கரோனா இரண்டாம் அலை ஓய்ந்துவிட்டதா? நிபுணர்களின் அதிர்ச்சித் தகவல்

கரோனா உறுதியாகும் விகிதம் தொடர்ந்து 14வது நாளாக 5 சதவீதத்துக்கும் கீழ் குறைந்து, இந்தியா புதிய மைல்கல்லை எட்டியிருக்கிறது.
கரோனா இரண்டாம் அலை ஓய்ந்துவிட்டதா? நிபுணர்களின் அதிர்ச்சித் தகவல்
கரோனா இரண்டாம் அலை ஓய்ந்துவிட்டதா? நிபுணர்களின் அதிர்ச்சித் தகவல்


புது தில்லி: கரோனா உறுதியாகும் விகிதம் தொடர்ந்து 14வது நாளாக 5 சதவீதத்துக்கும் கீழ் குறைந்து, இந்தியா புதிய மைல்கல்லை எட்டியிருக்கிறது.

கரோனா உறுதி செய்யப்படும் விகிதம் 5 சதவீதத்துக்குள் குறைந்ததால், நாட்டில் பொதுமுடக்கங்களில் தளர்வுகளை ஏற்படுத்த உலக சுகாதார நிறுவனம் பரிந்துரைத்தாலும், மருத்துவ நிபுணர்களின் கூற்று வேறு வகையாக உள்ளது. கரோனா இரண்டாம் அலை ஓய்ந்து விடவில்லை, அதற்கு இன்னும் வெகு தொலைவு இருப்பதாகவும் குறிப்பிடுகிறார்கள்.

நேற்று 53 ஆயிரம் பேருக்கு கரோனா உறுதியானது. கடந்த 88 நாள்களில் இது மிகவும் குறைவு. கரோனா உறுதி செய்யப்படும் விகிதமும் 3.83 சதவீதமாக இருந்தது. இதையெல்லாம் ஒன்றுசேர்த்துப் பார்க்கும் போது இந்தியாவில் கரோனா இரண்டாம் அலை ஓய்ந்து விட்டதாகவும், அனைத்துக் கட்டுப்பாடுகளையும் நீக்கலாம் என்றும் கூற முடியும்.

ஆனால், இது பற்றி மருத்துவ நிபுணர்கள் கூறுவது என்னவென்றால், நாட்டு மக்கள் இப்போதுதான் கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். கரோனா வைரஸின் தீவிரமடைந்த பல கிருமிகள் உருவாகி, அதுவும் அதிகவேகமாகப் பரவக் கூடியதாக உள்ளன. இன்னும் பல மாவட்டங்களில் கரோனா உறுதி செய்யப்படும் விகிதம் 5 சதவீதத்துக்கும் அதிகமாகவும், கவலையடையச் செய்யும் வகையிலேயே உள்ளது.

கரோனா இரண்டாவது அலை மிக வேகமாக புதிய உச்சங்களைத் தொட்டது, ஆனால், அதன் அலை ஓய்வதற்கு இன்னமும் வெகு தொலைவு செல்ல வேண்டியுள்ளது, ஏனென்றால், டெல்டா வைரஸின் தீவிரமடைந்த உருமாறிய டெல்டா பிளஸ் வைரஸ் தற்போது பரவத் தொடங்கியுள்ளது. இது அதிகவேகமாகப் பரவும் தன்மை கொண்டது என்கிறார் தில்லி என்சிஆர் பகுதியில் உள்ள சிவ நாடார் பல்கலைக்கழகத்தின் இயற்கை அறிவியல் பள்ளியின் உதவிப் பேராசிரியர் நாக சுரேஷ் வீராப்பு.

நாட்டில் கரோனா இரண்டாம் அலை உருவாகக் காரணமாக இருந்த டெல்டா வைரஸின் தீவிரமடைந்த உருமாறிய டெல்டா பிளஸ் வைரஸ் தற்போது உருவாகியுள்ளது. ஏற்கனவே டெல்டா வைரஸ் பரவல்தான் நாட்டில் கரோனா இரண்டாம் அலை மிகத் தீவிரமடைந்து பல உயிர்களைப் பலி கொடுக்கக் காரணமாக அமைந்திருந்தது.

