சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள மதமாற்றத் தடை சட்டம்; தேவாலயங்கள் மீது தொடரும் தாக்குதல்கள்

கோலாரில் கிருத்துவ நூல்களை வலதுசாரி கும்பல் ஒன்று தீ வைத்து எரித்த நிலையில், சிக்கபள்ளாபூர் மாவட்டத்தில் தேவாலயம் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

தெற்கு கர்நாடகம் சிக்கபள்ளாபூர் மாவட்டத்தில் உள்ள தேவாலயத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. 160 ஆண்டுகள் பழமைவாய்ந்த புனித ஜோசப் தேவாலயத்தில் உள்ள புனித அந்தோணியார் சிலை சேதப்படுத்தப்பட்டுள்ளது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் அடுத்தக்கட்ட விசாரணைக்காக சிலையை எடுத்து சென்றுள்ளனர். இதுகுறித்து முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து தேவாலயத்தின் பாதிரியார் ஜோஸ்பே அந்தோணி டேனியல் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில், "மாநிலத்தின் தலைநகரான பெங்களூருவிலிருந்து 65 கிமீ தொலைவில் உள்ள சூசைபால்யாவில் அமைந்துள்ள தேவாலயத்தின் மீது காலை 5:30 மணி அளவில் தாக்குதல் நடத்தப்பட்டதாக நம்பப்படுகிறது. 

தேவாலயம் சேதப்படுத்தப்பட்டிருப்பது திருச்சபையை சேர்ந்தவருக்கு காலை 5:40 மணிக்கு தெரியவருகிறது. இதையடுத்து, பாதிரியாருக்கு தெரியப்படுத்தப்படுகிறது. பின்னர், காவல்துறையிடம் புகார் அளிக்கப்பட்டது. இம்மாதிரியான தாக்குதல் சம்பவம் நடைபெற்றதே இல்லை" என்றார்.

கடந்த சில வாரங்களாகவே, கர்நாடகத்தின் பல்வேறு பகுதிகளில் கிருத்துவ பிரார்த்தனை கூட்டங்கள் நடைபெறும் போது இடைமறிக்கப்படுகின்றன. இச்சூழலில்தான், பெலகாவியில் நடைபெற்றுவரும் சட்டப்பேரவை கூட்டத்தில் கர்நாடகா மத சுதந்திர உரிமை பாதுகாப்பு மசோதா அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. கட்டாய மதமாற்றங்களைத் தடுக்கும் வகையில் மசோதா கொண்டு வரப்பட்டதாக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஆனால், இது மாநிலத்தில் சிறுபான்மையினரை குறிவைப்பதாகவும், மற்ற பாஜக ஆளும் மாநிலங்களில் உள்ள இதேபோன்ற மசோதாக்களை விட கடுமையாக உள்ளது என்றும் சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர். மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் போராட்டம் நடத்தப்பட்டுவருகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com