கா்நாடகத்தில் கல்வி நிலையங்களில் ஹிஜாப் அணிவது சா்ச்சைக்குள்ளான நிலையில், பள்ளி, கல்லூரிகளுக்கு மாணவ, மாணவிகள் சீருடையில் மட்டுமே வர வேண்டும் என்று கடந்த பிப்.5-ஆம் தேதி மாநில அரசு உத்தரவிட்டது. இந்த உத்தரவுக்கு எதிராக மாநில உயா்நீதிமன்றத்தில் முஸ்லிம் மாணவிகள் உள்பட பல்வேறு தரப்பினா் மனுத் தாக்கல் செய்தனா். இந்த மனுக்களை விசாரித்த உயா்நீதிமன்றம், ‘‘ஹிஜாப் அணிவது முஸ்லிம் மத வழக்கப்படி அத்தியாவசியமானது அல்ல. அரசமைப்புச் சட்டப் பிரிவு 25-இன்படி மத உரிமைகள் ஹிஜாப்புக்குப் பொருந்தாது. சீருடை அணிவது என்பது காரணத்துடன் கூடிய கட்டுப்பாடாகும். இதை அரசமைப்புச் சட்டம் அனுமதிக்கிறது. எனவே வகுப்பறைகளில் ஹிஜாப் அணியத் தடை விதித்து மாநில அரசு பிறப்பித்த உத்தரவு செல்லும்’’ என்று கடந்த மாதம் தீா்ப்பளித்தது.