தில்லி காற்று மாசு: மத்திய, மாநில அரசுகளுக்கு 24 மணி நேரம் கெடு விதித்த உச்ச நீதிமன்றம்

தொழிற்சாலைகள் மற்றும் வாகனங்களிலிருந்து வெளிப்படும் காற்று மாசுவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க மத்திய, மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் 24 மணி நேரம் கெடு விடுத்துள்ளது.
உச்ச நீதிமன்றம்
உச்ச நீதிமன்றம்

தில்லி காற்று மாசு குறித்து தொடர் அதிருப்தி தெரிவித்துவரும் உச்ச நீதிமன்றம்,  தொழிற்சாலைகள் மற்றும் வாகனங்களிலிருந்து வெளிப்படும் காற்று மாசுவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க மத்திய, மாநில அரசுகளுக்கு 24 மணி நேரம் கெடு விடுத்துள்ளது. அரசு விளக்கம் அளித்தபோதிலும், தில்லி காற்று மாசு தொடர்ந்து அதிகரித்துவருகிறது என உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.

கடந்த சில வாரங்களாக எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து அதிருப்தி தெரிவித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி. ரமணா, "எதுவுமே நடக்கவில்லை. மாசு அதிகரித்துக்கொண்டே போகிறது. நேரம்தான் வீணாகிறது என்று உணர்கிறோம்" என்றார்.

தேசிய தலைநகர் மற்றும் அதை சுற்றியுள்ள நகரங்களில் ஏற்பட்ட காற்று மாசுபாடு குறித்து தொடர்ந்து நான்காவது வாரமாக உச்ச நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றுவருகிறது.

கடந்த வாரம், தீபாவளிக்கு பிறகு தில்லி காற்று மாசு மோசமான நிலைக்கு மாறியது. தொழிற்சாலைகள் மற்றும் வாகனங்களிலிருந்து வெளிப்படும் காற்று மாசே இதற்கு காரணம் என மத்திய அரசு விளக்கம் தெரிவித்தது. அதேபோல், வேளாண் கழிவுகள் எரிக்கப்படுவதும் இதற்கு காரணம் என தெரிவிக்கப்பட்டது.

ஒரு மாத காலமான பிறகும் கூட, தில்லி காற்று மாசுபாட்டால் தவித்துவருகிறது. இதற்கு யார் காரணம் என விவாதம் எழுந்துள்ள நிலையில், மத்திய, மாநில அரசுகள் ஒன்றின் மீது ஒன்று பழி போட்டு கொண்டுள்ளது.

இதனிடையே, தில்லி பள்ளிகள் திறக்கபட்டதற்கு கடுமையாக விமர்சனங்களை மேற்கொண்டுள்ள உச்ச நீதிமன்றம், "மூன்று வயது மற்றும் நான்கு வயது குழந்தைகள் பள்ளிக்குச் செல்கிறார்கள். ஆனால் பெரியவர்கள் வீட்டிலிருந்து வேலை செய்கிறார்கள். உங்கள் அரசாங்கத்தை நிர்வகிக்க ஒருவரை நியமிப்போம்" என தெரிவித்தது.

தில்லி அரசின் சார்பாக ஆஜரான வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி, "பள்ளிகளில், மாணவர்கள் கற்றல் திறனை இழந்துள்ளனர் என்ற விவாதங்கள் நடைபெற்றுவருகிறது. ஆன்லைனுக்கான விருப்பம் உள்ளிட்ட நிபந்தனைகளுடன் பள்ளியை மீண்டும் திறக்கிறோம்" என பதில் அளித்தார்.

இதற்கு பதிலளித்த என்.வி. ரமணா, "நீங்கள் விருப்பமாக விட்டுவிட்டீர்கள் என்று சொல்கிறீர்கள். ஆனால் யார் வீட்டில் உட்கார விரும்புகிறார்கள்? எங்களுக்கும் குழந்தைகள், பேரக்குழந்தைகள் உள்ளனர். தொற்றுநோயிலிருந்து அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகள் எங்களுக்குத் தெரியும். 

நடவடிக்கை எடுக்காவிட்டால் நாளை கடும் நடவடிக்கை எடுப்போம். நாங்கள் உங்களுக்கு 24 மணிநேரம் தருகிறோம். பள்ளிகள் மற்றும் அலுவலகங்களில் தில்லி அரசு என்ன செய்கிறது என்பது குறித்த வழிமுறைகளைப் பெறுங்கள்" என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com