ஹிமாசல், ஜம்மு-காஷ்மீரில் கனமழை: 16 பேர் பலி

ஹிமாசல பிரதேசம், ஜம்மு- காஷ்மீரில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி மொத்தம் 16 பேர் பலியாகினர். பலர் காணாமல் போனதாக அதிகாரி ஒருவர் புதன்கிழமை தெரிவித்தார்.
ஹிமாசல பிரதேச மாநிலம், சிம்லாவில் ஏற்பட்ட  நிலச்சரிவில் சிக்கி சேதமடைந்த கார்.
ஹிமாசல பிரதேச மாநிலம், சிம்லாவில் ஏற்பட்ட  நிலச்சரிவில் சிக்கி சேதமடைந்த கார்.

சிம்லா/ ஜம்மு: ஹிமாசல பிரதேசம், ஜம்மு- காஷ்மீரில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி மொத்தம் 16 பேர் பலியாகினர். பலர் காணாமல் போனதாக அதிகாரி ஒருவர் புதன்கிழமை தெரிவித்தார்.
ஹிமாசல பிரதேச பேரிடர் மேலாண்மை இயக்குநர் சுதேஷ் குமார் மொகதா கூறியதாவது: உதய்பூரில், டோசிங் நுல்லா பகுதியில் ஏற்பட்ட பலத்த மழை வெள்ளத்தில் சிக்கி 7 பேர் உயிரிழந்தனர். இதேபோல, சம்பா மாவட்டத்தில் ஏற்பட்ட மழை வெள்ளத்தில் சிக்கி 2 இரண்டு பேர் உயிரிழந்தனர். குலு மாவட்டத்தில், நீரியல் திட்ட அதிகாரி, தில்லி சுற்றுலாப் பயணி உள்பட 4 பேரைக் காணவில்லை. 
உதய்பூர், லஹால்-ஸ்பிட்டி பகுதியில் செவ்வாய்க்கிழமை பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் 12 தொழிலாளர்கள் அடித்துச் செல்லப்பட்டனர். அவர்களில் 7 பேரின் சடலங்கள் இதுவரை மீட்கப்பட்டுள்ளன. 2 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டனர். 3 பேரைக் காணவில்லை.
உயிரிழந்தவர்களில் 4 பேர் ஹிமாசலத்தையும், ஒருவர் ஜம்மு-காஷ்மீரையும் சேர்ந்தவர்கள். இருவரின் உடல்கள் இன்னும் அடையாளம் காணப்படவில்லை என்றார்.
அப்பகுதியில் ஏற்பட்டுள்ள நிலச்சரிவில் சிக்கிய தொழிலாளர்களை மீட்க தேசிய பேரிடர் மீட்புப் படையின் (என்டிஆர்எஃப்) உதவி கோரப்பட்டுள்ளதாக லஹால்-ஸ்பிட்டி துணை ஆணையர் நீரஜ்குமார் தெரிவித்தார். 
சம்பா மாவட்டத்தில் வெள்ள நீரில் ஒருவர் அடித்துச் செல்லப்பட்டார். மேலும் அங்குள்ள மலையிலிருந்து தவறி விழுந்து சுனில்குமார் என்பவர் உயிரிழந்ததார். லஹால்-ஸ்பிட்டி பகுதியில், ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. நிலச்சரிவு காரணமாக சுமார் 60 வாகனங்கள் நடுவழியில் சிக்கித் தவிக்கின்றன.
மாநிலத்தில் நீடிக்கும் மழையையடுத்து சிம்லா வானிலை ஆய்வு மையம், மாநிலம் முழுவதும் சிவப்பு எச்சரிக்கையை விடுத்துள்ளது.
பாகா ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் டார்ச்சா கிராமத்தில் கரையோரப் பகுதியில் வசிக்கும் மக்கள் வெளியேற்றப்பட்டு, முகாம்
களில் தங்க வைக்கப்பட்டனர். 
ஜம்மு- காஷ்மீரில் கனமழை: ஜம்மு-காஷ்மீரின், கிஸ்துவார் மாவட்டத்தில் புதன்கிழமை அதிகாலை இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்ததில் 7 பேர் உயிரிழந்தனர்; 17 பேர் காயமடைந்தனர்.
இந்நிலையில், மழை நிலவரம் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ஜம்மு-காஷ்மீரின் துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா, காவல் துறைத் தலைவர் தில்பக் சிங் ஆகியோரைத் தொடர்புகொண்டு கேட்டறிந்தார். கனமழைக்கு பலியானவர்களில் 7 பேர் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும், 17 பேர் காயமடைந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளதாகவும், காணாமல்போன 14 பேரை தீவிரமாகத் தேடி வருவதாகவும் காவல் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இந்நிலையில் வானிலை ஆய்வு மைய செய்தித் தொடர்பாளர் கூறுகையில், ஜம்மு-காஷ்மீரில் வரும் ஜூலை 30 வரையிலும் பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ளது. 
சில இடங்களில் கனமழை முதல் அதி கனமழையாக பெய்ய வாய்ப்புள்ளது. இதன்காரணமாக தாழ்வான பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டு மண் சரிவு, நிலச்சரிவுக்கு வாய்ப்புள்ளது. இடைவிடாத தொடர் மழை காரணமாக அனைத்து நதிகளிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும் என எதிர்பார்க்கப்படுவதால் மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்.  மலைப்பாங்கான, நிலச்சரிவு மற்றும் மண் சரிவு ஏற்படக்கூடிய பகுதிகளுக்கு மக்கள் செல்வதை தவிர்க்க வேண்டும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com