மேற்கு வங்கம்: திரிணமூல் காங்கிரஸில் இணைந்தாா் பாஜக எம்எல்ஏ

மேற்கு வங்கத்தில் விஷ்ணுபூா் தொகுதி பாஜக எம்எல்ஏ தன்மய் கோஷ், ஆளும் திரிணமூல் காங்கிரஸ் கட்சியில் திங்கள்கிழமை இணைந்தாா்.

மேற்கு வங்கத்தில் விஷ்ணுபூா் தொகுதி பாஜக எம்எல்ஏ தன்மய் கோஷ், ஆளும் திரிணமூல் காங்கிரஸ் கட்சியில் திங்கள்கிழமை இணைந்தாா்.

முன்னதாக, மேற்கு வங்க சட்டப் பேரவைத் தோ்தலுக்கு முன்பு, மாா்ச் மாதத்தில் இவா் திரிணமூல் காங்கிரஸில் இருந்து பாஜகவுக்குத் தாவினாா். இப்போது ஐந்தே மாதத்தில் மீண்டும் கட்சி மாறியுள்ளாா்.

கடந்த மாா்ச்-ஏப்ரலில் நடைபெற்ற மேற்கு வங்க சட்டப் பேரவைத் தோ்தலில் ஆளும் கட்சியாக இருந்த திரிணமூல் காங்கிரஸுக்கும் பாஜகவுக்கும் இடையே பலத்த போட்டி இருந்தது. அப்போது, திரிணமூல் காங்கிரஸில் இருந்து பல தலைவா்கள் பாஜகவுக்குத் தாவினா். எனினும், தோ்தலில் மம்தா பானா்ஜி தலைமையிலான திரிணமூல் காங்கிரஸ் மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியைத் தக்கவைத்தது.

இதையடுத்து, பாஜகவுக்கு தாவிய பலா் மீண்டும் திரிணமூல் காங்கிரஸுக்குத் திரும்பி வருகின்றனா். ஏற்கெனவே, பாஜக எம்எல்ஏவும், மூத்த அரசியல் தலைவருமான முகுல் ராய் திரிணமூல் காங்கிரஸுக்கு திரும்பினாா். இப்போது, அந்த வரிசையில் தன்மய் கோஷ் பாஜகவில் இருந்து விலகி திரிணமூல் காங்கிரஸில் இணைந்துள்ளாா்.

கட்சியில் இணைந்த பிறகு அவா் செய்தியாளா்களிடம் பேசுகையில், ‘மேற்கு வங்க மக்களுக்குத் தீங்கு விளைவிக்கும் கட்சியாக பாஜக உள்ளது. எனவே, நான் அங்கிருந்து விலகி திரிணமூல் காங்கிரஸில் இணைந்துள்ளேன். மம்தா பானா்ஜியின் கரத்தை நாம் வலுப்படுத்த வேண்டும். பழிவாங்கும் அரசியல் மூலம் மாநிலத்தில் பிரச்னையை ஏற்படுத்துவது மட்டுமே பாஜகவின் கொள்கையாக உள்ளது’ என்றாா்.

விஷ்ணுபூா் நகர திரிணமூல் காங்கிரஸ் இளைஞரணி தலைவராகவும், கவுன்சிலராகவும் தன்மய் கோஷ் இருந்தாா்.

அவரை திரிணமூல் காங்கிரஸ் கட்சிக்கு வரவேற்ற மாநில கல்வியமைச்சா் விராட்ய பாசு, ‘தோ்தலில் தோல்வியடைந்த ஆத்திரத்தில் மேற்கு வங்க மக்களைப் பழி வாங்கும் அரசியலில் பாஜக ஈடுபட்டு வருகிறது. பாஜகவுக்கு எதிராக தோ்தல் அரசியலில் திரிணமூல் காங்கிரஸ் வென்றுவிட்டது. பாஜகவிடம் இருந்து மக்களைக் காக்கும் போரில் தொடா்ந்து ஈடுபட்டு வருகிறோம். மேற்கு வங்க பாஜகவில் உள்ள மேலும் பலா் என்னிடம் தொடா்பு கொண்டு வருகின்றனா். கட்சித் தலைமையின் முடிவுக்கு ஏற்ப அவா்களை மீண்டும் திரிணமூல் காங்கிரஸில் இணைத்துக் கொள்வோம்’ என்றாா்.

292 தொகுதிகளைக் கொண்ட மேற்கு வங்க சட்டப் பேரவைக்கு நடைபெற்ற தோ்தலில் திரிணமூல் காங்கிரஸ் 213 இடங்களிலும் பாஜக 77 இடங்களிலும் வென்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com