பசவராஜ் பொம்மை கர்நாடக புதிய முதல்வர்: இன்று பதவியேற்பு

கர்நாடகத்தின் புதிய முதல்வராக பசவராஜ் பொம்மை பாஜக எம்எல்ஏக்களால் ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 
பசவராஜ் பொம்மை கர்நாடக புதிய முதல்வர்: இன்று பதவியேற்பு

கர்நாடகத்தின் புதிய முதல்வராக பசவராஜ் பொம்மை பாஜக எம்எல்ஏக்களால் ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
 ஆளுநர் மாளிகையில் புதன்கிழமை (ஜூலை 28) நடைபெறவுள்ள விழாவில், மாநிலத்தின் 20-ஆவது முதல்வராக அவர் பதவியேற்கவிருக்கிறார்.
 75 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு அரசுப் பொறுப்புகளில் வாய்ப்பு அளிப்பதில்லை என்ற பாஜகவின் விதிமுறையை ஏற்று, கட்சி மேலிடத்தின் விருப்பத்துக்கு இணங்க கர்நாடக மாநில முதல்வர் பதவியை பி.எஸ்.எடியூரப்பா (78) திங்கள்கிழமை ராஜிநாமா செய்தார்.
 அதையடுத்து, புதிய முதல்வரைத் தேர்ந்தெடுக்கும் பணியில் பாஜக தேசியத் தலைமை ஈடுபடத் தொடங்கியது.
 பாஜகவின் சட்டப்பேரவைக் குழுத் தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்காக மேலிடப் பார்வையாளர்களாக நியமிக்கப்பட்ட மத்திய அமைச்சர்கள் தர்மேந்திர பிரதான், ஜி.கிஷண் ரெட்டி, மேலிடப் பொறுப்பாளர் அருண் சிங் ஆகியோர் பெங்களூருக்கு செவ்வாய்க்கிழமை வந்தனர்.
 அருண் சிங் நேராக எடியூரப்பாவின் இல்லத்துக்குச் சென்று மரியாதை நிமித்தமாக அவரை சந்தித்துப் பேசினார். அதன்பிறகு குமாரகுருபா விருந்தினர் இல்லத்தில் அருண் சிங், தர்மேந்திர பிரதான், ஜி.கிஷண் ரெட்டி ஆகியோரை பாஜக மாநிலத் தலைவர் நளின்குமார், துணை முதல்வர்களாக இருந்த அஸ்வத் நாராயணா, லட்சுமண் சவதி, அமைச்சர்களாக இருந்த ஆர்.அசோக், கே.சுதாகர், பிரபு செளஹான், ஜெகதீஷ் ஷெட்டர், பசவராஜ் பொம்மை உள்ளிட்டோர் சந்தித்துப் பேசினர்.
 பேரவைக் குழு கூட்டம்: அதன்பிறகு பெங்களூரு கேபிடல் ஹோட்டலில் செவ்வாய்க்கிழமை இரவு 7 மணிக்கு பாஜகவின் சட்டப்பேரவைக் குழு கூட்டம் நடந்தது. இந்தக் கூட்டத்தில் தர்மேந்திர பிரதான், கிஷண் ரெட்டி, எடியூரப்பா, நளின்குமார், அருண் சிங் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். பாஜக எம்எல்ஏக்கள் பெரும்பாலானோர் கூட்டத்தில் பங்கேற்றனர். இக்கூட்டத்தில், பாஜக சட்டப்பேரவைக் குழுவின் புதிய தலைவராக பசவராஜ் பொம்மை (61) பெயரை எடியூரப்பா முன்மொழிந்தார். அதனை கோவிந்த் கார்ஜோள் வழிமொழிந்தார். அதன்படி, பாஜக சட்டப்பேரவைக் குழுவின் புதிய தலைவராக பசவராஜ் பொம்மை ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டார்.
 புதிய முதல்வர் தேர்வு: இந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து மேலிடப் பார்வையாளர் தர்மேந்திர பிரதான் கூறியது: பாஜக சட்டப்பேரவைக் குழுவின் தலைவராக பசவராஜ் பொம்மை ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அவர் முதல்வராக புதன்கிழமை பொறுப்பேற்கிறார்.
 கர்நாடகத்தில் பாஜக என்றாலே அது எடியூரப்பாதான். தனது 50 ஆண்டுகால வாழ்க்கையை மக்கள் பணிக்காகவே அவர் அர்ப்பணித்துள்ளார். எடியூரப்பா தலைமையிலான அணியின் கடினமான உழைப்பால்தான் கர்நாடகத்தில் பாஜக இந்த அளவுக்கு உயர்ந்துள்ளது. அண்மையில் தில்லி வந்த எடியூரப்பா, பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர் அமித் ஷா, பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா ஆகியோரைச் சந்தித்து, முதல்வர் பொறுப்பில் இருந்து விலகுவதாகத் தெரிவித்திருந்தார். எடியூரப்பா போன்ற உயர்ந்த தலைவர்களால் கர்நாடகத்தில் பாஜக கிராமங்களிலும் வேர்பிடித்துள்ளது. அவர் தொடர்ந்து பாஜகவுக்கு வழிகாட்டுவார் என்றார்.
