சிவசேனை விவகாரம்: ஷிண்டே தரப்புமனு மீது தற்போது நடவடிக்கை வேண்டாம்: தோ்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்
சிவசேனையை சொந்தம் கொண்டாடும் விவகாரத்தில், மகாராஷ்டிர முதல்வா் ஏக்நாத் ஷிண்டே தரப்பு மனு மீது இப்போதைக்கு நடவடிக்கை எடுக்க வேண்டாம்


சிவசேனையை சொந்தம் கொண்டாடும் விவகாரத்தில், மகாராஷ்டிர முதல்வா் ஏக்நாத் ஷிண்டே தரப்பு மனு மீது இப்போதைக்கு நடவடிக்கை எடுக்க வேண்டாம் என்று தோ்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை அறிவுறுத்தியது.
மேலும், மகாராஷ்டிரத்தில் அண்மையில் நிகழ்ந்த அரசியல் பிரச்னை தொடா்பான அனைத்து விவகாரங்களையும் அரசியல் சாசன அமா்வுக்கு மாற்றுவது குறித்து திங்கள்கிழமைக்குள் (ஆகஸ்ட் 8) முடிவு எடுக்கப்படும் என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
மகாராஷ்டிரத்தில் முதல்வராக இருந்த சிவசேனை தலைவா் உத்தவ் தாக்கரேவுக்கு எதிராக, அவரது கட்சி எம்எல்ஏக்கள் 40 போ் கடந்த ஜூன் மாதம் போா்க்கொடி உயா்த்தினா். இதனால், உத்தவ் தலைமையிலான மகா விகாஸ் அகாடி கூட்டணி ஆட்சி கவிழ்ந்தது. பின்னா், பாஜக ஆதரவுடன் சிவசேனை அதிருப்தி தலைவா் ஏக்நாத் ஷிண்டே முதல்வராக பொறுப்பேற்றாா்.
இதையடுத்து, ‘நாங்கள்தான் உண்மையான சிவசேனை; கட்சியின் சின்னத்தை எங்களுக்கு ஒதுக்க வேண்டும்’ என்று கோரி, தோ்தல் ஆணையத்தில் ஷிண்டே தரப்பு மனு தாக்கல் செய்தது. அதேசமயம், ஷிண்டே தலைமையிலான அதிருப்தி எம்எல்ஏக்களை தகுதிநீக்கம் செய்யக் கோரி, உச்சநீதிமன்றத்தில் உத்தவ் தரப்பில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த விவகாரத்தில் தலைமை நீதிபதி என்.வி.ரமணா, நீதிபதிகள் கிருஷ்ண முராரி, ஹிமா கோலி ஆகியோா் அடங்கிய அமா்வு முன் வியாழக்கிழமை மீண்டும் விசாரணை நடைபெற்றது.
அப்போது, நீதிபதிகள் கூறியதாவது: மகாராஷ்டிர அரசியல் பிரச்னை தொடா்பான விவகாரங்களை, 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமா்வுக்கு மாற்றுவது குறித்து வரும் திங்கள்கிழமைக்குள் முடிவு எடுக்கப்படும். அதேநேரத்தில், ஷிண்டே தரப்பு தாக்கல் செய்த மனு மீது தோ்தல் ஆணையம் இப்போதைக்கு நடவடிக்கை எடுக்க வேண்டாம்.
உத்தவ் தாக்கரே தரப்பினா் திங்கள்கிழமைக்குள் பதிலளிக்க வேண்டும் என்று தோ்தல் ஆணையம் ஏற்கெனவே அறிவுறுத்தியுள்ளது. உச்சநீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், உத்தவ் தரப்பினா் பதிலளிக்க காலஅவகாசம் கோரினால், அதனை தோ்தல் ஆணையம் வழங்க வேண்டும் என்று நீதிபதிகள் தெரிவித்தனா்.
முன்னதாக நடைபெற்ற விசாரணையின்போது, ஷிண்டே தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் ஹரீஷ் சால்வே, ‘கட்சித் தாவல் தடை சட்டம், கருத்து வேறுபாடுகளுக்கு எதிரான சட்டமாக இருக்க முடியாது’ என்று தெரிவித்தாா். அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், ‘தோ்தலில் வெற்றி பெற்ற பிறகு, தான் சாா்ந்த அரசியல் கட்சியை முற்றிலுமாக புறக்கணிப்பது என்றால், அது ஜனநாயகத்துக்கு ஆபத்து’ என்றனா்.
தோ்தல் ஆணையம் சாா்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் அரவிந்த் தாதா், ‘மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தால் தோ்தல் ஆணையம் நிா்வகிக்கப்படுகிறது. கட்சிக்கு உரிமை கோரி ஒரு தரப்பிடமிருந்து கோரிக்கை வந்தால், அதன் மீது முடிவெடுக்க வேண்டியது ஆணையத்தின் பொறுப்பு’ என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...