின் செய்தித் தொடர்பாளரும் மூத்த தலைவருமான சஞ்சய் ரௌத்திடம் செய்தியாளர்கள் தில்லியில் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்து அவர் கூறியது:
அனந்த் கீதேவின் கருத்து குறித்து எனக்குத் தெரியாது. மகாராஷ்டிரத்தில் மூன்று கட்சிகள் இணைந்து ஆட்சியமைத்துள்ளன. சரத் பவார் இந்த நாட்டின் தலைவர்.
சரத் பவார், உத்தவ் தாக்கரே, காங்கிரஸ் இணைந்ததால் மகாராஷ்டிரத்தில் ஆட்சி அமைந்துள்ளது. இந்த ஆட்சி ஐந்தாண்டுகளுக்குத் தொடரும். ஒட்டுமொத்த மகாராஷ்டிரமும் இதை ஏற்றுக் கொண்டுள்ளது என்றார்.
அண்மையில் காங்கிரஸின் நிலை குறித்து சரத் பவார் தெரிவித்த கருத்து பரபரப்பை ஏற்படுத்தியது. வறுமை நிலைக்கு வந்துவிட்ட ஜமீன்தாரைப் போல காங்கிரஸ் இருப்பதாக அவர் கூறியிருந்தார். தலைமை விஷயத்தைப் பொருத்தவரை எந்த யோசனையையும் கேட்க அக்கட்சி தயாராக இல்லை என்றும் அவர் தெரிவித்திருநந்தார்.
இத்தாலியில் பிறந்தவரான சோனியா காந்திக்கு இந்திய தேசிய காங்கிரஸின் தலைமைப் பதவியை வகிக்கும் உரிமை இல்லை என்று, சரத் பவார், பி.ஏ.சங்மா, தாரிக் அன்வர் ஆகியோர் கடந்த 1999-இல் போர்க்கொடி உயர்த்தினர். இதையடுத்து காங்கிரஸில் இருந்து நீக்கப்பட்ட அவர்கள் தேசியவாத காங்கிரûஸ உருவாக்கினர்.
எனினும், காங்கிரஸ் தலைமையில் மத்தியில் அமைந்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசில் தேசியவாத காங்கிரஸ் பங்கேற்றது. சரத் பவார் வேளாண் துறை அமைச்சராகப் பதவி வகித்தார். மகாராஷ்டிர மாநிலத்திலும், காங்கிரஸýம் தேசியவாத காங்கிரஸýம் 2014 வரை ஆட்சியைப் பகிர்ந்திருந்தன. அந்த ஆண்டு நடைபெற்ற பேரவைத் தேர்தலில் இக்கட்சிகளின் கூட்டணியை பாஜக - சிவசேனை கூட்டணி தோற்கடித்து, மாநிலத்தில் ஆட்சியைப் பிடித்தது.
2014-ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு மத்தியில் அமைந்த தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசில் அனந்த் கீதே கனரகத் தொழில் துறை அமைச்சராகப் பதவி வகித்தார்.