/

எஃகு இறக்குமதிக்கு வரி குறைப்பு ஏன்?: திமுக எம்.பி. கேள்விக்கு மத்திய அமைச்சர் பதில்

எஃகு பொருள்களின் விலையைக் கட்டுப்பாட்டில் வைக்கவே அதற்கான இறக்குமதி வரியை வரும் 2022-23-ஆம் ஆண்டின் நிதிநிலை அறிக்கையில் மத்திய அரசு நீக்கியுள்ளதாக மத்திய எஃகு துறை அமைச்சர்

News image
Updated On :10 பிப்ரவரி 2022, 10:24 pm

தினமணி

புது தில்லி: எஃகு பொருள்களின் விலையைக் கட்டுப்பாட்டில் வைக்கவே அதற்கான இறக்குமதி வரியை வரும் 2022-23-ஆம் ஆண்டின் நிதிநிலை அறிக்கையில் மத்திய அரசு நீக்கியுள்ளதாக மத்திய எஃகு துறை அமைச்சர் ராம்சந்திர பிரசாத் சிங் மக்களவையில் தெரிவித்தார். 

இந்திய எஃகு துறையின் நீடித்த வளர்ச்சிக்கான திட்டங்கள், சீனா, இந்தோனேசியா போன்ற நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் எஃகு பொருள்களுக்கு இறக்குமதி வரி ஏன் குறைக்கப்பட்டது? போன்ற கேள்விகளை திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் டி.ஆர்.பாலு மக்களவையில் எழுப்பினார்.

இதற்கு மத்திய எஃகு துறை அமைச்சர் ராம்சந்திர பிரசாத் சிங் பதிலளித்து, கூறியதாவது: இரும்புத் தாது உற்பத்தியைப் பெருக்க, சுரங்கக் கொள்கையில் தேவையான சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. உள்நாட்டில் தயாரிக்கப்படும் எஃகுப் பொருள்களுக்குத் தேவையான பாதுகாப்பை அளிக்க முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளன. எஃகு கழிவுகளை வெளியேற்றத் தேவையான கொள்கை முடிவுகளையும், தரமில்லாத எஃகு இறக்குமதியைத் தடுக்கவும் உரிய கண்காணிப்பு நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது.

சிறு, குறு தொழில்களுக்கு உதவி செய்யும் வகையில், எஃகு கழிவுகளுக்கு வரிச் சலுகை அளிக்கப்பட்டுள்ளதோடு, தரமான எஃகு பொருள்களின் உற்பத்தியைப் பெருக்க 145 பொருள்களுக்குத் தேவையான தரச்சான்றிதழ்கள் இறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், 2022-23-ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில், சீனா, இந்தோனேசியா போன்ற நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் எஃகு பொருள்களுக்கான இறக்குமதி வரி நீக்கப்பட்டுள்ளது. இதற்கு முக்கிய காரணம், எஃகு பொருள்களின் விலையை கட்டுப்பாட்டில் வைக்கும் முயற்சியாக மத்திய அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது என்றார் அவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.