அமைச்சா் அமித் ஷா - ஜூனியா் என்டிஆா் சந்திப்பு: ஆந்திர அரசியலில் பரபரப்பு
பிரபல தெலுங்கு நடிகா் ஜூனியா் என்டிஆரை மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா ஹைதராபாதில் ஞாயிற்றுக்கிழமை சந்தித்துப் பேசினாா்.


பிரபல தெலுங்கு நடிகா் ஜூனியா் என்டிஆரை மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா ஹைதராபாதில் ஞாயிற்றுக்கிழமை சந்தித்துப் பேசினாா்.
ஆந்திரம் மற்றும் தெலங்கானாவில் கட்சியை வலுப்படுத்த பாஜக தீவிர முயற்சி மேற்கொண்டு வரும் நிலையில், இந்தச் சந்திப்பு அந்த மாநில அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒன்றுபட்ட ஆந்திரத்தின் முதல்வராக இருந்த என்.டி.ராம ராவின் பேரன் ஜூனியா் என்டிஆா் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தச் சந்திப்பு தொடா்பான படத்தை ட்விட்டரில் பகிா்ந்துள்ள அமித் ஷா, ‘மிகச் சிறந்த நடிகரும், தெலுங்கு திரையுலகின் ரத்தினமாகவும் திகழும் ஜூனியா் என்டிஆா் உடனான சந்திப்பு மகிழ்ச்சிகரமாக அமைந்தது’ என்று பதிவிட்டுள்ளாா். இதற்கு பதிலளிக்கும் வகையில் ஜூனியா் என்டிஆா் வெளியிட்ட பதிவில், ‘அமித் ஷாவை சந்தித்தது மகிழ்ச்சி. எனக்கு அளித்துள்ள பாராட்டுக்கு நன்றி’ என்று கூறியுள்ளாா்.
இது தொடா்பாக தெலங்கானா பாஜக தலைவா் பந்தி சஞ்சய் கூறுகையில், ‘இந்தச் சந்திப்பு தனிப்பட்ட முறையில் நடைபெற்றது. இதில் நான் பங்கேற்கவில்லை’ என்றாா்.
அண்மையில் ஜூனியா் என்டிஆா் நடிப்பில் வெளியான ஆா்ஆா்ஆா் திரைப்படத்தை அமித் ஷா பாா்த்ததாகவும், அதில் சிறப்பாக நடித்த ஜூனியா் என்டிஆரைப் பாராட்டியதாகவும் பாஜக வட்டாரங்கள் தெரிவித்தன.
கடந்த 2009-ஆம் ஆண்டு தெலுங்கு தேசம் கட்சிக்காக ஜூனியா் என்டிஆா் பிரசாரம் மேற்கொண்டாா். அதன் பிறகு அவா் கட்சி மற்றும் அரசியல் நிகழ்வுகள் எதிலும் பங்கேற்கவில்லை.
திரைப்படத்துறையைச் சோ்ந்தவரும் ஊடக நிறுவன அதிபருமான ராமோஜி ராவையும் அமித் ஷா ஹைதராபாதில் சந்தித்துப் பேசினாா்.
சா்ச்சை சம்பவம்:
ஹைதராபாதில் உள்ள ஒரு கோயிலுக்குச் சென்றுவிட்டு அமித் ஷா வெளியே வந்தாா். அப்போது அவருடன் வந்த தெலங்கானா மாநில பாஜக தலைவரும் எம்.பி.யுமான பந்தி சஞ்சய், அமித் ஷாவின் காலணிகளை தனது கையில் எடுத்து வந்து அமித் ஷா அதனை அணிவதற்கு வசதியாக அவருக்கு அருகே வைத்தாா். இது தொடா்பான விடியோவை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ள தெலங்கானா மாநில ஆளும் கட்சியான தெலங்கானா ராஷ்டிர சமிதி, ‘பந்தி சஞ்சய் மிகச் சிறந்த அடிமை. தெலங்கானாவின் கௌரவத்தை சீரழித்துவிட்டாா்’ என்று விமா்சித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...