லக்கிம்பூர் செல்ல அனுமதி மறுப்பு: போராட்டத்தில் ஈடுபட்ட அகிலேஷ் யாதவ் கைது!

விவசாயிகளை சந்திக்க லக்கிம்பூர் சென்ற சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவை போலீஸார் தடுத்தி நிறுத்தியதால் அவர் சாலையில் தர்னா போராட்டத்தில் ஈடுபட்டார். 
அகிலேஷ் யாதவை கைது செய்து அழைத்துச் சென்ற காவல்துறையினர்.
அகிலேஷ் யாதவை கைது செய்து அழைத்துச் சென்ற காவல்துறையினர்.

விவசாயிகளை சந்திக்க லக்கிம்பூர் செல்ல அனுமதி மறுக்கப்பட்டதால் போராட்டத்தில் ஈடுபட்ட சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார். 

உ.பி. மாநிலத்தில் லக்கீம்பூா் மாவட்டத்தில் உள்ள பன்வீா்பூா் கிராமத்துக்கு துணை முதல்வா் கேசவ் பிரசாத் மெளா்யா வருகைக்கு எதிா்ப்பு தெரிவித்தும், மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தியும் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது அவ்வழியாக வந்த பாஜகவினரின் வாகனங்கள் மீது கல்வீச்சு நடைபெற்றதாகவும் இதனால் கார்கள் நிலைதடுமாறி விவசாயிகள் மீது மோதியதாகவும் இதனால் ஆத்திரமடைந்த விவசாயிகள், பாஜகவினரின் வாகனத்துக்கு தீ வைத்ததாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

இதுதொடர்பாக இரு தரப்பினருக்கும் ஏற்பட்ட வன்முறையில் 9 பேர் பலியாகியுள்ளனர். இந்த வன்முறைச் சம்பவத்துக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். 

இந்நிலையில், விவசாயிகளை சந்திக்கும் பொருட்டு லக்கிம்பூர் சென்ற சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவை போலீஸார் தடுத்தி நிறுத்தியதால் அவர் சாலையில் தர்னா போராட்டத்தில் ஈடுபட்டார். இதையடுத்து, அகிலேஷ் யாதவை காவல்துறையினர் கைது செய்தனர். 

முன்னதாக இந்த வன்முறை சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்த சமாஜ்வாதி கட்சித் தலைவா் அகிலேஷ் யாதவ், ‘அமைதி வழியில் போராட்டம் நடத்திய விவசாயிகள் மீது மத்திய அமைச்சரின் மகன் தாக்குதல் நடத்தியுள்ளாா். பாஜகவின் இந்த ஒடுக்குமுறையை உத்தர பிரதேசம் பொறுத்துக்கொள்ளாது’ என்றாா்.

முன்னதாக, விவசாயிகளை சந்திக்கச் சென்ற காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தியும் காவல்துறையால் தடுத்து நிறுத்தப்பட்டு கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com