
மும்பையில் பாதிக்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு கரோனா எதிர்ப்புத் திறன்
மும்பை: மும்பையில் நடத்தப்பட்ட செரோ ஆய்வில் பாதிக்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு கரோனா எதிர்ப்புத் திறன் உருவாகியிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது கடந்த மார்ச் மாதம் நடத்தப்பட்ட செரோ ஆய்வில் கிடைத்த எண்ணிக்கையை விட 10 சதவீதம் கூடுதலாகும்.
அதாவது, மும்பை மாநகராட்சி சார்பில் நடத்தப்பட்ட செரோ ஆய்வில், 50 சதவீதத்துக்கும் அதிகமான குழந்தைகளுக்கு ஏற்கனவே கரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுவிட்டது. ஒன்று முதல் 18 வயதுக்குள்பட்டவர்களிடம் நடத்தப்பட்ட செரோ ஆய்வில் கிடைத்திருக்கும் தகவலில், 51.18 சதவீதம் குழந்தைகளுக்கு கரோனா எதிர்ப்புத் திறன் உருவாகியுள்ளது. இது கடந்த மார்ச் மாதம் 39.04 சதவீதமாக இருந்தது. இது மிகவும் அதிகம் என்று கருதப்படுகிறது.
இந்த ஆய்வில், 10 - 14 வயதுடையவர்களில் 53.43 சதவீதம் பேருக்கும், 1 - 4 வயதுடையவர்களில் 51.04 சதவீதம் பேருக்கும் கரோனா எதிர்ப்புத் திறன் உருவாகியுள்ளதும் தெரிய வந்துள்ளது.