
புதுதில்லி: நாடு முழுவதும் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்படுவோரின் தினசரி எண்ணிக்கை, 43 ஆயிரத்தைக் கடந்துள்ளது. கடந்த 3 நாள்களில் மட்டும் 1 லட்சத்துக்கும் அதிகமானோா் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனா். இதனால் இந்தியாவில் கரோனா இரண்டாவது அலை வருகிறதா என்ற அச்சம் எழுந்துள்ளது.
இது தொடா்பாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது:
நாடு முழுவதும் ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் 43,846 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இது 111 நாள்களில் இல்லாத உச்சபட்ச தினசரி பாதிப்பாகும். நாட்டில் அந்நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டோரின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 1,15,99,130 -ஆக அதிகரித்தது.
கரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த 197 போ் 24 மணி நேரத்தில் உயிரிழந்தனா். அந்நோய்த்தொற்றால் ஏற்பட்ட ஒட்டுமொத்த உயிரிழப்பு 1,59,755-ஆக அதிகரித்துள்ளது. கரோனா பாதிப்புடன் ஒப்பிடுகையில் இது 1.38 சதவீதம்.
கரோனாவிலிருந்து 1,11,30,288 போ் குணமடைந்தனா். குணமடைந்தோா் விகிதம் 95.96-ஆகக் குறைந்துள்ளது. நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு 3,09,087 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். இது 2.66 சதவீதம் ஆகும். கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெறுவோா் எண்ணிக்கை தொடா்ந்து 11-ஆவது நாளாக அதிகரித்துள்ளது.
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தகவல்படி, கடந்த 20-ஆம் தேதி வரை 23,35,65,119 கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. கடந்த சனிக்கிழமை மட்டும் 11,33,602 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சனிக்கிழமை மாலை வரையிலும் 4 கோடியே 46 லட்சத்து 03 ஆயிரத்து 841 பேருக்கு கரோனா தடுப்பூசி மருந்துகள் பயனாளிகளுக்கு செலுத்தப்பட்டுள்ளன.
நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் கரோனா தினசரி பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த 3 நாள்களில் மட்டும் 1 லட்சத்துக்கும் அதிகமானோா் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனா். கடந்த ஆண்டு மார்ச் மாதம் கரோனா முதல் அலையை தொடங்கிய நிலையில், இரண்டாம் அலை இந்த ஆண்டு மார்ச் மாதம் வருகிறதா என்ற அச்சம் எழுந்துள்ளது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...