கோப்புப்படம்
கோப்புப்படம்

பட்டாசுகளை வெடிக்க தூண்டிய பாஜகவினர்: பகீர் கிளப்பும் தகவலை வெளியிட்ட அமைச்சர்

நகரில் நிலவிய பயங்கரமான காற்று மாசுவுக்கு 3,500 பண்ணைகளிலிருந்து வெளியான புகையும் காரணம் என தில்லி சுற்றுச்சூழல் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அரசு விதித்த கட்டுப்பாடுகளை மீறி தீபாவளியன்று பட்டாசுகள் வெடிக்கப்பட்டதன் விளைவாக நச்சு நிறைந்த காற்றால் தில்லி சூழப்பட்டுள்ளது. இந்நிலையில், பட்டாசுகளை வெடிக்க மக்களை பாஜக வேண்டுமென்றே தூண்டியுள்ளதாக தில்லி சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கோபால் ராய் குற்றம்சாட்டியுள்ளார்.

அதுமட்டுமின்றி, நகரில் நிலவிய பயங்கரமான காற்று மாசுவுக்கு வேளாண் கழிவுகளை எரித்ததால் 3,500 பண்ணைகளிலிருந்து வெளியான புகையும் காரணம் என அவர் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் இன்று விரிவாக பேசுகையில், "ஏராளமானோர் பட்டாசு வெடிக்கவில்லை. அவர்கள் அனைவருக்கும் நன்றி கூறுகிறேன். ஆனால், சிலர் வேண்டுமென்றே பட்டாசுகளை வெடிக்கிறார்கள். பாஜக அவர்களைச் செய்ய வைத்தது.

இன்று மதியமாகியும் நகரின் மாசு அளவு மாறவே இல்லை. பண்ணைகளில் வேளாண் கழிவுகள் எரிக்கப்பட்டது தில்லி காற்று மாசுவை மேலும் மோசமாக்கியுள்ளது" என்றார். பட்டாசுகளை வெடிக்க தில்லி அரசு தடை வதித்திருந்த நிலையிலும், தெற்கு தில்லியில் உள்ள லஜ்பத் நகர், வடக்கு தில்லியில் உள்ள புராரி, மேற்கு தில்லியில் உள்ள பஸ்சிம் விஹார் மற்றும் கிழக்கு தில்லியில் உள்ள ஷாஹ்தாரா ஆகிய இடங்களில் வசிப்பவர்கள் இரவு 7 மணி் முதல் பட்டாசுகளை வெடிக்க தொடங்கியுள்ளனர் எனக் கூறப்படுகிறது.

வெள்ளிக்கிழமையன்று தில்லியில் நிலவும் 36 சதவிகித (நுண் துகள்கள்) பிஎம் 2.5 அளவுக்கு காரணம் வேளாண் கழிவுகளை ஏரிப்பதே என காற்றின் தரத்தை கணிக்கும் நிறுவனமான சஃபார் தெரிவித்துள்ளது. தில்லியில் காற்றின் தரம் இன்று காலை வரை அபாயகரமான நிலையிலேயே இருந்துள்ளது. இதன் காரணமாக, நகரின் வசிக்கும் மக்கள், தங்களது தொண்டை மற்றும் கண்களில் எரிச்சல் ஏற்பட்டுள்ளதாக கூறியுள்ளனர். 

இன்று மதியம் 1 மணி நிலவரப்படி, தலைநகரின் மையபகுதியான லோதி சாலையில் பிஎம் 2.5இன் அளவு 394ஆக பதிவாகியுள்ளது. மேஜர் தியான் சந்த் தேசிய மைதானத்தில் அதன் அளவு 416ஆகவும் மத்திய தில்லியில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் 399ஆகவும் பதிவாகியுள்ளது. நேற்று மாலை, நகரின் பெரும்பாலான பகுதிகளில் பிஎம்2.5 அளவு 999ஐ எட்டியது. உலக சுகாதார அமைப்பின் பரிந்துரைக்கப்பட்ட அளவு 25ஆகும்.

இரவு 9 மணிக்கு மேலாக, மக்கள் அதிக அளவில் பட்டாசு வெடித்த நிலையில், தில்லிக்கு அண்டை நகரமான ஃபரிதாபாத் (424), காசியாபாத் (442), குர்கான் (423),  நொய்டா (431) என்ற அளவில் காற்றின் தரம் பதிவானது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com