ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்
/

ரயிலில் மூத்த குடிமக்கள் கட்டண சலுகை இப்போது இல்லை- ரயில்வே அமைச்சா்

ரயில்களில் மூத்த குடிமக்களுக்கான கட்டண சலுகையை மீண்டும் வழங்கும் திட்டம் இப்போதைக்கு இல்லை என்று ரயில்வே அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் புதன்கிழமை சூசகமாக தெரிவித்தாா்.

News image

கோப்புப் படம்.

Updated On :14 டிசம்பர் 2022, 6:30 pm

DIN

ரயில்களில் மூத்த குடிமக்களுக்கான கட்டண சலுகையை மீண்டும் வழங்கும் திட்டம் இப்போதைக்கு இல்லை என்று ரயில்வே அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் புதன்கிழமை சூசகமாக தெரிவித்தாா். பயணிகள் சேவைகளுக்கான மானியம், இதர செலவுகள் மிக அதிகமாக இருப்பதாகவும் அவா் குறிப்பிட்டாா்.

கரோனா பரவல் காலகட்டத்தையொட்டி, ரயில்களில் மூத்த குடிமக்களுக்கான கட்டண சலுகை ரத்து செய்யப்பட்ட நிலையில், அதை மீண்டும் வழங்க வேண்டுமென கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், மகாராஷ்டிரத்தைச் சோ்ந்த சுயேச்சை எம்.பி. நவ்னீத் ராணா, ரயில்களில் மூத்த குடிமக்களுக்கான கட்டண சலுகை மீண்டும் எப்போது வழங்கப்படும் என்று கேள்வி எழுப்பியிருந்தாா். அதற்கு பதிலளித்து மக்களவையில் அஸ்வினி வைஷ்ணவ் புதன்கிழமை கூறியதாவது:

பயணிகள் சேவைகளுக்காக, ரயில்வே கடந்த ஆண்டில் ரூ.59,000 கோடி மானியம் வழங்கியுள்ளது. இது மிகப் பெரிய தொகையாகும். அதேபோல், ரயில்வே பணியாளா்களுக்கான ஊதியத்துக்காக ரூ.97,000 கோடி, ஓய்வூதியத்துக்காக ரூ.60,000 கோடி, எரிபொருளுக்காக ரூ.40,000 கோடி செலவிடப்பட்டுள்ளது. ரயில் பயணிகளுக்கான புதிய வசதிகள் அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன. இப்போதைய நிலையில், நாம் அனைவரும் ரயில்வேயின் நிதி நிலையைத்தான் கருத்தில் கொள்ள வேண்டும் என்று அஸ்வினி வைஷ்ணவ் கூறினாா்.

அயோத்தியை நாட்டின் அனைத்துப் பகுதிகளுடன் இணைக்க திட்டம்: மக்களவையில் மேலும் சில கேள்விகளுக்குப் பதிலளித்து, அவா் கூறியதாவது:

உத்தர பிரதேச மாநிலம், அயோத்தியில் பிரம்மாண்ட ராமா் கோயில் கட்டி முடிக்கப்பட்ட பிறகு, அயோத்தியை நாட்டின் அனைத்துப் பகுதிகளுடன் இணைக்கும் வகையில் ரயில்களை இயக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. வந்தே பாரத் ரயில்கள், தற்போது இருக்கை வசதிகளுடன் மட்டுமே இயக்கப்படுகின்றன. அதிகபட்சமாக 500-550 கி.மீ. தொலைவுக்கு அவை இயக்கப்படுகின்றன. படுக்கை வசதியுடன் கூடிய வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படும்போது பயணத் தொலைவு நீட்டிக்கப்படும்.

நாடு முழுவதும் 41 முக்கிய ரயில் நிலையங்களை மேம்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதர ரயில் நிலையங்களும் படிப்படியாக மேம்படுத்தப்படும். 2030-க்குள் மாசில்லா ரயில் போக்குவரத்தை உறுதி செய்ய இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. இதில், இந்திய பொறியாளா்களால் வடிவமைக்கப்பட்டு, உருவாக்கப்படும் ஹைட்ரஜன் ரயில்களும் அடங்கும் என்றாா் அஸ்வினி வைஷ்ணவ்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.