தீர்ப்பாயங்களில் காலியிடங்களை நியமிக்கும் விவகாரம்: உச்ச நீதிமன்றம் கடும் விமரிசனம்

கடந்த வாரம், நாடு முழுவதும் உள்ள தீர்ப்பாயங்களில் உள்ள காலியிடங்களை நியமிக்கும் விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் மத்திய அரசை விமரிசித்திருந்தது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

நாடு முழுவதும் உள்ள தீர்ப்பாயங்களில் காலியிடங்களுக்கு பரிந்துரை செய்ததில் மத்திய அரசு சிலவற்றுக்கு மட்டும் நியமனம் செய்திருப்பதற்கு உச்ச நீதிமன்றம் விமரிசித்துள்ளது. மேலும் தீர்ப்பாயங்களின் நியமனங்களை இரண்டு வார காலத்திற்குள் முடிக்க வேண்டும் என அவகாசம் அளித்துள்ளது.

இதுகுறித்து உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி. ரமணா கூறுகையில், "நியமன கடிதங்களுடன் வாருங்கள். நியமனம் செய்யவில்லை எனில், அதற்கான காரணத்தை சொல்ல வேண்டும். இது ஜனநாயக நாடு. நீங்கள் சட்டத்தை பின்பற்ற வேண்டும்.

தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயத்தின் நியமனங்களை பார்த்தேன். பல காலி இடங்களுக்கு பரிந்துரை செய்துள்ளோம். ஆனால், சில காலியிடங்களுக்கு மட்டுமே நியமனம் செய்யப்பட்டிருக்கிறது. எதன் அடிப்படையில் நியமனம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதேபோல்தான், வருமான வரி மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தின் உறுப்பினர்கள் நியமனத்தில் நடைபெற்றுள்ளது. முடிவுகள் எவ்வாறு எடுக்கப்படுகின்றன என்பதில் எங்களுக்கும் வருத்தம் உள்ளது.

தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயத்தின் தேர்வு குழுவில் நானும் இருந்தேன். 544 பேரிடம் நேர்காணல் நடைபெற்றது. அதில், 11 நீதித்துறை உறுப்பினர்களையும் 10 தொழில்நுட்ப உறுப்பினர்களையும் பரிந்துரை செய்தோம். சிலவற்றுக்கு மட்டும்தான் நியமனம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. பரிந்துரை செய்யப்பட்ட மற்ற பெயர்கள் காத்திருப்பு பட்டியலில் வைக்கப்பட்டுள்ளது" என்றார்.

இதற்கு பதிலளித்த அரசின் தலைமை வழக்கறிஞர் கே.கே.வேணுகோபால், "சில பரிந்துரைகளை நிராகரிக்கும் உரிமை அரசுக்கு உள்ளது" என்றார். 

இதுகுறித்து நாகேஸ்வர ராவ் கூறுகையில், "நாடு முழுவதும் பயணம் செய்து நேர்காணலை நடத்தினோம். நாங்கள் எங்கள் நேரத்தை வீணடித்துள்ளோமா? நேர்காணலை நடத்த அரசு கோரிக்கை விடுத்ததன் பேரில் கரோனாவுக்கு மத்தியில் பயணம் செய்தோம். அப்போது, தேர்வு குழுவுக்கு என்ன மரியாதை உள்ளது? அரசு இறுதி முடிவை எடுத்தால், நாங்கள் மேற்கொண்ட பரிந்துரைகள் பயன் இல்லாமல் போய்விடும்" என்றார்.

இந்த வழக்கை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி. ரமணா, நீதிபதிகள் டி.ஒய்.சந்திரசூட், நாகேஸ்வர ராவ் ஆகியோர் கொண்ட அமர்வு விசாரித்துவருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com