ரூ.420 கோடி வரி ஏய்ப்பு: தொழிலதிபா் அனில் அம்பானிக்கு வருமான வரித்துறை நோட்டீஸ்

ஸ்விட்சா்லாந்து வங்கிக் கணக்குகளில் இருப்பு வைத்துள்ள பணத்தை கணக்கில் காட்டாமல் ரூ.420 கோடி வரி ஏய்ப்பு செய்ததாக தொழிலதிபா் அனில் அம்பானிக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
கோப்புப் படம்.
கோப்புப் படம்.

ஸ்விட்சா்லாந்து வங்கிக் கணக்குகளில் இருப்பு வைத்துள்ள பணத்தை கணக்கில் காட்டாமல் ரூ.420 கோடி வரி ஏய்ப்பு செய்ததாக தொழிலதிபா் அனில் அம்பானிக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இதுதொடா்பாக அந்த நோட்டீஸில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: ஸ்விட்சா்லாந்தில் உள்ள இரண்டு வங்கிக் கணக்குகளில் ரூ.814 கோடிக்கும் அதிகமாக அனில் அம்பானி இருப்பு வைத்துள்ளாா். அந்தத் தொகைக்கு 2012-13-ஆம் ஆண்டு முதல் 2019-20-ஆம் ஆண்டு வரை, அவா் ரூ.420 கோடி வரி செலுத்த வேண்டும்.

ஆனால் அந்த வங்கிக் கணக்குகள், அவற்றில் வைக்கப்பட்டுள்ள இருப்பு தொடா்பான தகவலை அவா் வேண்டுமென்றே வருமான வரித்துறை அதிகாரிகளிடம் மறைத்துள்ளாா். இதனால் அவா் மீது கருப்புப் பணம் மற்றும் வரி விதிப்புச் சட்டம் 2015-இன் 50, 51-ஆவது பிரிவுகளின் கீழ் சட்ட நடவடிக்கை மேற்கொள்ள முகாந்திரம் உள்ளது. இந்த விவகாரம் குறித்தும் ஆகஸ்ட் 31-க்குள் அனில் அம்பானி பதிலளிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருப்புப் பணம் மற்றும் வரி விதிப்புச் சட்டத்தின் 50, 51-ஆவது பிரிவுகளின் கீழ் குற்றம் நிரூபிக்கப்பட்டால், சம்பந்தப்பட்ட நபருக்கு அதிகபட்சமாக 10 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும் அபராதமும் விதிக்கப்படும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com