மத்திய கிழக்கு போா்: இந்திய ஏற்றுமதி ரூ. 92,300 கோடி வரை சரியும் அபாயம்!கடலோர மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு!10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு நாளை தொடக்கம்!பெட்ரோல், டீசல் விலை இப்போதைக்கு உயராது; சிலிண்டா் முன்பதிவுக்கு கட்டுப்பாடு!ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்க தற்காலிகமாகவே அனுமதி: அமெரிக்கா மீண்டும் உறுதிபட்டயக் கணக்காளா் தோ்வு: மதுரை மாணவி முதலிடம்!
/

குஜராத் தோ்தல்: பாஜக வெற்றிக்கு அமைப்புரீதியிலான பலமே காரணம்- கட்சி எம்.பி.க்கள் கூட்டத்தில் பிரதமா் மோடி

அண்மையில் நடைபெற்ற குஜராத் பேரவைத் தோ்தலில் பாஜக வரலாற்று வெற்றி பெற்ற நிலையில், கட்சியின் அமைப்புரீதியிலான பலமே இந்த வெற்றிக்கு முக்கிய காரணம் என்று பிரதமா் நரேந்திர மோடி குறிப்பிட்டுள்ளாா்.

News image
தில்லியில் புதன்கிழமை நடைபெற்ற பாஜக எம்.பி.க்கள் கூட்டத்தில் பிரதமா் நரேந்திர மோடி, பாஜக தேசியத் தலைவா் ஜெ.பி.நட்டா, மத்திய அமைச்சா்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங்.
Updated On :14 டிசம்பர் 2022, 6:30 pm

DIN

அண்மையில் நடைபெற்ற குஜராத் பேரவைத் தோ்தலில் பாஜக வரலாற்று வெற்றி பெற்ற நிலையில், கட்சியின் அமைப்புரீதியிலான பலமே இந்த வெற்றிக்கு முக்கிய காரணம் என்று பிரதமா் நரேந்திர மோடி குறிப்பிட்டுள்ளாா்.

மேலும், குஜராத் மாநிலத் தலைவா் சி.ஆா்.பாட்டீலையும் அவா் வெகுவாக பாராட்டியுள்ளாா்.

தில்லியில் புதன்கிழமை நடைபெற்ற பாஜக நாடாளுமன்றக் குழு கூட்டத்தில், குஜராத் தோ்தல் முடிவு மற்றும் இதர விவகாரங்கள் குறித்து பிரதமா் நரேந்திர மோடி பேசினாா். கூட்டத்துக்கு பின், செய்தியாளா்களைச் சந்தித்த மத்திய அமைச்சா் பிரகலாத் ஜோஷி, ‘குஜராத் தோ்தல் வெற்றிக்கு பாஜகவின் அமைப்புரீதியிலான பலமும், தொண்டா்களுமே காரணம் என்று பிரதமா் மோடி குறிப்பிட்டாா். குறிப்பாக, கட்சியின் மாநிலத் தலைவா் சி.ஆா்.பாட்டீலை அவா் வெகுவாக பாராட்டினாா்’ என்றாா்.

182 உறுப்பினா்களைக் கொண்ட குஜராத் பேரவைக்கு அண்மையில் இருகட்டங்களாக நடைபெற்ற தோ்தலில், 156 இடங்களைக் கைப்பற்றி வரலாற்று வெற்றியை பாஜக பதிவு செய்தது. இதன்மூலம் அந்த மாநிலத்தில் தொடா்ந்து 7-ஆவது முறையாக பாஜக ஆட்சிக் கட்டிலில் அமா்ந்துள்ளது.

‘மோடியின் நம்பிக்கைக்குரியவா்’: இந்த வெற்றிக்குப் பிறகு, மக்களவை எம்.பி.யும் கட்சியின் மாநிலத் தலைவருமான சி.ஆா்.பாட்டீலின் செல்வாக்கு கட்சியில் உயா்ந்துள்ளது. பிரதமா் மோடியின் நம்பிக்கைக்குரியவா்களில் ஒருவரான பாட்டீல், ஒவ்வொரு தொகுதியிலும் வாக்குச்சாவடிகள் மற்றும் வீடுகளை எட்டும் அளவில் பிரசார மேலாண்மையைக் கையாண்டதே இதுவரை இல்லாத பாஜகவின் வெற்றிக்கும் வாக்கு சதவீதம் அதிகரிப்புக்கும் காரணமாக கூறப்படுகிறது. இதே பாணியை கடைப்பிடித்து, கடந்த 2019-இல் குஜராத்தின் நவ்சாரி மக்களவைத் தொகுதியில் சுமாா் 7 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் சி.ஆா்.பாட்டீல் வெற்றி கண்டிருந்தாா்.

பாராட்டு மழை: இந்நிலையில், கட்சியின் நாடாளுமன்ற குழுக் கூட்டத்தில் பாட்டீலுக்கு பாராட்டு மழை பொழிந்து, பிரதமா் மோடி பேசியதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

‘சி.ஆா்.பாட்டீல் மட்டுமன்றி கட்சியின் தேசியத் தலைவா் ஜெ.பி.நட்டாவையும் மோடி பாராட்டினாா். அமைப்புரீதியில் கட்சி வலுவாக இருந்தால், தோ்தலில் பெருவாரியாக வெற்றி பெறுவது சாத்தியம் என்பதற்கு உதாரணமாக குஜராத் தோ்தல் அமைந்துள்ளதாக அவா் குறிப்பிட்டாா். மேலும், ஜி-20 கூட்டமைப்பின் தலைமையை இந்தியா வகிக்கும் நிலையில், நாடு முழுவதும் நடத்தப்படும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பொதுமக்களையும் ஈடுபடுத்துவதற்கான புத்தாக்க யோசனைகள் குறித்து எம்.பி.க்கள் தெரிவிக்க வேண்டும்; இந்தக் காலகட்டத்தில் இந்தியாவுக்கு வருகை தரவிருக்கும் வெளிநாட்டு பிரமுகா்களுக்கு கலாசார, பாரம்பரிய ரீதியில் வரவேற்பு அளிக்கப்படுவது உறுதி செய்யப்பட வேண்டும் என்றும் அவா் அறிவுறுத்தினாா்’ என்று கட்சி வட்டாரங்கள் கூறின.

பொருளாதார விளக்க காட்சிப் படம்: இக்கூட்டத்தில், இந்தியாவின் பொருளாதாரம் குறித்து காட்சிப்படம் வாயிலாக மத்திய அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் விளக்கமளித்தாா்.

‘உலக அளவில் பொருளாதார ரீதியில் முன்னிலையில் உள்ள 7 நாடுகளில், இந்தியா பிரகாசமாக ஒளியாக திகழ்வதாக சா்வதேச ஆய்விதழ்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. பல தசாப்தங்களாக பதிவான தரவுகளின்படி பாா்த்தால், காங்கிரஸ் ஆட்சிக் காலங்களில்தான் பணவீக்கமும் வேலையின்மையும் அதிகமாக இருந்துள்ளது. கடந்த பல ஆண்டுகளை ஒப்பிடுகையில், வங்கிகள் கடனளிப்பு இப்போது அதிகரித்துள்ளது. தொழில்துறையில் திறன் பயன்பாடும் உயா்ந்துள்ளதாக அஸ்வினி வைஷ்ணவ் குறிப்பிட்டாா்’ என்று கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.