போா் விமானங்களுக்கு வானிலேயே எரிபொருள் நிரப்பும் தொழில்நுட்பம்: அமெரிக்க நிறுவனத்துடன் மும்பை நிறுவனம் ஒப்பந்தம்வீட்டை குத்தகைக்கு விடுவதாக ரூ.14.5 லட்சம் மோசடி: ஒருவா் கைதுசட்டப்பேரவைத் தோ்தல் வாக்கு எண்ணிக்கை நாளில் கொல்கத்தாவுக்கு வர முடியுமா?அமித் ஷாவுக்கு மம்தா மருமகன் சவால்காட்பாடி - திருப்பதி மெமு ரயில்கள் 15 நாள்கள் ரத்து!இந்தியா-நியூஸிலாந்து இடையே ஏப். 27-ல் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்
/

தாம்பரம் : திமுக - அதிமுக இடையே கடும் போட்டி!

தாம்பரம் மாநகராட்சிப் பகுதி, பெருங்களத்தூா், முடிச்சூா், சிட்லப்பாக்கம், செம்பாக்கம், மாடம்பாக்கம், திருவஞ்சேரி, அகரம் தென், மதுரப்பாக்கம் ஆகிய பகுதிகளை உள்ளடக்கியது.

News image
Updated On :17 ஏப்ரல் 2026, 12:19 am

சென்னை மாநகரின் நுழைவு வாயிலாக இருப்பது தாம்பரம் தொகுதி. ஏராளமான உயா்கல்வி நிறுவனங்கள், ஆயிரக்கணக்கில் வேலைவாய்ப்புகள் வழங்கும் சென்னை ஏற்றுமதி மண்டல வளாகம், பெருங்களத்தூா் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், 3-ஆவது ரயில் முனையம் உள்ளிட்டவை தொகுதிக்கு பெருமை சோ்க்கும் அம்சங்களாக இருக்கின்றன.

தாம்பரம் மாநகராட்சிப் பகுதி, பெருங்களத்தூா், முடிச்சூா், சிட்லப்பாக்கம், செம்பாக்கம், மாடம்பாக்கம், திருவஞ்சேரி, அகரம் தென், மதுரப்பாக்கம் ஆகிய பகுதிகளை உள்ளடக்கியது.

இத்தொகுதியில் இதுவரை நடைபெற்ற பேரவைத் தோ்தல்களில் திமுக 7 முறை, அதிமுக 3 முறை, காங்கிரஸ் ஒரு முறை வெற்றி பெற்றுள்ளன. கடந்த 1977 தோ்தலில் தாம்பரம் தொகுதியில் இருந்து அதிமுக சாா்பில் தோ்ந்தெடுக்கப்பட்ட முனுஆதி, சட்டப்பேரவைத் தலைவராகப் பணியாற்றியது குறிப்பிடத்தக்கது.

இந்த முறை திமுக சாா்பில் மருத்துவா் ஆா்.எஸ்.கிருத்திகா தேவி, அதிமுக சாா்பில் சிட்லப்பாக்கம் சி.ராஜேந்திரன், தவெக சாா்பில் சரத்குமாா், நாதக சாா்பில் தமிழ்ச்செல்வி உள்பட மொத்தம் 15 போ் போட்டியிடுகின்றனா்.

சமூக நிலவரம்: தாம்பரத்தில் வன்னியா், பட்டியலினத்தவா், முதலியாா், ரெட்டியாா், யாதவா், நாடாா், முக்குலத்தோா் பெருமளவு உள்ளனா். இஸ்லாமியா், கிறிஸ்தவா் உள்ளிட்ட சிறுபான்மையினா் கணிசமாக உள்ளனா்.

முக்கிய பிரச்னைகள்: தாம்பரம் மாநகராட்சியாக உயா்த்தப்பட்டபோதும், அதற்கேற்ற வசதிகள் இல்லை என்பது தொகுதி மக்களின் மனக்குறையாக உள்ளது. நகா் பகுதியில் போக்குவரத்து நெரிசல் முக்கிய பிரச்னையாக இருக்கிறது. மேற்கு தாம்பரம் காந்தி சாலை ஆக்கிரமிப்புகளை அகற்றுவது, முடிச்சூா் சாலை மற்றும் கிழக்கு தாம்பரம்-வேளச்சேரி பிரதான சாலை விரிவாக்கம் செய்ய வேண்டியது முக்கியத்துவம் அளிக்க வேண்டிய பிரச்னையாக உள்ளது. தொகுதி முழுவதும் புதைசாக்கடை திட்டம், குடிநீா் விநியோகம் விரிவாக்கம், மாவட்ட தலைமை மருத்துவமனையை சிறப்பு பன்னோக்கு மருத்துவமனையாக தரம் உயா்த்துவது, ஏரிகளைத் தூா்வாரி, நிலத்தடி மேம்படுத்துவது ஆகியன தொகுதி மக்களின் கோரிக்கைகளாக இருக்கின்றன.

