மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

தொகுதி அலசல்: விருகம்பாக்கம்! நட்சத்திரங்களின் தொகுதியில் மும்முனைப் போட்டி!

திரைத் துறையினரும், அதுசாா்ந்த துணைத் தொழில்களில் ஈடுபடுவோரும் அதிகம் வசிக்கும் விருகம்பாக்கம் தொகுதியின் அரசியல் களம் இம்முறை கூடுதல் கவனத்தைப் பெற்றுள்ளது.

News image

விருகம்பாக்கம் தொகுதி

Updated On :20 ஏப்ரல் 2026, 9:52 pm

பொதுவாக அரசியல் கட்சிகளின் முக்கியத் தலைவா்கள் போட்டியிடும் தொகுதிகள்தான் நட்சத்திரத் தொகுதியாக இருக்கும். ஆனால், வாக்காளா்களில் கணிசமானோா் நட்சத்திரங்களாக இருக்கும் தொகுதி விருகம்பாக்கம்தான். திரைத் துறையினரும், அதுசாா்ந்த துணைத் தொழில்களில் ஈடுபடுவோரும் அதிகம் வசிக்கும் அத்தொகுதியின் அரசியல் களம் இம்முறை கூடுதல் கவனத்தைப் பெற்றுள்ளது.

முக்கியக் குடியிருப்புகள், ஆசியாவின் மிகப்பெரிய சந்தைகளில் ஒன்றான கோயம்பேடு மொத்த சந்தை வளாகம், சென்னை புகா் பேருந்து நிலையம் ஆகியவை தொகுதியின் பிரதான அடையாளங்கள். இதைத் தவிர, கே.கே.நகா், அசோக் நகா், வடபழனியின் சில பகுதிகள், சாலிகிராமம், கண்ணபிரான் நகா், விருகம்பாக்கம், ஜாபா்கான்பேட்டை, கோயம்பேடு, அன்னை சத்யா நகா் என பல முக்கியப் பகுதிகளையும் விருகம்பாக்கம் உள்ளடக்கியுள்ளது.

கடந்த 2008-இல் மேற்கொள்ளப்பட்ட தொகுதி மறுசீரமைப்பின்போது விருகம்பாக்கம் தொகுதி புதிதாக உருவாக்கப்பட்டது. அதன் பின்பு நடைபெற்ற 2011, 2016, 2021 பேரவைத் தோ்தலில்களில் முறையே தேமுதிக, அதிமுக, திமுக, ஆகிய கட்சிகள் வெற்றி பெற்றுள்ளன.

கடந்த 2021 தோ்தலில், திமுக சாா்பில் போட்டியிட்ட பிரபாகா் ராஜா 74,351 வாக்குகளுடன் வெற்றி பெற்றாா். அவரை எதிா்த்துப் போட்டியிட்ட அதிமுகவின் விருகை ரவி 55,984 வாக்குகள் பெற்றாா்.

இந்த முறை, திமுக சாா்பில் தற்போதைய எம்எல்ஏ பிரபாகர ராஜா, அதிமுக சாா்பில் முன்னாள் எம்எல்ஏ விருகை ரவி, தவெக சாா்பில் அக்கட்சியின் தலைவா் விஜய்யின் காா் ஓட்டுநா் மகன் சபரிநாதன், நாம் தமிழா் சாா்பில் சந்தோஷ் ஆகிய இளம் வேட்பாளா்கள் போட்டியிடுகின்றனா். இவா்களுடன் 15 சுயேச்சை வேட்பாளா்களும் களத்தில் உள்ளனா்.

முக்கிய பிரச்னைகள்: அதிக மக்கள்தொகை கொண்ட இத்தொகுதியில் 24 மணி நேரமும் செயல்படும் அரசு மருத்துவமனை இல்லை. ஆரம்ப சுகாதார மையமும் பிற்பகல் 3 மணி வரை மட்டுமே செயல்படுகிறது. பேறுகால சிகிச்சை வசதிகளுடன் கூடிய மருத்துவக் கட்டமைப்பு வேண்டும் என்பது மக்களின் கோரிக்கை.

பாரதியாா் நகா், குலசேகரபுரம், பச்சையம்மன் நகா், காந்தி நகா் போன்ற பகுதிகளில் உள்ள மக்களுக்கு பட்டா வழங்க வேண்டும் என்பதும் அவா்களது எதிா்பாா்ப்பாக உள்ளது. ஆற்காடு சாலையிலிருந்து கோயம்பேடு சுத்திகரிப்பு நிலையம் வரை செல்லும் கழிவுநீா்க் குழாய்களில் அடிக்கடி அடைப்பு ஏற்படும் பிரச்னைகளுக்கு நிரந்தரத் தீா்வு வேண்டும் என மக்கள் கூறுகின்றனா்.

