நாட்டில் கரோனா குறைகிறதா? குறைவதுபோல காட்டப்படுகிறதா?

நாட்டில் நாள்தோறும் மத்திய அரசு வெளியிட்டு வரும் கரோனா புள்ளி விவரம், கரோனா பேரிடரிலிருந்து நாடு மீண்டு வருவதாகக் காட்டுகிறது.
நாட்டில் கரோனா குறைகிறதா? குறைவதுபோல காட்டப்படுகிறதா?
நாட்டில் கரோனா குறைகிறதா? குறைவதுபோல காட்டப்படுகிறதா?


புது தில்லி: நாட்டில் நாள்தோறும் மத்திய அரசு வெளியிட்டு வரும் கரோனா புள்ளி விவரம், கரோனா பேரிடரிலிருந்து நாடு மீண்டு வருவதாகக் காட்டுகிறது.

செவ்வாயன்று, நாட்டில் புதிதாக 25,467 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து இதுவரை கரோனா உறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கை 3.24 கோடியாக உயர்ந்தது.

இந்த புள்ளி விவரங்கள் வேண்டுமென்றால், நாட்டில் கரோனா பாதிப்பு குறைந்து வருவதாகக் காட்டினாலும், ஒட்டுமொத்த புள்ளி விவரத்தையும் உற்றுநோக்கினால், இது குறையவில்லை, குறைத்துக் காட்டப்படுவது போல தெரிகிறது. காரணம், கேரளத்தில், நாள்தோறும் மேற்கொள்ளும் கரோனா பரிசோதனைகள் குறைந்திருப்பதுதான்.

நாட்டில் கடந்த 10 நாள்களாக கரோனா பாதிப்பு 40 ஆயிரத்துக்கும் கீழ் குறைந்துள்ளது. திங்கள் மற்றும் செவ்வாயில் இது 25 ஆயிரமாக உள்ளது. கடந்த நாள்களோடு ஒப்பிடுகையில் இது 19 சதவீதம் குறைவாகும்.

கடந்த இரண்டு மாதங்களாக நாட்டிலேயே கேரளத்தில்தான் அதிக கரோனா பாதிப்பு பதிவாகிவந்தது. ஆனால் கடந்த இரண்டு வாரங்களாக, இது குறைந்துள்ளது. கடந்த 7 நாள்களில் சராசரியாக 14 சதவீதம் புதிய பாதிப்பு குறைந்துள்ளது.

கேரளத்தில் திங்களன்று 10 ஆயிரம் பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டது. இது அதற்கு முந்தைய நாள் 17 ஆயிரமாக இருந்தது.

ஆனால், மாநிலத்தின் கரோனா நிலவரத்தை தீவிரமாக கண்காணித்து வரும் சுகாதாரத்துறை நிபுணர் ரிஜோ எம் ஜான், மாநிலத்தில் கரோனா நிலவரத்தை உன்னிப்பாக கவனித்ததில், மாநிலத்தில் நாள்தோறும் மேற்கொள்ளப்படும் கரோனா பரிசோதனைகள் கடந்த 2 வாரங்களில் 35 சதவீதம் அளவுக்குக் குறைந்திருப்பதை சுட்டிக்காட்டியுள்ளார்.

அதேவேளையில், கரோனா பரிசோதனை செய்பவர்களில், தொற்று உறுதி செய்யப்படுவர்களின் விகிதம் 12 சதவீதத்திலிருந்து 16 சதவீதமாக உயர்ந்திருப்பதையும் அவர் உறுதி செய்துள்ளார்.

நாட்டில் கரோனா பாதிப்பு அதிகமாக இருக்கும் போது, அதனைக் குறைக்க, இது நிச்சயம் ஒரு சிறந்த வழியாக இருக்காது என்கிறார் ஜான்.

இந்த புள்ளி விவரத்தை மத்திய சுகாதாரத் துறையும் ஒப்புக் கொண்டுள்ளது. அதாவது, மத்திய சுகாதாரத் துறையின் மூத்த அதிகாரி ஒருவர், நாட்டில் 14 மாவட்டங்களில் கரோனா உறுதி செய்யப்படும் விகிதம் 10 சதவீதத்துக்கும் மேல் உயர்ந்திருப்பதாகக் கூறுகிறார்.

இந்தியாவின் 40 மாவட்டங்களில் கரோனா உறுதி செய்யப்படும் விகிதம் சுமார் 10 சதவீதமாக உள்ளது, குறிப்பாக நாட்டில் மொத்த பாதிப்பில் மூன்றில் ஒரு பங்கு கேரளத்தில் பதிவாவதாகவும் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இது நல்லது அல்ல என்றும் அதிகாரிகள் கூறுகிறார்கள்.

கேரளத்தில் கரோனா அதிகரித்த நிலையில், அதனைக் கட்டுப்படுத்த மத்திய அரசு அனுப்பிய உயர்நிலைக் குழுவினர், ஒரு முக்கிய விஷயத்தை சுட்டிக்காட்டினர். அதாவது கரோனா உறுதி செய்யப்படுபவருடன் இருப்பவர்களைக் கண்டறிந்து அவர்களுக்கு பரிசோதனை செய்வதில் மாநிலம் பின்தங்கியிருப்பதுதான் அது.

அதன்படி, கேரளத்தில் தற்போது கரோனா பாதித்த 90 சதவீத நோயாளிகள் வீட்டில்தான் உள்ளனர். ஆனால், அவர்களுடன் இருப்பவர்களைக் கண்டறிந்து கரோனா பரிசோதனை செய்வது 1க்கு 1.5 என்ற அளவில்தான் உள்ளது. ஆனால், ஒருவருக்கு கரோனா உறுதியானால், அவர்களுடன் தொடர்பில் இருந்த 1க்கு 20 என்ற அளவில் கரோனா பரிசோதனை செய்யப்பட வேண்டும் என்பதுதான் பரிந்துரை.

கரோனா உறுதியானவருடன் தொடர்பில் இருந்தவர்களைக் கண்டறிவதில் காணப்படும் சுணக்கமே, போதுமான அளவில் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுவதில்லை என்பதற்கான ஆதாரமாக விளங்குகிறது. அதில்லாமல், கரோனா பரிசோதனை மேற்கொள்ளும் எண்ணிக்கை குறைந்திருப்பதன் மூலம், மாநிலத்தில் கரோனா பேரிடர் மேலும் சிக்கலுக்கே இட்டுச் செல்லும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com