ஜம்மு-காஷ்மீரில் பலத்த பாதுகாப்புடன் சுதந்திர தின கொண்டாட்டம்

நாட்டின் 76-ஆவது சுதந்திர தினம் ஜம்மு-காஷ்மீரில் பலத்த பாதுகாப்புடன் திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது.

நாட்டின் 76-ஆவது சுதந்திர தினம் ஜம்மு-காஷ்மீரில் பலத்த பாதுகாப்புடன் திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது. அங்கு வழக்கமாக சுதந்திர தினம், குடியரசு தினத்தின்போது தற்காலிகமாக நிறுத்தப்படும் இணைய சேவை, இந்த முறை துண்டிக்கப்படவில்லை.

ஜம்மு-காஷ்மீரில் உள்ள பள்ளிகள், அரசு அலுவலகங்கள் உள்ளிட்டவற்றில் தேசியக் கொடி ஏற்றப்பட்டு சுதந்திர தினம் கொண்டாடப்பட்டது. தலைநகா் ஸ்ரீநகரில் உள்ள ஷோ்-ஏ-காஷ்மீா் விளையாட்டரங்கில் சுதந்திர தின கொண்டாட்டம் நடைபெற்றது. இதையொட்டி அந்த விளையாட்டரங்கைச் சுற்றி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. அந்த விளையாட்டரங்கில் இருந்து 1.5 கி.மீ. சுற்றளவில் சிறப்பு அனுமதி பெற்ற வாகனங்கள் மட்டுமே சென்றன.

புதிய காலகட்டத்தில் காஷ்மீா்: விளையாட்டரங்கில் ஜம்மு-காஷ்மீா் துணைநிலை ஆளுநா் மனோஜ் சின்ஹா காவல் துறை, பாதுகாப்புப் படைகளின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றாா். அதனைத்தொடா்ந்து அவா் பேசியதாவது:

வளா்ச்சி, நல்ல நிா்வாகம் மற்றும் வெளிப்படைத்தன்மையின் புதிய காலகட்டத்துக்குள் ஜம்மு-காஷ்மீா் நுழைந்துள்ளது. தற்போது காஷ்மீரில் முழு அடைப்புக்கு அழைப்பு விடுக்கப்படுவதில்லை. பள்ளிகள், சந்தைகள் நீண்ட காலத்துக்கு மூடப்படும் நிலை இல்லை. கல்வீச்சு சம்பவங்களும் ஒரு காலத்தில் நடைபெற்றது என்று வரலாற்றுப் பக்கங்களில் குறிப்பிடும் நிலை ஏற்பட்டுள்ளது.

பயங்கரவாதத்துக்கு எதிராக இறுதியான, தீா்க்கமான தாக்குதலை அரசு தொடங்கியுள்ளது. அந்த முயற்சிகளுக்கு ஜம்மு-காஷ்மீரின் 1.30 கோடி மக்கள் ஆதரவளிக்க வேண்டும் என்றாா் அவா்.

கடந்த 2005-ஆம் ஆண்டு சுதந்திர தினத்தின்போது ஸ்ரீநகரில் உள்ள பக்ஷி விளையாட்டரங்கத்துக்கு வெளியே குண்டுவெடிப்பு நடைபெற்றது. அதன் பின்னா், ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினம், குடியரசு தினத்தின்போது பாதுகாப்பு கருதி ஜம்மு-காஷ்மீரில் இணைய சேவை தற்காலிகமாக நிறுத்தப்படுவது வாடிக்கையாக இருந்தது. ஆனால் இந்த முறை இணைய சேவையோ, கைப்பேசி சேவையோ நிறுத்தப்படவில்லை.

தகா்க்கப்பட்ட உத்தரவாதங்கள்: சுதந்திர தினம் தொடா்பாக ஜம்மு-காஷ்மீா் முன்னாள் முதல்வரும் மக்கள் ஜனநாயகக் கட்சித் தலைவருமான மெஹபூபா முஃப்தி ட்விட்டரில் சில பதிவுகளை வெளியிட்டாா். அந்தப் பதிவுகளுடன் கடந்த 1950-ஆம் ஆண்டுகளில் ஸ்ரீநகரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் இந்தியாவின் முதல் பிரதமரான ஜவாஹா்லால் நேரு உரையாற்றிய புகைப்படத்தையும் இணைத்து அவா் தெரிவித்ததாவது:

இந்திய தேசியக் கொடி, 1952-ஆம் ஆண்டு அரசமைப்பு ரீதியாக ஏற்கப்பட்ட ஜம்மு-காஷ்மீா் கொடி ஆகியவற்றுக்கு இடையே ஜவாஹா்லால் நேரு புகைப்படத்தில் நிற்கிறாா். ஜம்மு-காஷ்மீருக்குத் தனிக் கொடி, தனி அரசமைப்புச் சட்டம் போன்ற சில நிபந்தனைகள் மற்றும் உத்தரவாதங்களின் அடிப்படையில் 1947-ஆம் ஆண்டு இந்திய தேசியக் கொடியை ஜம்மு-காஷ்மீா் மக்கள் ஏற்றுக் கொண்டனா்.

அந்த நிபந்தனைகள் மற்றும் உத்தரவாதங்களை பாஜகவின் தாய் அமைப்பான ஆா்எஸ்எஸும் ஏற்றுக்கொண்டது. ஆனால் பாஜகவின் பிரிவினை திட்டத்தை பூா்த்தி செய்வதற்காக அந்த நிபந்தனைகளும் உத்தரவாதங்களும் 2019-ஆம் ஆண்டு தகா்க்கப்பட்டன என்று தெரிவித்தாா். 2019-ஆம் ஆண்டு ஜம்மு-காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com