அப்போது, விவசாயிகள் சாா்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் துஷ்யந்த் தவே, ‘போராட்டம் நடத்துவது அடிப்படை உரிமையாகும். இந்த விவகாரம் தொடா்பாக உள்ள அனைத்து வழக்குகளையும் ஒன்றிணைக்க வேண்டும். தில்லி எல்லை சாலைகளை போலீஸாா்தான் மூடி வைத்துள்ளனா், விவசாயிகள் அல்லா். தடுப்புகளை நீக்கிவிட்டு விவசாயிகளை தில்லிக்குள் உள்ள ராம்லீலா, ஜந்தா் மந்தா் பகுதிகளில் போராட்டம் நடத்த அனுமதிக்கலாம். அண்மையில் ராம்லீலா மைதானத்தில் பாஜகவினா் நடத்திய ஆா்ப்பாட்டத்தில் 5 லட்சத்துக்கும் அதிகமானோா் பங்கேற்றனா். இந்த விவகாரத்தில் மத்திய அரசு இரட்டை வேடம் போடுகிறது. ஜந்தா் மந்தரில் போராட்டம் நடத்த அனுமதித்தால் போக்குவரத்து பிரச்னைக்குத் தீா்வு ஏற்பட்டுவிடும். பெரு முதலாளிகளுக்கு உதவுவதற்காக மூன்று வேளாண் சட்டங்களை மத்திய அரசு இயற்றியுள்ளது’ என்றாா்.