/

ஐஏஎஸ் விதி மாற்றம் கூட்டாட்சி மீதான தாக்குதல்: பிரதமருக்கு மாநிலங்களவை உறுப்பினர்கள் கடிதம்

அகில இந்திய ஆட்சிப்பணி விதிகளில் கொண்டுவர உத்தேசிக்கப்பட்டுள்ள திருத்தங்கள், மாநில ஆளுநர்களின் குறுக்கீடுகள் ஆகியவை கூட்டாட்சியின் மீதான தாக்குதல்கள் எனக் கூறி இதற்கு எதிராக

News image
Updated On :10 பிப்ரவரி 2022, 9:44 pm

தினமணி


புது தில்லி: அகில இந்திய ஆட்சிப்பணி விதிகளில் கொண்டுவர உத்தேசிக்கப்பட்டுள்ள திருத்தங்கள், மாநில ஆளுநர்களின் குறுக்கீடுகள் ஆகியவை கூட்டாட்சியின் மீதான தாக்குதல்கள் எனக் கூறி இதற்கு எதிராக எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த 21 மாநிலங்களவை உறுப்பினர்களும், ஓய்வு பெற்ற 38 முன்னாள் ஐஏஎஸ் அதிகாரிகளும் பிரதமர் நரேந்திர மோடிக்கு கூட்டுக் கடிதம் எழுதியுள்ளனர்.
"நாங்கள் ஒருமித்த கருத்துடன் ஒன்றிணைந்துள்ளோம். மாநிலங்களின் களத்தில் நடத்தப்படும் ஆபத்தான, இடைவிடாத சீரழிவுகளை உடனடியாக நிறுத்த வேண்டும். ஒருதலைப்பட்ச உத்தரவுகளை வழங்குவதற்குப் பதிலாக, கூட்டாட்சி அடிப்படையில் ஆலோசனைகளை கண்டிப்பாகத் தேவைப்படும் விஷயங்களில் மாநிலங்களுடன் மத்திய அரசு விவாதிக்கப்பட வேண்டும்' என அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. 
அந்தக் கடிதத்தில், மாநிலங்களவையைச் சேர்ந்த திமுக உறுப்பினர் திருச்சி சிவா, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஜெய்ராம் ரமேஷ், சிவசேனையைச் சேர்ந்த சஞ்சய் ரவுட்,  திரிணமூல் காங்கிரஸ், சமாஜ்வாதி கட்சி, இந்திய கம்யூனிஸ்ட்  கட்சி, ஆம் ஆத்மி கட்சி உள்ளிட்ட 10 கட்சிகளைச் சேர்ந்த 21 மாநிலங்களவை உறுப்பினர்களும்,  ஓய்வு பெற்ற 38 ஐஏஎஸ் அதிகாரிகளும் கையெழுத்திட்டு பிரதமருக்கு அனுப்பியுள்ளனர்.
இதுகுறித்து திமுக மாநிலங்களவைக் குழுத் தலைவர் திருச்சி சிவா கூறியதாவது:
பிரதமருக்கு எழுதப்பட்டுள்ள கடிதத்தில் ஐஏஎஸ் அதிகாரிகளின் பணி விதிகளில் மாற்றம் கொண்டு வரக் கூடாது என வலியுறுத்தியுள்ளோம். குறிப்பாக, குடிமைப் பணி  அதிகாரிகளை மாநில அரசு ஒப்புதல் இல்லாமல் மத்திய அரசுப் பணிக்கு அழைத்து கொள்ளலாம் என்ற வகையில் விதிகளில் மாற்றம் செய்வது மாநிலங்களின் அதிகாரத்தையும், உரிமையையும் பறிக்கும் செயல். எனவே, இந்தத் திருத்தத்தைக் கொண்டு வரக்கூடாது என கூட்டுக் கடிதத்தில் வலுயுறுத்தியுள்ளோம்.
ஆளுநர்கள் நடவடிக்கை குறித்தும் புகார்: இதுபோன்று எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் ஆளுநர்களின் செயல்பாடு மாநில அரசின் நடவடிக்கையைத் தடுக்கும் வகையில் உள்ளது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை செயல்படவிடாமல் குறுக்கீடு செய்து தடை செய்வது குறித்தும் குற்றம்சாட்டியுள்ளோம்.  ஆளுநர்களின் குறுக்கீட்டால் தமிழகம், மேற்கு வங்கம், கேரளம், மகாராஷ்டிரம் ஆகிய மாநிலங்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன.
ஆளுநர்கள் குடியரசு தலைவரின் பிரதிநிதிகள் என்பதற்கு மாறாக மாநில அரசுகளை ஒடுக்குகிற முயற்சியில் ஈடுபடுவதையும் இந்தக் கூட்டறிக்கையில் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ஆளுநர்கள் மாநில அரசின் செயல்பாடுகளில் குறுக்கீடு செய்யாமல் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க பிரதமரிடம் இந்தக் கூட்டு கடிதத்தில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. 
மேலும், கூட்டாட்சி தத்துவத்தின் அடிப்படையில் இயங்க வேண்டிய நாட்டில், அரசியலமைப்புக்கு எதிராக தொடர்ந்து பல விஷயங்கள் நடைபெற்று வருவதைத் தடுக்கப்படவில்லை என்றால் நாட்டின் ஜனநாயகம், அரசியலமைப்புச் சட்டத்துக்கு ஆபத்து நேரிடும் என அனைத்துக் கட்சியினரும் இணைந்து இந்தக் கூட்டு கடிதம் மூலமாக பிரதமருக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளது. இதை மக்களுக்கும் எடுத்துரைக்கின்றோம் 
என்றார் திருச்சி சிவா.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.