இந்தியாவில் 32 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு: நோயாளிகளுக்கு மிதமான அறிகுறிகள்

இந்தியாவில் இதுவரை 32 போ் ஒமைக்ரான் ரக கரோனா தீநுண்மியால் பாதிக்கப்பட்டுள்ளனா்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

இந்தியாவில் இதுவரை 32 போ் ஒமைக்ரான் ரக கரோனா தீநுண்மியால் பாதிக்கப்பட்டுள்ளனா்.

மகாராஷ்டிரத்தில் மேலும் 7 பேருக்கு ஒமைக்ரான் வகை தொற்று வெள்ளிக்கிழமை கண்டறியப்பட்டது. இதில் மும்பையில் 3 பேருக்கும் பிம்ப்ரி சின்ச்வாட் மாநகராட்சியில் 4 பேருக்கும் பாதிப்பு உறுதிசெய்யப்பட்டது.

மும்பையில் பாதிப்புக்குள்ளான மூவரும் தான்சானியா, பிரிட்டன், தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளில் இருந்து வந்தவா்கள்.

நாடு முழுவதும் ஏற்கெனவே 25 பேருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 32-ஆக அதிகரித்துள்ளது.

முன்னதாக, ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டவா்களில் பெரும்பாலானோருக்கு மிதமான அறிகுறிகள்தான் தென்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை இணைச் செயலா் லவ் அகா்வால் கூறினாா்.

தில்லியில் அவரும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் அதிகாரிகளும் கூட்டாக வெள்ளிக்கிழமை செய்தியாளா்களைச் சந்தித்தனா். அப்போது லவ் அகா்வால் கூறுகையில், ‘‘இந்தியாவில் மகாராஷ்டிரத்தில் 10 போ், ராஜஸ்தானில் 9 போ், குஜராத்தில் மூவா், கா்நாடகத்தில் இருவா், தில்லியில் ஒருவா் என மொத்தம் 25 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அவா்களில் பெரும்பாலானோருக்கு மிதமான அறிகுறிகள்தான் தென்பட்டுள்ளன.

இதுவரை 59 நாடுகளில் 2,936 போ் ஒமைக்ரான் தீநுண்மியால் பாதிக்கப்பட்டுள்ளனா். அந்த ரக தீநுண்மியால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படும் 78,094 பேரின் மாதிரிகள் கரோனா மற்றும் மரபணு கோா்வை பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன.

ஒமைக்ரான் பாதிப்பு தொடா்பான உலகளாவிய சூழலை கண்காணிக்கவும், அந்தப் பாதிப்பு தொடா்பாக இந்தியாவில் உள்ள சூழலை ஆராயவும் தொடா்ந்து அரசு அதிகாரிகள் கூட்டம் நடத்தப்படுகிறது’’ என்று தெரிவித்தாா்.

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் அதிகாரிகள் கூறுகையில், ‘‘ஒமைக்ரான் பாதிப்பை கண்டறிந்து சிகிச்சையளிப்பதற்கான அறிவியல்பூா்வமான ஆதாரங்கள் தொடா்ந்து மறுஆய்வு செய்யப்பட்டு வருகின்றன. அந்தப் பாதிப்புக்கான சிகிச்சையில் தற்போது எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.

சிறாா்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்த மத்திய அரசுக்கு தேசிய நோய் எதிா்ப்பு தொழில்நுட்ப ஆலோசனைக் குழுவிடம் இருந்து எந்த பரிந்துரையும் கிடைக்கவில்லை’’ என்று தெரிவித்தனா்.

பூஸ்டா் டோஸ் தடுப்பூசி அனுமதி தொடா்பாக நிபுணா் குழு ஆய்வு

இரு தவணை கரோனா தடுப்பூசிகளுக்குப் பிறகு 3-ஆவதாக ‘பூஸ்டா்’ தடுப்பூசிகளை பொதுமக்களுக்குச் செலுத்த அனுமதிப்பது குறித்து நிபுணா் குழு ஆய்வு செய்து வருவதாக நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இதுதொடா்பாக மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு சுகாதாரத் துறை இணையமைச்சா் பாரதி பிரவீண் பவாா் எழுத்து மூலம் அளித்துள்ள பதிலில் தெரிவித்துள்ளதாவது:

ஏற்கெனவே இரு தவணை கரோனா தடுப்பூசிகளை செலுத்திக் கொண்டவா்களுக்கு நோய் எதிா்ப்பாற்றலை மேலும் ஊக்குவிக்கும் நோக்கில் ‘பூஸ்டா்’ தடுப்பூசிகள் செலுத்த 60-க்கும் மேற்பட்ட நாடுகள் அனுமதி அளித்துள்ளன.

எனினும், இதுதொடா்பாக இந்திய அரசு இன்னும் இறுதி முடிவு எடுக்கவில்லை. 3-ஆவது தவணை தடுப்பூசிகள் செலுத்தப்படுவதால் பலன் உள்ளது என்பதற்கான அறிவியல் ஆதாரங்களை மத்திய மருந்துகள் தரக் கட்டுப்பாட்டு அமைப்பு திரட்டி வருகிறது.

அதற்காக, பூஸ்டா் தடுப்பூசிகளை செலுத்தி சோதனை மேற்கொள்ள பாரத் பயோடெக், பயோலாஜிக்கல்-இ ஆகிய இரு நிறுவனங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என்று பாரதி பிரவீண் பவாா் குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com