”அதிகாலையில் ஏன் வந்தேன் தெரியுமா? “ மருத்துவரிடம் பேசிய ரிஷப் பந்த்

கார் விபத்தில் பலத்த காயமடைந்த இந்திய அணியின் கிரிக்கெட் வீரர் ரிஷப் பந்த் அதிகாலையில் காரில் பயணம் செய்தது ஏன் என மருத்துவரிடம் தெரிவித்துள்ளார்.
”அதிகாலையில் ஏன் வந்தேன் தெரியுமா? “ மருத்துவரிடம் பேசிய ரிஷப் பந்த்
Published on
Updated on
2 min read

கார் விபத்தில் பலத்த காயமடைந்த இந்திய அணியின் கிரிக்கெட் வீரர் ரிஷப் பந்த் அதிகாலையில் காரில் பயணம் செய்தது ஏன் என மருத்துவரிடம் தெரிவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் வீரா் ரிஷப் பந்த் நேற்று (டிசம்பர் 30) நோ்ந்த காா் விபத்தில் பலத்த காயமடைந்தாா்.

உத்தரகண்ட் மாநிலம் ரூா்கியில் உள்ள தனது தாயை பார்க்க தில்லியில் இருந்து ரிஷப் பந்த் நேற்று (டிசம்பர் 30) அதிகாலை காரில் சென்றார். அந்த மாநிலத்தின் மங்லெளா் பகுதி வழியாக சென்றபோது எதிர்பாராதவிதமாக ரிஷப் பந்தின் கட்டுப்பாட்டை இழந்த கார், சாலை தடுப்பில் மிக வேகமாக மோதி விபத்துக்குள்ளானது. அவா் உறங்கியதால் இந்த விபத்து நிகழ்ந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

இந்த விபத்தை நேரில் கண்ட அரசு பேருந்து ஓட்டுநா் ஒருவா் கூறுகையில், ‘கார் விபத்துக்குள்ளானதை கண்டு அருகில் சென்றபோது, அதில் தீப்பொறிகள் ஏற்பட்டிருந்தன. உடனடியாகக் காரில் இருந்த நபரை வெளியே இழுத்து சாலையில் கிடத்தினோம். அவா் யார் என்பது எனக்குத் தெரியாது. ஆனால் அவா் கிரிக்கெட் வீரா் என்று என்னுடன் வந்த நடத்துநா் தெரிவித்தார்’ என்று கூறினார்.

இந்த விபத்தில் ரிஷப் பந்தின் தலை, முதுகு, காலில் காயங்கள் ஏற்பட்டது. விபத்துக்குள்ளான கார் முழுமையாகத் தீப்பிடித்து உருக்குலைந்தது. விபத்து தொடா்பாக வெளியான காணொலியில், பந்தின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு அதிக அளவில் ரத்தம் வழியும் காட்சிகள் இடம்பெற்றன. 

இந்த விபத்தைத் தொடா்ந்து ரூா்கியில் உள்ள மருத்துவமனையில் முதல்கட்ட சிகிச்சைக்காக பந்த் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா் கூறுகையில், ‘பந்துக்கு தீக்காயமோ, எலும்பு முறிவுவோ ஏற்படவில்லை. எனினும் வலது காலில் தசைநார் கிழிந்துள்ளது. அந்தக் காயம் எந்த அளவுக்கு கடுமையானது என்பது விரிவான பரிசோதனைக்குப் பிறகே தெரியவரும்’ என்று தெரிவித்திருந்தார். 

இதனைத் தொடா்ந்து, மேல் சிகிச்சைக்காக டேராடூனில் உள்ள மருத்துவமனைக்கு பந்த் அனுப்பி வைக்கப்பட்டார். அவரின் உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவா்கள் தெரிவித்தனர்.

இந்த நிலையில், ரிஷப் பந்த் அதிகாலையில் காரில் பயணம் செய்தது ஏன் என மருத்துவரிடம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து ரிஷப் பந்த்-க்கு சிகிச்சையளிக்கும் மருத்துவர் சுஷில் நாகர் கூறியதாவது: மருத்துவமனையில் ரிஷப் பந்த் அனுமதிக்கப்பட்டபோது அவரது நிலை மோசமாக இருந்தது. எங்களது மருத்துவர்கள் குழு அவருக்கு உடனடியாக சிகிச்சை அளித்தது. அவருக்கு நிழற்படங்கள் (எக்ஸ்-ரே) எடுக்கப்பட்டது. அவருக்கு எலும்பு முறிவு எதுவும் இல்லை. ஏன் அதிகாலையில் காரில் பயணம் மேற்கொண்டீர்கள் என அவரிடம் நான் கேட்டேன். அதற்கு அவர் தனது தாயினை ஆச்சர்யப்படுத்துவதற்காக அதிகாலையில் பயணம் மேற்கொண்டதாக தெரிவித்தார் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com