சிபிஐ, அமலாக்கத்துறைக்காக காத்துக்கொண்டிருக்கிறோம்: ஐடி சோதனையை விளாசிய அகிலேஷ்

தேர்தலுக்கு அரசியல் கட்சிகள் தயாராகி வரும் நிலையில், உத்தரப் பிரதேச முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவுக்கு நெருக்கமானவர்களின் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியுள்ளனர்.
உத்தரப்பிரதேச முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ்
உத்தரப்பிரதேச முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ்

உத்தரப் பிரதேசம் உள்பட ஏழு மாநிலங்களில் அடுத்தாண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளது. அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த உத்தரப் பிரதேசத்தில் ஆளும் பாஜகவுக்கு சமாஜ்வாதி கட்சி கடும் சவாலாக மாறியுள்ளது. பிராந்திய தொலைக்காட்சிகள் நடத்திய கருத்துக்கணிப்பில், 150க்கும் மேற்பட்ட தொகுதிகளில் சமாஜ்வாதி கட்சி வெற்றிபெரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தலுக்கு அரசியல் கட்சிகள் தயாராகி வரும் நிலையில், உத்தரப் பிரதேச முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவுக்கு நெருக்கமானவர்களின் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியுள்ளனர். சமாஜ்வாதி கட்சியின் செய்தித் தொடர்பாளர் ராஜீவ் ராய், அகிலேஷ் யாதவின் தனிச் செயலாளர் ஜைனேந்திர யாதவ், கட்சியின் முக்கிய முக்கிய பிரமுகர் மனோஜ் யாதவ் ஆகியோரின் வீட்டில் இன்று காலை வருவான வரி சோதனை நடைபெற்றுள்ளது.

வாரணாசியிலிருந்து வந்த வருமான வரித்துறையினர், கிழக்கு உத்தரப் பிரதேசம் மௌ மாவட்டத்தில் உள்ள ராயின் வீட்டில் சோதனை நடத்தினர். ராயுக்கு சொந்தமான குழுமம், கர்நாடகாவில் பல்வேறு கல்வி நிலையங்களை நடத்திவருகிறது.

இதை கடுமையாக விமரிசித்துள்ள அகிலேஷ் யாதவ், "தேர்தல் நெருங்கும்போது. இதெல்லாம் நடக்க தொடங்கிவிடும் என திரும்பத் திரும்ப சொல்லி வருகிறேன். தற்போது, வருமான வரித்துறையினர்தான் வந்துள்ளார்கள், பின்னர், அமலாக்கத்துறையினர், சிபிஐ அலுவலர்கள் வருவார்கள். 

ஆனால், சமாஜ்வாதி கட்சி நின்றுவிடாது. அதன் வேகம் நிற்காது. உத்தரப்பிரதேசத்திலிருந்து பாஜக துடைத்து எறியப்படும். மாநில மக்களை ஏமாற்ற முடியாது. ஒரு மாதத்திற்கு முன்பு ராயின் வீட்டில் ஏன் சோதனை நடத்தவில்லை? தற்போது ஏன் நடத்தப்படுகிறது? காரணம் தேர்தல் நெருங்குகிறது.

காங்கிரஸின் பாதையில் பாஜக செல்கிறது. முன்பு காங்கிரஸ் யாரையாவது பயமுறுத்த நினைத்தபோது, ​​இதுபோன்ற யுக்திகளை கையாண்டது, காங்கிரஸின் அடிச்சுவடுகளை பாஜக பின்பற்றுகிறது. தேர்தலுக்கு முன் ஏன் இந்த சோதனைகள் நடத்தப்படுகின்றன. இந்த போரில் வருமானவரித்துறை இணைந்துள்ளதாக தெரிகிறது" என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com