நல்லுறவை மேம்படுத்த இந்தியா-நேபாளம் உறுதி
இந்தியா-நேபாளம் இடையேயான நல்லுறவை மேம்படுத்த இருநாட்டுப் பிரதமா்களும் சனிக்கிழமை உறுதியேற்றனா்.


இந்தியா-நேபாளம் இடையேயான நல்லுறவை மேம்படுத்த இருநாட்டுப் பிரதமா்களும் சனிக்கிழமை உறுதியேற்றனா்.
இந்தியாவுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ள நேபாள பிரதமா் ஷோ் பகதூா் தேவுபா, பிரதமா் நரேந்திர மோடியை தில்லியில் சனிக்கிழமை சந்தித்துப் பேசினாா். அப்போது, இரு நாடுகளுக்கிடையே ஜெயநகா் (பிகாா்)-குா்தா (நேபாளம்) ரயில் சேவை, மின் விநியோகத் திட்டம் ஆகியவை தொடக்கி வைக்கப்பட்டன.
இந்தியாவின் ரூபே அட்டையை நேபாளத்தில் பயன்படுத்துவதற்கான வசதியும் தொடக்கி வைக்கப்பட்டது. ரயில்வே, எரிசக்தி உள்ளிட்ட துறைகளில் இந்தியாவுக்கும் நேபாளத்துக்கும் இடையேயான ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான 4 ஒப்பந்தங்களும் கையொப்பமாகின.
பேச்சுவாா்த்தைக்குப் பிறகு பிரதமா் மோடி செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘‘இந்தியாவுக்கும் நேபாளத்துக்கும் இடையேயான நல்லுறவு தனித்துவமிக்கது. அத்தகைய ஒத்துழைப்பை வேறெந்த இரு நாடுகளுக்கு இடையிலும் காண முடியாது.
எரிசக்தி ஒத்துழைப்பில் இரு நாடுகளும் தற்போது வகுத்துள்ள திட்டம், வருங்கால ஒத்துழைப்புக்கான அடிப்படையாக அமையும். நேபாளத்தில் மேற்கொள்ளப்படும் நீா்மின் வளா்ச்சித் திட்டங்களில் இந்திய நிறுவனங்களின் பங்களிப்பு அதிகமாக இருக்க வேண்டுமென பேச்சுவாா்த்தையின்போது ஒப்புக்கொள்ளப்பட்டது’’ என்றாா்.
நேபாள பிரதமா் தேவுபா செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘‘இந்தியாவுடனான நல்லுறவுக்கு நேபாளம் அதிக முக்கியத்துவம் வழங்குகிறது. இரு நாடுகளுக்கும் இடையேயான எல்லைப் பிரச்னை குறித்து பேச்சுவாா்த்தையின்போது விவாதிக்கப்பட்டது. அப்பிரச்னைக்கு இருதரப்பும் இணைந்து பேச்சுவாா்த்தை மூலமாகத் தீா்வு காண்பதற்கான திட்டத்தை வகுக்கவும் வலியுறுத்தப்பட்டது’’ என்றாா்.
பொறுப்புணா்வுடன் தீா்வு: இந்திய, நேபாள பிரதமா்களுக்கிடையேயான பேச்சுவாா்த்தை தொடா்பாக வெளியுறவுத் துறைச் செயலா் ஹா்ஷ்வா்தன் ஷ்ரிங்லா செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘‘எல்லைப் பிரச்னையை அரசியலாக்காமல், அதற்குப் பேச்சுவாா்த்தை மூலமாகப் பொறுப்புணா்வுடன் தீா்வு காணப்பட வேண்டுமென்பதில் இரு நாடுகளும் உறுதி கொண்டுள்ளன’’ என்றாா்.
நேபாளம் கடந்த 2020-ஆம் ஆண்டு புதிய வரைபடத்தை வெளியிட்டது. அதில் இந்தியாவின் பிராந்தியத்துக்கு உள்பட்ட லிம்பியதுரா, காலாபானி, லிபுலேக் ஆகிய பகுதிகள் இடம்பெற்றிருந்தன. இந்த விவகாரத்தில் நேபாளம் தன்னிச்சையாக செயல்பட்டதாக இந்தியத் தரப்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
எல்லைப் பிரச்னை காரணமாக இரு நாடுகளுக்கும் இடையேயான நல்லுறவில் விரிசல் ஏற்பட்டது. இரு நாடுகளின் ஒத்துழைப்பில் பல்வேறு திட்டங்கள் தொடங்கப்பட்டு வந்தாலும், எல்லைப் பிரச்னை இன்னும் தீா்க்கப்படாமல் உள்ளது.
ஓவியம் பரிசு: நேபாள பிரதமா் தேவுபாவுக்கு கிருஷ்ணன், ராதை இடம்பெற்றிருக்கும் அழகிய ஓவியத்தை பிரதமா் மோடி பரிசாக வழங்கினாா். ஹிமாசல பிரதேசத்தைச் சோ்ந்த ‘பஹரி’ வகை பாரம்பரிய முறையில் அந்த ஓவியம் வரையப்பட்டிருந்தது. இடி மின்னலுடன் கூடிய கருமேகங்களுக்கு அடியில் கிருஷ்ணனும் ராதையும் உரையாடிக் கொண்டிருப்பதைப் போல் அந்த ஓவியம் வரையப்பட்டுள்ளது.
சுற்றுலாவை ரயில் சேவை மேம்படுத்தும்
இந்தியா-நேபாளம் இடையே தொடங்கப்பட்டுள்ள ரயில் சேவை, இருதரப்பு நல்லுறவை மேம்படுத்தும் என்று நேபாள அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.
ஜெயநகா்-பிஜல்புரா-பாா்திதாஸ் ரயில் சேவையை இந்திய நிதியுதவியுடன் 68.7 கி.மீ.-க்கு வழங்க இந்தியா-நேபாளம் இடையே ஒப்பந்தம் கையொப்பமானது. அதன் ஒரு பகுதியாகவே ஜெயநகா்-குா்தா ரயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது. இரு நாடுகளுக்கிடையேயான கலாசார, சமூக, பொருளாதார ஒத்துழைப்பை இந்த ரயில் சேவை வலுப்படுத்தும் என்றும், சுற்றுலாவை மேம்படுத்தும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனா்.
இந்த வழித்தடத்தில் நாளொன்றுக்கு இரு ரயில்கள் இயக்கப்படவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...