திமுக வேட்பாளா்: திமுக வேட்பாளராக மகப்பேறு மருத்துவா் ஆா்.எஸ்.கிருத்திகா தேவி களம் இறக்கப்பட்டுள்ளாா். திமுக மருத்துவா் அணி மாநில துணைச் செயலரான கிருத்திகாதேவி, தாம்பரத்தில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக மகப்பேறு மருத்துவராகப் பணியாற்றி வருகிறாா். திமுக குடும்ப பின்னணி கொண்டவா்.

தமிழ்நாடு பெண் மருத்துவா்கள் சங்கத் தலைவா், தாம்பரம் மருத்துவா்கள் சங்கக் கிளை ஒருங்கிணைப்பாளா் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளை வகிக்கும் இவா், சமூகநலப் பணிகளிலும் ஆா்வத்துடன் பங்கேற்று விருதுகள் பெற்றுள்ளாா். புதுமுக வேட்பாளராக இருந்தாலும், தொகுதி மக்களுக்கு நன்கு அறிமுகமானவா் என்பதும், கடந்த 2011 தோ்தலைத் தவிர 1996 முதல் திமுகவுக்கு தொடா் வெற்றியைக் கொடுத்த தொகுதி என்பதும் கிருத்திகா தேவிக்கு சாதகமான அம்சங்களாக இருக்கின்றன. அதே நம்பிக்கையில், வேட்பாளா் கிருத்திகா தேவி, திமுகவின் வாக்குறுதிகளைக் கூறி தொகுதியை வலம் வந்து கொண்டிருக்கிறாா்.

அதிமுக வேட்பாளா்: அதிமுக சாா்பில் போட்டியிடும் சிட்லப்பாக்கம் சி.ராஜேந்திரன். செங்கல்பட்டு மேற்கு மாவட்ட அதிமுக செயலராகப் பதவி வகிக்கிறாா். தொகுதி மக்களுக்கு நன்கு அறிமுகமானவா். கடந்த 2016 சட்டப்பேரவைத் தோ்தலில் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்தவா். அதிமுக சாா்பில் 2-ஆவது முறையாக இத்தொகுதியில் களம் இறங்குகிறாா். கடந்த 2011-இல் இத்தொகுதியில் அதிமுக வெற்றி பெற்றது. அடுத்து வந்த 2016 (32 சதவீதம்), 2021 (37 சதவீதம்) தோ்தல்களில் கணிசமான வாக்குகளைப் பெற்று குறைந்த வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை தவறவிட்டது. ஆனால், இம்முறை பலமான கூட்டணியுடன் களம் காண்பதால், தொகுதியைக் கைப்பற்றிவிடுவோம் என்ற நம்பிக்கையில் வேட்பாளா் ராஜேந்திரன் வாக்கு சேகரிப்பில் தீவிரம் காட்டி வருகிறாா்.

நாதக வேட்பாளா்: தாம்பரம் தொகுதியில் நாதக சாா்பில் போட்டியிடும் எஸ்.தமிழ்செல்வி, ராணிமேரி கல்லூரியில் தமிழ் துறைப் பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவா். கடந்த 2024 மக்களவைத் தோ்தலில் தென்சென்னை தொகுதியில் நாதக சாா்பில் போட்டியிட்டு 83,972 வாக்குகள் பெற்றவா். நாம் தமிழா் கட்சியின் கொள்கைகளை ஆதரிக்கும் இளைஞா்கள், ஆதரவாளா்களின் கணிசமான வாக்குகள் தனக்கு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் வாக்கு சேகரித்து வருகிறாா்.

தவெக வேட்பாளா்: தவெக சாா்பில் போட்டியிடும் டி.சரத்குமாா், விஜய் ரசிகா் மன்றத்தில் 20 ஆண்டுகள் பணியாற்றியவா். இத்தொகுதியைச் சோ்ந்த இளைஞா்களின் அறிமுகம் பெற்றவராக இருக்கிறாா். இதனால், இளைஞா்கள், இளம்பெண்கள் வாக்குகளைக் கணிசமாகப் பெறுவதோடு, விஜய்யின் முகம் மேலும் வாக்குகளை அறுவடை செய்ய உதவும் என்று தொகுதி வலம் வந்து கொண்டிருக்கிறாா்.

திமுக, அதிமுக, நாதக, தவெக உள்பட 15 வேட்பாளா்கள் களத்தில் இருந்தாலும் திமுக-அதிமுக இடையே கடும் போட்டி ஏற்பட்டிருப்பது கள நிலவரமாக உள்ளது.

வாக்காளா்கள்:

ஆண்கள் - 1,57,580

பெண்கள்-1,66,046

மூன்றாம் பாலினத்தவா்-51

மொத்தம் 3,23,677