ஒரு நாட்டில் தொடர்ந்து 14 நாள்களாக கரோனா உறுதியாகும் விகிதம் 5 சதவீதத்துக்குள் இருந்தால், அந்த நாடு பொதுமுடக்கத்தை விலக்கிக் கொள்ளலாம் என்று பரிந்துரைக்கிறது.

இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் கரோனா முதல் அலை ஓய்ந்ததாக அறிவிக்கப்பட்டதும், உடனடியாக இரண்டாம் அலை ஏற்படும் என்ற எச்சரிக்கைகளை எல்லாம் புறந்தள்ளிவிட்டு கொண்டாட்ட மனநிலைக்குச் சென்றுவிட்டோம். அப்போதுதான் கரோனாவின் உருமாறிய அதிதீவிர டெல்டா வைரஸ் உருவாகி, மார்ச் மாதம் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பரவத் தொடங்கி, அதன் தீவிரத்தை மே மாதத்தில் நாடு கண்கூடாகப் பார்த்தது என்கிறார் வீராப்பு.

ஒட்டுமொத்த நாட்டிலும் என்று எடுத்துக் கொள்ளும்போது, கரோனா உறுதியாகும் விகிதம் 5 சதவீதத்துக்கும் கீழ் குறைந்தாலும், இன்னமும் பல மாவட்டங்களில் கரோனா வேகமாகப் பரவிக் கொண்டுதான் இருக்கிறது. கரோனா இரண்டாம் அலை ஓய்ந்துவிட்டது என்று அறிவிக்கும் முன்பு, இதுபோன்ற மாவட்டங்களில் டிபிஆர் பரிசோதனை நடத்தி, இரண்டு வார காலம் அதில் கரோனா உறுதியாகும் விகிதம் 5 சதவீதத்துக்கும் கீழ் குறைய வேண்டும் என்கிறார் மருத்துவ நிபுணர் சந்திரகாந்த் லஹரியா.

கேரளம் உள்ளிட்ட சில மாநிலங்களில் இன்னமும் கரோனா உறுதியாகும் விகிதம் 5 சதவீதத்துக்கும் மேல்தான் உள்ளது என்கிறார் விஞ்ஞானி கௌதம் மேனன். இது மற்ற மாநிலங்களை விட கேரளத்தில் அதிக பரிசோதனைகள் செய்யப்படுகிறது என்பதைக் காட்டுகிறதா, இல்லை அந்த மாநிலத்தில் இன்னமும் நிலைமை மோசமாகவே இருக்கிறது என்பதைக் காட்டுகிறதா என்பது தெரியவில்லை.

கடந்த ஞாயிறன்று கேரளத்தில் கரோனா உறுதியாகும் விகிதம் 10.84 சதவீதமாக இருந்தது.

கரோனா தொற்று குறைந்து வருகிறது என்பதை வேண்டுமானால் ஏற்கலாம், ஆனால், அனைத்துக் கட்டுப்பாடுகளையும் நீக்கும் நேரமல்ல, மாறாக, நாம் அனைவரும் பல விஷயங்களை கட்டாயம் கடைப்பிடிக்கும் காலமாக அமைந்துள்ளது என்றும் கூறுகிறார்.

கரோனா உச்சத்தில் இருக்கும்போது, அச்சம் காரணமாக லேசான அறிகுறி இருப்பவர்கள் கூட கரோனா பரிசோதனை செய்து கொள்வார்கள். ஆனால் தற்போது அறிகுறி இல்லாதவர்களும் லேசான அறிகுறி இருப்பவர்களும் கரோனா பரிசோதனை செய்து கொள்ள மாட்டார்கள். எனவே, கரோனா தொற்றின் உண்மைத் தன்மையை உறுதி செய்வது கடினம்.

இது கரோனா தொற்றின் முடிவு என்று கருதாமல், கரோனா தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த பல வாய்ப்புகள் கிடைத்துள்ளன என்று கருதுவதே சாலச்சிறந்தது என்று நிபுணர்கள் கூறகிறார்கள்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com