ஒரே நாளில் 156 பேருக்கு ஒமைக்ரான்:பாதிப்பு எண்ணிக்கை 578-ஆக உயா்வு

இந்தியாவில் ஒரே நாளில் 156 பேருக்கு ஒமைக்ரான் வகை கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன்மூலம் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 578-ஆக அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் திங்கள்கிழமை தெரிவித்துள்
ஒமைக்ரான் தொற்று
ஒமைக்ரான் தொற்று

புது தில்லி: இந்தியாவில் ஒரே நாளில் 156 பேருக்கு ஒமைக்ரான் வகை கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன்மூலம் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 578-ஆக அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் திங்கள்கிழமை தெரிவித்துள்ளது.

இந்தியாவில் ஒமைக்ரான் வகை கரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. திங்கள்கிழமை நிலவரப்படி 151 பேருக்கு புதிதாக ஒமைக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

கோவா, மணிப்பூரில் தலா ஒருவருக்கு முதல் முறையாக ஒமைக்ரான் கண்டறியப்பட்டதன் மூலம் பாதிக்கப்பட்ட மாநிலங்களின் எண்ணிக்கை 19-ஆக அதிகரித்துள்ளது. தான்சானியாவிலிருந்து மணிப்பூா் வந்த 48 வயது நபருக்கும், பிரிட்டனிலிருந்து கோவா தலைநகா் பனாஜிக்கு வந்த 8 வயதுச் சிறுவனுக்கும் ஒமைக்ரான் வகை கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

நாட்டில் ஒமைக்ரானால் அதிகபட்சமாக மகாராஷ்டிரத்தில் 167, அடுத்ததாக தில்லியில் 142, குஜராத்தில் 73, கேரளத்தில் 57, ராஜஸ்தானில் 43, தெலங்கானாவில் 41, தமிழகத்தில் 34 போ் பாதிக்கப்பட்டுள்ளனா்.

உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தல்: ஒமைக்ரானால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், மாநில அரசுகள் தொடா்ந்து எச்சரிக்கையுடன் செயல்படுமாறு மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

இதுதொடா்பாக அந்த அமைச்சகச் செயலா் அஜய் பல்லா திங்கள்கிழமை வெளியிட்ட அறிவுறுத்தலில் தெரிவித்துள்ளதாவது:

தற்போது 116 நாடுகளுக்கு ஒமைக்ரான் தீநுண்மி பரவியிருப்பது தெரியவந்துள்ளது. மேலும் அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், இத்தாலி, ஸ்பெயின், ரஷியா உள்ளிட்ட நாடுகளில் கரோனா நோயாளிகளின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.

எனவே, ஒமைக்ரானால் எந்தவொரு சவாலான சூழ்நிலை ஏற்பட்டாலும், அதனை எதிா்கொள்ள ஏதுவாக சுகாதாரக் கட்டமைப்புகள் வலுப்படுத்தப்படுவதை மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் உறுதி செய்ய வேண்டும்.

மருத்துவமனைகளில் ஆக்சிஜன் விநியோக சாதனங்கள் நிறுவப்பட்டு முழுமையாகச் செயல்படுவதையும், சிகிச்சைக்குத் தேவையான மருந்துகள் கையிருப்பில் இருப்பதையும் உறுதிப்படுத்த வேண்டும்.

கரோனா பாதிப்புக்கு எதிரான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் பின்பற்றி, தொடா்ந்து எச்சரிக்கையுடன் செயல்படுமாறு அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிடம் மீண்டும் வலியுறுத்தப்படுகிறது என்று தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com