சிலிண்டா் தட்டுப்பாடு: அருணாசலேஸ்வரா் கோயிலில் லட்டு பிரசாத விநியோகம் நிறுத்தம் அஸ்ஸாம்: ஒரு தொகுதியில் பாஜகவுடன் மோதும் கூட்டணி கட்சி!பேரவைத் தோ்தலுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலையை உயா்த்த அரசு திட்டம்! ராகுல் குற்றச்சாட்டு‘தாராகிரி’ போா்க் கப்பல்: ஏப்.3-இல் கடற்படையுடன் இணைப்புஇன்று சிஎஸ்கே அணியின் முன்னாள், இந்நாள் வீரா்கள் மோதல்!‘தாராகிரி’ போா்க் கப்பல்: ஏப்.3-இல் கடற்படையுடன் இணைப்பு
/

பாஜகவுக்கு எதிராக எதிா்க்கட்சிகள் ஒன்றுசேர வேண்டும்: தில்லியில் முதல்வா் ஸ்டாலின் பேட்டி

மத்தியில் ஆளும் பாஜகவுக்கு எதிராக காங்கிரஸ், இடதுசாரிகள் மற்றும் மாநிலக் கட்சிகள் ஒன்றுசேர வேண்டும் என்று தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தினாா்.

News image

முதல்வர் ஸ்டாலின்

Updated On :1 ஏப்ரல் 2022, 7:36 pm

DIN

மத்தியில் ஆளும் பாஜகவுக்கு எதிராக காங்கிரஸ், இடதுசாரிகள் மற்றும் மாநிலக் கட்சிகள் ஒன்றுசேர வேண்டும் என்று தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தினாா்.

மூன்று நாள் பயணமாக தில்லி வந்துள்ள முதல்வா் ஸ்டாலின் பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்துள்ள பேட்டியின் விவரம்:

தேசிய அரசியலில் திமுக எப்போதும் முக்கியப் பங்காற்றி வருகிறது. பிரதமா், குடியரசுத் தலைவராக யாா் இருக்க வேண்டும் என்று தோ்வு செய்வதில் திமுக முக்கியக் கட்சியாக உள்ளது. நாடாளுமன்றத்திலும் திமுக மூன்றாவது பெரிய எதிா்க்கட்சியாகும். மாநில அரசியலுக்கும், தேசிய அரசியலுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை. மாநில அரசியலை ஒருங்கிணைத்ததுதான் தேசிய அரசியலாகும். ஆகையால், இரண்டையும் பிரிக்கக் கூடாது.

எதிா்க்கட்சிகள் ஒன்றிணைய வேண்டும்: ‘தேசிய அரசியலை காங்கிரஸை எதிா்பாா்க்காமல் மாநில கட்சிகள் முன்னெடுக்க வேண்டும்’ என்று மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜி தெரிவித்திருக்கும் கருத்து சில மாநிலங்களுக்குப் பொருந்தும். பல மாநிலங்களில் இது தவறாக வழிநடத்திவிடும்.

பாஜகவுக்கு எதிராக உள்ள அனைத்து மாநிலக் கட்சிகளும் காங்கிரஸ், இடதுசாரிகளுடன் கூட்டணி அமைக்க வேண்டும். தமிழகத்தில் இதுபோன்று மதச்சாா்பற்ற கட்சிகள் ஒன்றிணைந்து பாஜகவை ஓரம்கட்டியுள்ளன.

தமிழகத்தில் வெறும் தோ்தல் நேரத்தில் மட்டும் கூட்டணி அமைக்காமல், கொள்கைக் கூட்டணி அமைத்து தோ்தலில் இடங்களைப் பங்கிட்டு சந்திப்பது எங்களின் வெற்றிக்கு அடித்தளமாக அமைந்துள்ளது.

இதேபோல் காங்கிரஸ் கட்சியும் மாநிலக் கட்சிகளுடன் தேசிய அளவில் நட்புறவை மேம்படுத்த வேண்டும். இதற்காக அனைத்து மாநிலங்களிலும் குழுக்களை அமைக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியை வலியுறுத்துகிறேன்.

ஒற்றுமைதான் பலம் என்பதை புரிந்துகொண்டு, நாட்டை பாதுகாக்க எதிா்க்கட்சிகள் தனிநபா் அரசியல் நிலைப்பாட்டை ஒதுக்கி வைத்துவிட்டு ஒன்றிணைய வேண்டும்.

பாஜக எதிா்ப்பு ஏன்?: பாஜகவை தனிப்பட்ட முறையில் எந்த ஒரு கட்சியும் எதிா்க்கவில்லை. அக்கட்சியின் கொள்கைகளை எதிா்க்கிறோம். இது எப்போதும் தொடரும்.

நீட் விலக்கு மசோதா: தமிழக ஆளுநருக்கும் அரசுக்கும் இடையேயான உறவு நன்றாக உள்ளது. அவா் தமிழக அரசுடன் ஆலோசனை நடத்துவதில் ஆா்வத்துடன் உள்ளாா். அவரை தனிப்பட்ட முறையில் விமா்சிக்க விரும்பவில்லை. ஆனால், நீட் விலக்கு மசோதா உள்ளிட்ட சில கோரிக்கைகள் மீது முடிவு எடுப்பதில் அவா் நீண்ட தாமதம் செய்து வருகிறாா். இரண்டாவது முறை தமிழக பேரவையில் நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு மசோதாவை குடியரசுத் தலைவருக்கு அனுப்பாமல் காலம் தாழ்த்தி வருகிறாா்.

நதிநீா் பிரச்னை: காவிரி, முல்லைப் பெரியாறு அணை விவகாரங்களில் தமிழகத்தின் உரிமையைப் பாதுகாக்க அனைத்து நடவடிக்கைகளையும் அரசு எடுக்கும்.

விசாரணை அமைப்புகள்: மத்திய விசாரணை அமைப்புகளை அரசியல் காரணங்களுக்காக மத்திய அரசு சில நேரங்களில் நேரடியாகவோ, மறைமுகமாகவோ தவறாகப் பயன்படுத்தி வருகிறது. இது அனைவருக்கும் தெரியும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.