 முன்னதாக, மேடையின் கீழே அமர்ந்திருந்த பசவராஜ் பொம்மை மேடைக்கு அழைக்கப்பட்டார். எடியூரப்பாவின் காலில் விழுந்து பசவராஜ் பொம்மை ஆசி பெற்றார்.
 ஆட்சியமைக்க உரிமை கோரினார்: பாஜக சட்டப்பேரவைக் குழுக் கூட்டம் முடிந்த பிறகு, ஆளுநர் மாளிகையில் ஆளுநர் தாவர்சந்த் கெலாட்டை சந்தித்த பசவராஜ் பொம்மை, பாஜகவின் பேரவைக் குழுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கான கடிதத்தை அளித்தார். அதை ஏற்றுக்கொண்ட ஆளுநர் தாவர்சந்த் கெலாட், புதிய முதல்வராகப் பதவியேற்க பசவராஜ் பொம்மைக்கு அழைப்பு விடுத்தார்.
 இன்று பதவியேற்பு: பெங்களூரு ஆளுநர் மாளிகையில் புதன்கிழமை (ஜூலை 28) காலை 11 மணியளவில் புதிய முதல்வரின் பதவியேற்பு விழா நடைபெற இருக்கிறது. கர்நாடகத்தின் 20-ஆவது முதல்வராக பசவராஜ் பொம்மை பதவியேற்க
 உள்ளார்.
 எடியூரப்பாவே எனது வழிகாட்டி!
 எடியூரப்பாவே தனது வழிகாட்டி என்று, புதிய முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பசவராஜ் பொம்மை தெரிவித்தார்.
 பாஜக சட்டப் பேரவைக் குழுவின் புதிய தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பின், செய்தியாளர்களிடம் பசவராஜ் பொம்மை கூறியதாவது: பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர் அமித் ஷா, பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா, கர்நாடக முதல்வர் பி.எஸ்.எடியூரப்பா ஆகியோரது ஆசியுடன் பாஜக சட்டப் பேரவைக் குழுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளேன். எடியூரப்பாவின் ஆசியுடன், கர்நாடகத்தை வளர்ச்சிப் பாதைக்குக் கொண்டு செல்வேன். அவரே எனது வழிகாட்டி.
 அமைச்சரவை உள்ளிட்ட அனைவரின் ஒத்துழைப்பையும் பெற்று ஏழைகள், விவசாயிகள், தொழிலாளர்களின் நலன் காக்கும் ஆட்சியை வழங்குவேன். கட்சி என்மீது வைத்துள்ள நம்பிக்கை, மக்களின் எதிர்பார்ப்புக்குத் தகுந்தபடி ஆட்சி நடத்துவேன். கரோனா பரவல் உள்ளிட்ட பல்வேறு சிக்கல்களை எதிர்கொண்டுள்ள மாநில மக்களுக்கு ஏற்ற உதவிகளை விரைந்து செயல்படுத்துவோம். மேலும், மாநிலத்தின் நிதி நிலைமையை மேம்படுத்தத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வேன் என்றார்.
 எடியூரப்பா வாழ்த்து: முன்னாள் முதல்வர் எடியூரப்பா கூறுகையில், "பசவராஜ் பொம்மைக்கு வாழ்த்துகள். பிரதமரின் வழிகாட்டுதலுடன் கர்நாடகத்தில் பாஜகவை வலுப்படுத்த அனைவரும் இணைந்து கடுமையாக உழைப்போம்' என்றார்.
 எஸ்.ஆர்.பொம்மையின் மகன்
 எடியூரப்பா சார்ந்த லிங்காயத்து சமுதாயத்தின் ஆதரவைத் தக்கவைத்துக்கொள்ளும் வகையில் பசவராஜ் பொம்மை புதிய முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக பாஜக தரப்பில் கூறப்படுகிறது.
 இவர், ஜனதாதளத்தைச் சேர்ந்த முன்னாள் முதல்வர் எஸ்.ஆர்.பொம்மையின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது. கர்நாடக அரசியலில், முன்னாள் பிரதமர் எச்.டி.தேவெ கெளடவின் மகன் எச்.டி.குமாரசாமிக்குப் பிறகு, முன்னாள் முதல்வரின் மகன் முதல்வராகப் பதவியேற்பது இது இரண்டாவது முறையாகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com