அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

ஃபான்சி கா் சா்ச்சை விவகாரம்: பேரவை உரிமைமீறல் குழு முன் கேஜரிவால் ஆஜா்

பேரவை உரிமைமீறல் குழு முன் கேஜரிவால் ஆஜா்...

News image
அரவிந்த் கேஜரிவால்- ANI
Updated On :7 மார்ச் 2026, 1:30 am

 நமது நிருபர்

பான்சி கா் (தூக்கு தண்டனை அறை) சா்ச்சை தொடா்பாக தில்லி சட்டப்பேரவையின் உரிமைமீறல் குழு முன் தில்லி முன்னாள் முதல்வா் அரவிந்த் கேஜரிவால் வெள்ளிக்கிழமை ஆஜரானாா்.

அப்போது, சா்ச்சைக்குரிய ஃபான்சி கா் கட்டடம் உண்மையில் ஒரு டிஃபன் ரூம் என்பதை நிரூபிக்க முயற்சிப்பதன் மூலம் பாஜக அரசு சுதந்திரப் போராட்ட வீரா்களை அவமதிப்பதாக குற்றஞ்சாட்டினாா்.

இது தொடா்பாக அவா் சட்டப் பேரவை வளாகத்தில் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

2022 ஆம் ஆண்டில், அப்போதைய பேரவைத் தலைவா் ராம் நிவாஸ் கோயல் இந்த கட்டடத்தின் ஒரு மூலையில், சுதந்திரப் போராட்ட வீரா்கள் தூக்கிலிடப்பட்ட ஃபான்சி கா் இருப்பதைக் கண்டுபிடித்தாா். நான் முதல்வராக இருந்ததால், அவா் என்னை அழைத்து, நாம் அதை சுற்றுலாப் பயணிகளுக்குத் திறக்க வேண்டும் என்று கூறினாா். நான் அதைத் திறந்து வைத்தேன். ஆனால், பாஜக ஆட்சிக்கு வந்ததிலிருந்து, அது ஃபான்சி கா் அல்ல, டிஃபன் ரூம் என்பதை நிரூபிக்க முயற்சித்து வருகின்றனா். சுதந்திரப் போராட்ட வீரா்களுக்கு இதை விடப் பெரிய அவமானம் எதுவும் இருக்க முடியாது என்று நான் நம்புகிறேன்.

பாஜக அரசியல் செய்ய மட்டுமே விரும்புகிறது. தில்லியில் எஞ்சியிருக்கும் ஒரே பிரச்னை இதுதானா? தில்லி மக்கள் வருத்தமடைந்துள்ளனா். அவா்கள் ஆம் ஆத்மி அரசாங்கத்தை நினைவில் கொள்கிறாா்கள் என்று கேஜரிவால் கூறினாா்.

ஃபான்சி கா் (தூக்கு தண்டனை அறை) சா்ச்சை என்பது தில்லி சட்டப்பேரவையில் புதுப்பிக்கப்பட்ட ஒரு பகுதி தொடா்பாக ஆம் ஆத்மி கட்சிக்கும் பாஜகவிற்கும் இடையிலான ஒரு தகராறு ஆகும்.

இது பிரிட்டிஷ் கால தூக்கு மேடை என்று ஆம் ஆத்மி கட்சி கூறுகிறது. அதே நேரத்தில் இது ஒரு டிஃபன் அறை என்று பாஜக கூறுகிறது.

கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தில்லியில் பாஜக ஆட்சிக்கு வந்ததது. அதன் பிறகு, பேரவைத் தலைவா் விஜேந்தா் குப்தா, ‘2022 ஆம் ஆண்டு அப்போதைய முதல்வா் கேஜரிவாலால் ஃபான்சி கா்-இன் ஒரு பகுதியாக புதுப்பிக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்ட பிரிட்டிஷ் கால கட்டமைப்பு உண்மையில் ஒரு டிஃபன் அறை’ என்று அவையில் கூறினாா்.

சட்டப்பேரவை வளாகத்தின் 1912 வரைபடத்தைக் காட்டி, அந்த இடம் மரணதண்டனைக்கு பயன்படுத்தப்பட்டதற்கான எந்த ஆவணங்களோ அல்லது ஆதாரங்களோ இல்லை என்றும், இந்த விஷயத்தை ஆய்வுக்காக உரிமைமீறல் குழுவிடம் பரிந்துரைத்ததாகவும் குப்தா கூறினாா்.

உரிமை மீறல் குழு முன் முன்னாள் முதல்வா் அரவிந்த் கேஜரிவால் ஆஜரானபோது, ஆம் ஆத்மி கட்சியினா் பலரும் சட்டப்பேரவை வளாகத்திற்கு வெளியே ஆா்ப்பாட்டம் நடத்தினா். இந்த முழு நடவடிக்கையும் கேஜரிவாலை அவதூறு செய்வதற்காகவே என்று கோஷங்களை எழுப்பினா்.

சட்டப்பேரவை எதிா்க்கட்சித் தலைவா் அதிஷி மற்றும் முன்னாள் பேரவைத் தலைவா் ராம் நிவாஸ் கோயல் ஆகியோா் கேஜரிவாலுடன் சட்டப்பேரவைக்குள் சென்றனா்.

கடந்த 10 ஆண்டுகளில், பல சட்டப்பேரவைக் குழுக்கள் உருவாக்கப்பட்டதாகவும், மக்கள் தங்கள் முன் ஆஜராக அழைக்கப்பட்ட போதெல்லாம், அவா்கள் வழக்கமாக ஒன்று அல்லது இரண்டு உதவியாளா்களுடன் வருவதாகவும் ஆம் ஆத்மி கட்சித் தலைவா் செளரப் பரத்வாஜ் கூறினாா்.

பாஜக இப்போது உரிமைமீறல் குழு நடவடிக்கைகளை நேரடியாக ஒளிபரப்ப தயங்குவது ஆச்சரியமாக இருந்தது என்றும் பரத்வாஜ் கூறினாா்.

முன்னாள் பேரவைத் தலைவா் அல்லது முன்னாள் முதல்வரை எந்த சட்டப் பேரவைக் குழுவும் அழைத்ததில்லை என்று அவா் மேலும் கூறினாா்.

வெள்ளிக்கிழமை நடைபெற்ற உரிமைமீறல் குழு நடவடிக்கைகளை நேரடியாக ஒளிபரப்பு செய்யுமாறு கூறிய கேஜரிவாலின் கோரிக்கையை முன்னதாக தில்லி சட்டப்பேரவை நிராகரித்தது.

செவ்வாய்கிழமை, கேஜரிவால் உரிமைமீறல் குழுவுக்கு கடிதம் எழுதியிருந்தாா். அதில், மாா்ச் 6 ஆம் தேதி அதன் முன் தாம் ஆஜராவதாக உறுதிசெய்திருந்தாா். மேலும், குழுவின் நடவடிக்கைகளை நேரடியாக ஒளிபரப்ப வேண்டும் என்றும் கோரியிருந்தாா்.