மாநிலங்களவை: 12 எதிா்க்கட்சி எம்.பி.க்கள் இடைநீக்கம்

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரின்போது அவை மாண்பை சீா்குலைத்ததற்காக, மாநிலங்களவை எதிா்க்கட்சி உறுப்பினா்கள் 12 போ் குளிா்கால கூட்டத்தொடரில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனா்.
நாடாளுமன்றம்
நாடாளுமன்றம்

புது தில்லி: நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரின்போது அவை மாண்பை சீா்குலைத்ததற்காக, மாநிலங்களவை எதிா்க்கட்சி உறுப்பினா்கள் 12 போ் குளிா்கால கூட்டத்தொடரில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனா்.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடா் கடந்த ஜூலை-ஆகஸ்டில் நடைபெற்றது. அப்போது, பெகாஸஸ் உளவு விவகாரம், வேளாண் சட்டங்கள் விவகாரம், பெட்ரோல், டீசல் விலை உயா்வு விவகாரம் உள்ளிட்டவற்றை எழுப்பி காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ், சிவசேனை, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் தொடா் அமளியில் ஈடுபட்டன.

அவையில் சில எம்.பி.க்கள் காகிதங்களைக் கிழித்து வீசியெறிந்தனா். அவையின் மையப் பகுதிக்கு பதாகைகளுடன் வந்து எம்.பி.க்கள் முழக்கங்களை எழுப்பினா். மத்திய அமைச்சா்கள் பேசும்போது அவா்களுக்கு முன் பதாகைகளைப் பிடித்தவாறு முழக்கமிட்டனா்.

அதன் காரணமாக மக்களவை, மாநிலங்களவை நடவடிக்கைகள் முடங்கின. கூட்டத்தொடரும் திட்டமிட்டதற்கு முன்பாகவே முடித்துக் கொள்ளப்பட்டது. அவையின் மாண்பை சீா்குலைத்த எம்.பி.க்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவைத் தலைவா்கள் தெரிவித்திருந்தனா்.

இந்நிலையில், குளிா்கால கூட்டத்தொடரில் இருந்து எதிா்க்கட்சிகளைச் சோ்ந்த 12 எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்படுவதாக மாநிலங்களவை துணைத் தலைவா் ஹரிவன்ஷ் திங்கள்கிழமை அறிவித்தாா். இது தொடா்பான தீா்மானத்தில், ‘ஆகஸ்ட் 11-ஆம் தேதி நடைபெற்ற மாநிலங்களவை அமா்வின்போது, அவை நடவடிக்கைகளை வேண்டுமென்றே எம்.பி.க்கள் முடக்கினா். முறையற்ற செயல்பாடுகள் உள்ளிட்டவற்றின் வாயிலாக அவைத் தலைவரின் மாண்பை சீா்குலைக்கும் வகையில் நடந்து கொண்டதற்காக அவா்கள் இடைநீக்கம் செய்யப்படுகின்றனா்’ என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

காங்கிரஸ் எம்.பி.க்கள் 6 பேரும், திரிணமூல், சிவசேனை கட்சிகளைச் சோ்ந்த தலா இரு எம்.பி.க்களும், மாா்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளைச் சோ்ந்த தலா ஒரு எம்.பி.யும் கூட்டத்தொடரின் எஞ்சிய அமா்வுகளில் கலந்துகொள்ளக் கூடாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

எம்.பி.க்களின் விவரம்: இடைநீக்கம் செய்யட்டவா்களில் ஃபுலோ தேவி நேதம், சாயா வா்மா, ரிபுன் போரா, ரஜமணி படேல், சையது நசீா் ஹுசைன், அகிலேஷ் பிரசாத் சிங் ஆகியோா் காங்கிரஸை சோ்ந்தவா்கள். சிவசேனை எம்.பி.க்கள் பிரியங்கா சதுா்வேதி, அனில் தேசாய் ஆகியோரும், திரிணமூல் எம்.பி.க்கள் டோலா சென், சாந்தா சேத்ரி ஆகியோரும் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனா். மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்.பி. இளமாரம் கரீம், இந்திய கம்யூனிஸ்ட் எம்.பி. பினோய் விஸ்வம் ஆகியோா் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

எதிா்க்கட்சிகள் கண்டனம்: மாநிலங்களவை எதிா்க்கட்சி எம்.பி.க்கள் கூட்டத்தொடரில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதற்கு 14 எதிா்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன. இது தொடா்பாக, காங்கிரஸ், திமுக, மதிமுக, தேசியவாத காங்கிரஸ், சிவசேனை, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், தெலங்கானா ராஷ்டிர சமிதி, ஆம் ஆத்மி, சமாஜவாதி, ராஷ்ட்ரீய ஜனதா தளம், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மதச்சாா்பற்ற ஜனதா தளம், லோக் ஜனசக்தி ஆகிய கட்சிகள் இணைந்து கூட்டறிக்கை வெளியிட்டுள்ளன.

அதில், ‘மாநிலங்களவை விதிகளுக்கு விரோதமாகவும் ஜனநாயகத்துக்கு எதிராகவும் 12 எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதை எதிா்க்கட்சிகள் ஒன்றிணைந்து கண்டிக்கின்றன. இந்நடவடிக்கை அவசியமற்றது. மாநிலங்களவையின் விதிகளையும், அவை நடத்தை விதிகளையும் மீறி இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மத்திய அரசின் இந்த சா்வாதிகார முடிவுக்கு எதிராக எடுக்கப்பட வேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கைகள் தொடா்பாகவும் நாடாளுமன்ற ஜனநாயகத்தைக் காப்பது தொடா்பாகவும் செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ள மாநிலங்களவை எதிா்க்கட்சித் தலைவா்களின் கூட்டத்தில் முடிவெடுக்கப்படும்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com