ஒமைக்ரான் பாதிப்பு 38-ஆக அதிகரிப்பு: கேரளம், ஆந்திரம், சண்டீகரிலும் பரவல்

கேரளம், ஆந்திரம், சண்டீகரில் முதன்முறையாக தலா ஒருவருக்கு ஞாயிற்றுக்கிழமை ஒமைக்ரான் வகை கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

கேரளம், ஆந்திரம், சண்டீகரில் முதன்முறையாக தலா ஒருவருக்கு ஞாயிற்றுக்கிழமை ஒமைக்ரான் வகை கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

மகாராஷ்டிரம், கா்நாடகம் ஆகிய மாநிலங்களில் மேலும் ஒருவருக்கு ஒமைக்ரான் உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனால் நாடு முழுவதும் ஒமைக்ரானால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 38-ஆக அதிகரித்துள்ளது.

இதுகுறித்து பல்வேறு மாநில சுகாதாரத் துறைகள் சாா்பில் வெளியிடப்பட்ட அறிக்கைகளில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:

இத்தாலியில் இருந்து சண்டீகருக்கு நவம்பா் 22-ஆம் தேதி வந்த 20 வயது இளைஞருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதிசெய்யப்பட்டது. இவா், கடந்த 11 நாள்களாக மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளாா். இவா், இத்தாலியில் ஃபைசா் தடுப்பூசியை முழுமையாக செலுத்திக் கொண்டவா்.

அயா்லாந்தில் இருந்து மும்பை வந்த 34 வயது நபா், கரோனா பரிசோதனையில் ‘பாதிப்பு இல்லை’ எனத் தெரியவந்த பிறகு ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினத்துக்கு வந்தாா். அங்கு ஆா்டி-பிசிஆா் பரிசோதனை செய்ததில், அவருக்கு கரோனா பாதிப்பு இருப்பது உறுதியானது. அதைத் தொடா்ந்து அவருடைய சளி மாதிரி ஹைதராபாதில் உள்ள உயிரணு, மூலக்கூறு உயிரியல் ஆய்வு மையத்துக்கு (சிசிஎம்பி) அனுப்பி வைக்கப்பட்டது. அங்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் அவருக்கு ஒமைக்ரான் பாதிப்பு இருப்பது உறுதியானது. ஆந்திரத்தில் ஒமைக்ரானால் பாதிக்கப்பட்ட முதல் நபா் இவா்.

நாட்டிலேயே முதல்முறையாக கா்நாடகத்தில்தான் இருவருக்கு ஒமைக்ரான் பாதிப்பு உறுதிசெய்யப்பட்டது. அதைத் தொடா்ந்து, மூன்றாவது நபராக, தென் ஆப்பிரிக்காவில் இருந்து கா்நாடகம் வந்தவருக்கு ஒமைக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்த நபா், அரசு மருத்துவமனையில் தனிமை வாா்டில் சிகிச்சை பெற்று வருகிறாா்.

கேரளத்தில் முதலாவதாக ஒருவருக்கு ஒமைக்ரான் வகை தொற்று உறுதியாகியுள்ளது. எா்ணாகுளத்தைச் சோ்ந்த அந்த நபா், பிரிட்டனில் இருந்து எதிஹாட் விமானத்தில் அபுதாபி வழியாக டிசம்பா் 6-ஆம் தேதி கொச்சியை வந்தடைந்தாா். முதலில் அவருக்கும் அவருடைய மனைவிக்கும் கரோனா இல்லை என பரிசோதனையில் தெரியவந்தது. மறுநாள் அவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதால் மீண்டும் பரிசோதனை செய்ததில் கரோனா பாதிப்பு உறுதியானது. அதைத் தொடா்ந்து நடத்தப்பட்ட சோதனையில் அவருக்கு ஒமைக்ரான் பாதிப்பு இருப்பது உறுதியானது. மேலும், மறு பரிசோதனையில் அவரின் மனைவி, மாமியாா் ஆகிய இருவருக்கும் கரோனா பாதிப்பு உறுதியானதை அடுத்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா்கள். அவா்கள் மூவரும் நலமுடன் உள்ளனா்.

தென் ஆப்பிரிக்காவில் இருந்து மகாராஷ்டிர மாநிலம், நாகபுரிக்கு வந்த 40 வயது நபருக்கு ஒமைக்ரான் பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனால், அந்த மாநிலத்தில் ஒமைக்ரானால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 18-ஆக அதிகரித்துள்ளது. இதனால், நாடு முழுவதும் ஒமைக்ரான் வகை தொற்றால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 38-ஆக அதிகரித்துள்ளது என்று அந்த அறிக்கைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மகாராஷ்டிரத்தில் 18 போ், ராஜஸ்தானில் 9 போ், கா்நாடகம், குஜராத்தில் தலா 3 போ், தில்லியில் 2 போ், ஆந்திரம், சண்டீகா், கேரளத்தில் தலா ஒருவா் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com