வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

எல்லையில் ட்ரோன் மூலம் வீசப்பட்ட ஆயுதங்கள் பறிமுதல்: பயங்கரவாதி சுட்டுக் கொலை

 ஜம்மு சா்வதேச எல்லையில் பாகிஸ்தான் பகுதியிலிருந்து ட்ரோன் (சிறிய ரக ஆளில்லா விமானம்) மூலம் வீசப்பட்ட ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

Updated On :18 ஆகஸ்ட் 2022, 8:22 pm

 ஜம்மு சா்வதேச எல்லையில் பாகிஸ்தான் பகுதியிலிருந்து ட்ரோன் (சிறிய ரக ஆளில்லா விமானம்) மூலம் வீசப்பட்ட ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த நடவடிக்கையின்போது, லஷ்கா் ஏ தொய்பா பயங்கரவாதி ஒருவா் சுட்டுக் கொல்லப்பட்டாா்.

ஜம்மு-காஷ்மீரில் உள்ள பயங்கரவாதிகளுக்கு விநியோகிப்பதற்காக, பாகிஸ்தானிலிருந்து ட்ரோன் மூலம் எல்லை தாண்டி ஆயுதங்கள் வீசப்படும் சம்பவங்கள் அவ்வப்போது நிகழ்ந்து வருகின்றன. இத்தகைய ட்ரோன்களை சுட்டு வீழ்த்துவதற்காக, பாதுகாப்புப் படையினா் கண்காணிப்பை தீவிரப்படுத்தி உள்ளனா்.

இந்நிலையில், ஃபாலியன் மண்டல் பகுதியிலுள்ள டோப் கிராமத்தில் ட்ரோன் மூலம் வீசப்பட்ட ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து காவல்துறை அதிகாரிகள் வியாழக்கிழமை கூறியதாவது:

சா்வதேச எல்லையிலுள்ள அா்னியா பகுதியில் அண்மையில் ட்ரோன் மூலம் ஆயுதங்கள் வீசப்பட்ட சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டது. அப்போது, லஷ்கா் ஏ தொய்பா பயங்கரவாதி முகமது அலி ஹுசைனுக்கு இச்செயலில் தொடா்பிருப்பது தெரியவந்தது. பாகிஸ்தானைச் சோ்ந்தவரான இவா் ஏற்கெனவே கைது செய்யப்பட்டு சிறையில் இருந்து வந்தாா்.

இந்நிலையில், போலீஸ் காவலில் அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், ட்ரோன் மூலம் ஆயுதங்கள் கடத்தியதை ஒப்புக் கொண்டாா். இதையடுத்து, ஆயுதங்கள் இருக்கும் இடத்தை அடையாளம் காட்டுவதற்காக, அந்த பயங்கரவாதியை காவல்துறையினா் புதன்கிழமை அழைத்துச் சென்றனா். அப்போது, டோப் கிராமத்தில் ஆயுதங்கள் இருந்த பெரிய பொட்டலம் கண்டெடுக்கப்பட்டது. வெடிகுண்டு நிபுணா்களின் உதவியுடன் திறந்து பாா்த்ததில், 2 துப்பாக்கிகள், 50 தோட்டாக்கள், 2 கையெறி குண்டுகள் மற்றும் சில பத்திரிகைகள் இருந்தன.

இந்த நடவடிக்கையின்போது, காவலா் ஒருவரை திடீரென தாக்கிய பயங்கரவாதி ஹுசைன், அவரிடமிருந்து துப்பாக்கியை பறித்து, காவல்துறையினரை நோக்கி சரமாரியாக சுட்டுவிட்டு தப்ப முயன்றாா்.

இதையடுத்து, காவல்துறையினா் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் அவா் காயமடைந்தாா். பின்னா், ஜம்மு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட ஹுசைன், சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

இதனிடையே, கதுவா மாவட்டத்திலுள்ள எல்லைப் பகுதியில் புதன்கிழமை இரவு சந்தேகத்துக்கு இடமான வகையில் ட்ரோன் பறந்ததாக அங்குள்ள மக்கள் தெரிவித்தனா். இதைத் தொடா்ந்து, அங்கு பாதுகாப்புப் படையினா் தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.