மிகப் பழைய டெக்னிக் மூலம் தங்கச் சங்கிலியை மீட்ட காவல்துறை; குவியும் பாராட்டு

பழைய டெக்னிக்கைப் பயன்படுத்தி, காவல்துறையினர் ஐந்து சவரன் தங்கச் சங்கிலியை மீட்டுக் கொடுத்துள்ளனர்.
மிகப் பழைய டெக்னிக் மூலம் தங்கச் சங்கிலியை மீட்ட காவல்துறை; குவியும் பாராட்டு
மிகப் பழைய டெக்னிக் மூலம் தங்கச் சங்கிலியை மீட்ட காவல்துறை; குவியும் பாராட்டு


சென்னை: உறவுகள் அல்லது குழந்தைகள் தெரியாமல் அல்லது ஆசைப்பட்டு ஏதேனும் பொருளைத் திருடிவிட்டால், அவர்களுக்கு திருடர் பட்டம் கட்டக்கூடாது என்பதற்காக ஒரு டெக்னிக் பயன்படுத்தப்படும். அந்த பழைய டெக்னிக்கைப் பயன்படுத்தி, காவல்துறையினர் ஐந்து சவரன் தங்கச் சங்கிலியை மீட்டுக் கொடுத்துள்ளனர்.

சென்னையில் புதுப்பேட்டை ஆரம்ப சுகாதார மையத்தில் பணியாற்றி வரும் பெண் உதவியாளர், டிசம்பர் 17ஆம் தேதி, இரவு பணியின்போது, மருத்துவமனையில் தான் உறங்கிக் கொண்டிருந்த போது, கழுத்திலிருந்த 5 சவரன் தங்கச் சங்கிலி காணாமல் போனதாக எழும்பூர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.

எழும்பூர் காவல்நிலையத்தின் காவல் ஆய்வாளர் (குற்றவியல்) இசக்கி பாண்டியன், விசாரணையைத் தொடங்கினார். முதற்கட்ட விசாரணையில், ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு, அன்று இரவு வெளியிலிருந்து யாரும் வரவில்லை என்பது சிசிடிவி காட்சிகள் மூலம் உறுதி செய்துகொண்டார். இதையடுத்து, அன்றைய நாள் இரவில் பணியில் இருந்த 11 பேரில் ஒருவர்தான் நகையைத் திருடியிருப்பார்கள் என்பது உறுதியானது.

இதையடுத்து, குழந்தைகள் ஏதேனும் ஒரு பொருளை திருடிவிட்டால் பழைய காலத்தில் நமது முன்னோர்கள் பயன்படுத்திய ஒரு திட்டத்தை பாண்டியன் செயல்படுத்த திட்டமிட்டார். அதன்படி, மருத்துவமனையின் ஒரு காலி அறையில், ஒரு பையை வைத்து விட்டு, அந்த அறைக்குள் 11 ஊழியர்களும் சென்று வர வேண்டும் என்றும் நகையை யார் திருடியிருந்தாலும் அந்தப் பையில் போட்டுவிடலாம் என்றும் ஒரு வாய்ப்புக் கொடுத்தார்.

அதன்படி, 11 பேரும் அந்த அறைக்குள் சென்று வந்த பிறகு, அந்த பையில் காணாமல் போன தங்கச் சங்கிலி இருந்தது. அதனை பெண் உதவியாளர் உஷாவிடம் காவல்துறை ஆய்வாளர் இசக்கிப் பாண்டியன் வழங்கினார்.

இது குறித்து காவல்துறை தரப்பில் கூறப்படுவது என்னவென்றால், ஊழியர்கள்தான் எடுத்திருப்பார்கள் என்பது உறுதி செய்யப்பட்டது. ஒரு வேளை காவல்துறை விசாரணை நடத்தி திருடிய நபரை அடையாளம் கண்டால், அவருக்கு பணிப் பிரச்னை ஏற்படும். வேலையை விட்டே வெளியேற்ற நேரிடலாம். வேறு எங்கும் வேலைக்குச் செல்ல முடியாமல் கூட போகலாம். எனவே, யாருக்கும் பிரச்னை வராமல் திருடியப் பொருளை ஒப்படைக்க வைக்க வேண்டும் என்று நினைத்தே இவ்வாறு செய்ததாகவும், குற்றவாளி யாராக இருந்தாலும் நிச்சயம் இதன் மூலம் ஒரு பாடம் கற்றுக் கொண்டு இனி இதுபோன்ற செயலில் ஈடுபட மாட்டார் என்றும், அவர்களுக்கு உரிய அறிவுறுத்தலும் காவல்துறை தரப்பில் கூறப்பட்டதாகவும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com