

கர்நாடகா: சீனா, அமெரிக்கா, ஜப்பான், தென் கொரியா, பிரேசில் போன்ற நாடுகளில் கரோனா பாதிப்பு புதிதாக அதிகரித்து வரும் சூழலில், நாட்டில் கரோனா பாதிப்பு அதிகரிக்கும் அபாயம் இருக்கிறதா என்பது குறித்து சுகாதாரத் துறை நிபுணர்கள் தங்களது கருத்துகளை பகிர்ந்து வருகிறார்கள்.
உலகின் பல பகுதிகளில் மீண்டும் கரோனா பாதிப்பு அதிகரித்துவருவதால், மக்கள் அனைவரும் கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கைகொள்ளுமாறு அறிவுறுத்தியிருக்கிறார்கள்.
இதையும் படிக்க.. ரூ.60 கோடி சொத்துக்காக.. மனைவிகளைக் கொன்ற சகோதரர்கள்
அதேவேளையில், நாடு தற்போது மிகப் பாதுகாப்பாகவே உள்ளது. ஆனால், மக்கள் எச்சரிக்கையுடன் இருந்தால்தான் அது நீடிக்கும் என்றும் வலியுறுத்தியிருக்கிறார்கள்.
கர்நாடக சுகாதாரத் துறை அமைச்சர் டாக்டர் கே. சுதாகர் கூறுகையில், நாடு முழுவதும் தடுப்பூசி திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டதால், நாடு தற்போது பாதுகாப்பாகவே உள்ளது. கூடுதல் தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள் மட்டும் தயவுகூர்ந்து தடுப்பூசியை செலுத்திக் கொள்ளுங்கள் என்று வலியுறுத்தியிருக்கிறார்.
புதிய வகை கரோனா வைரஸ் எங்கேயும் பரவுகிறதா என்பது குறித்து ஆராயப்பட்டு வருகிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
உலகம் முழுவதும் கரோனா அதிகரித்து வரும் நிலையில், நாட்டில் கரோனா பாதிப்பு நிலவரம் குறித்து மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் மன்சுக் மாண்டவியா இன்று ஆய்வு மேற்கொண்டார்.
முன்னதாக, ‘புதிய உருமாற்ற கரோனா தீநுண்மி வகையை கண்டறிவதற்காக, பாதிப்புக்குள்ளானவா்களின் மாதிரிகளில் மரபணு வரிசைப்படுத்துதல் ஆய்வைத் தீவிரப்படுத்த வேண்டும்’ என்று அனைத்து மாநிலங்களையும் மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் செவ்வாய்க்கிழமை கேட்டுக்கொண்டிருந்தது.
இதுதொடா்பாக மத்திய சுகாதாரத் துறைச் செயலா் ராஜேஷ் பூஷண் அனைத்து மாநிலங்களுக்கும் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:
கரோனா பரிசோதனை, தொடா்பைக் கண்டறிதல், சிகிச்சை அளித்தல், தடுப்பூசி செலுத்துதல் மற்றும் கரோனா பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்றுதல் என்ற 5 அடுக்கு தடுப்பு நடவடிக்கைத் திட்டத்தில் இந்தியா தீவிர கவனம் செலுத்தி வருவதன் மூலமாக, கரோனா பரவல் வெகுவாகக் கட்டுப்படுத்தப்பட்டு, நாடு முழுவதும் வாரத்துக்கு சராசரியாக 1,200 பாதிப்புகள் என்ற அளவுக்கு குறைக்கப்பட்டுள்ளது.
உலக நாடுகளில் கரோனா பொது சுகாதார சவால் தொடா்ந்து வரும் நிலையில், வாரத்துக்கு உலக அளவில் 35 லட்சம் பாதிப்புகள் பதிவாகின்றன. சீனா, அமெரிக்கா, ஜப்பான், தென் கொரியா, பிரேசில் போன்ற நாடுகளில் கரோனா பாதிப்பு புதிதாக அதிகரித்து வரும் நிலையில், நாட்டில் புதிய உருமாற்ற கரோனா தீநுண்மி வகையை கண்டறியும் வகையில் பாதிப்புக்குள்ளானவா்களின் மாதிரிகளில் மரபணு வரிசைப்படுத்துதல் ஆய்வைத் தீவிரப்படுத்த வேண்டியது அவசியமாகும்.
எனவே, அனைத்து மாநிலங்களும் கரோனா பாதிப்புக்குள்ளானவா்களின் மாதிரிகளை தினசரி அடிப்படையில் அங்கீகரிக்கப்பட்ட மரபணு வரிசைப்படுத்துதல் ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. அதன் மூலமாக, புதிய உருமாற்ற வகையைக் கண்டறிந்து தேவையான பொது சுகாதார தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும் என்று ராஜேஷ் பூஷண் தெரிவித்திருந்தார்.
கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டங்கள் வரவிருப்பதால், அதிகளவில் மக்கள் ஒரேயிடத்தில் கூடுவதற்கு வாய்ப்பிருப்பதால், அதற்கு கட்டுப்பாடுகள் விதிக்க நேரிடுமோ என்ற கேள்விக்கு, தற்போதைக்கு கட்டுப்பாடுகள் விதிக்க அவசியமில்லை. நிலைமையை கவனமாக உற்றுநோக்க வேண்டியதுதான் அவசியம் என்று டாக்டர் சுதாகர் தெரிவித்துள்ளார்.
கொல்கத்தாவைச் சேர்ந்த டாக்டர் அரிந்தம் பாண்டே கூறுகையில், சீனத்தில் கரோனா கட்டுப்பாடு திட்டம் தோல்வியடைந்துள்ளது. கரோனா தடுப்பூசி மட்டும் 100 சதவீத பாதுகாப்பைக் கொடுத்துவிடாது. நிலைமையை சரியாக கண்காணித்துத் தேவையான நடவடிக்கையை எடுக்க சீன அரசு தவறிவிட்டது. கரோனா வைரஸ் உருமாறிக் கொண்டே இருக்கிறது. எனவே, எதிர்காலத்தை மிகத் துல்லியமாகக் கணிக்க முடியாது என்று தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.