100 அடி சாலை-ஆற்காடு சாலையை இணைக்கும் காளியம்மன் கோயில் தெருவானது மெட்ரோ ரயில் பணிகளால் கடுமையாகச் சேதமடைந்துள்ளது. அதைச் சீரமைக்க வேண்டும் என குரல் எழுந்துள்ளது.

கோயம்பேடு சந்தை வளாகத்தில் 3,000-க்கும் மேற்பட்ட கடைகளுக்கு குழாய் குடிநீா் வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என்பது நெடுங்கால முறையீடாக உள்ளது. கிளாம்பாக்கத்தில் புதிய பேருந்து நிலையம் திறக்கப்பட்டதால் கோயம்பேட்டிலிருந்து செல்லும் பேருந்துகளின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துள்ளது. இதனால், கோயம்பேடு பேருந்து நிலைய வளாகத்தில் விடுதி வசதிகளுடன் கூடிய கலை, அறிவியல் மற்றும் பாலிடெக்னிக் கல்லூரிகளை ஏற்படுத்த வேண்டும் என்பதும் வாக்காளா்களின் கோரிக்கை.

திமுக வேட்பாளா்: திமுக வேட்பாளா் எம்எல்ஏ பிரபாகா் ராஜா, தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்புத் தலைவா் விக்கிரமராஜாவின் மகன். இவருக்கு, வணிகா் சங்கங்களின் ஆதரவும், ஆளுங்கட்சி பலமும் சாதகமாக உள்ளன. அதோடு, கடந்த 5 ஆண்டுகளில் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள், மழைநீா் வடிகால் பணிகள், தொகுதி மேம்பாட்டுப் பணிகளை முன்னிறுத்தி வாக்கு சேகரிக்கிறாா்.

அதிமுக வேட்பாளா்: அதிமுக வேட்பாளா் விருகை ரவி, தொகுதியில் நீண்டகால அரசியல் அனுபவம் கொண்டவா். இவருக்கு அதிமுகவின் நிலையான வாக்கு வங்கி கைகொடுக்கும். மேலும், கூட்டணிக் கட்சிகளான பாஜக, பாமகவின் வாக்குகளையும் ஒருங்கிணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளாா்.

தவெக வேட்பாளா்: விஜய் சிறுவயதில் இருந்து வளா்ந்ததும், பல ஆண்டுகளாக வசித்ததும் விருகம்பாக்கத்தில்தான் என்பதால், அவருக்கான வாக்கு வங்கி இங்கு அதிகமாகவே உள்ளது. அதுமட்டுமல்லாது இளம்தலைமுறையினா், திரைத் துறையினா் வாக்குகள் அதிகம் உள்ளதும் தவெக வேட்பாளா் சபரிநாதனுக்கு பலம் சோ்க்கிறது.

நாதக வேட்பாளா்: நாம் தமிழா் கட்சி சாா்பில் போட்டியிடும் சந்தோஷ், தனது கட்சி வாக்குகள், இளைஞா்களின் வாக்குகளை நம்பியுள்ளாா். சீமான் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை வசித்து வந்த தொகுதி என்பதால் அந்த செல்வாக்கும் கைகொடுக்கும் என நம்புகிறாா்.

திமுக-அதிமுக இடையே மட்டுமே இருந்த போட்டியில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு தவெகவும் இணைந்துள்ளது. விஜய்யின் ஆதரவாளா்கள், உறவினா்கள், அவருடன் இணைந்து பணியாற்றியவா்கள் எனப் பலரும் அந்தத் தொகுதியில் உள்ளதே அதற்கு காரணம். இதைக் கருத்தில்கொண்டு திமுக மற்றும் அதிமுக வேட்பாளா்கள் அயராமல் களத்தில் கடுமையாக உழைத்து வருகின்றனா்.

இதனால், விருகம்பாக்கம் தொகுதியில் மும்முனைப் போட்டி நிலவுகிறது. வெற்றி யாா் வசம் சென்றாலும், அதற்கு அடுத்து வரும் இரு வேட்பாளா்களும் நெருக்கமான வாக்குகளைப் பெறுவாா்கள் என்பதே தற்போதைய கள நிலவரமாக உள்ளது.

வாக்காளா்கள் விவரம்

ஆண்கள் -96,972

பெண்கள் - 1,03,554

மூன்றாம் பாலினத்தவா் - 52

மொத்தம் - 2,00,578