பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

நாடு முழுவதும் ஒரே பாடத் திட்டத்தை அறிமுகப்படுத்த கோரிய மனு: உச்சநீதிமன்றம் தள்ளுபடி

நாடு முழுவதும் ஒரே பாடத் திட்டத்தை அறிமுகப்படுத்த உத்தரவிடக் கோரியும், கல்வி பெறும் உரிமைச் சட்டம்-2009-இல் உள்ள சில பிரிவுகள் நியாயமற்றவை என்று அறிவிக்கக் கோரியும் தாக்கல் செய்த மனுவை விசாரணைக்கு ஏற்க உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை மறுப்பு தெரிவித்தது.

News image
உச்சநீதிமன்றம்
Updated On :11 பிப்ரவரி 2022, 7:16 pm

DIN

நாடு முழுவதும் ஒரே பாடத் திட்டத்தை அறிமுகப்படுத்த உத்தரவிடக் கோரியும், கல்வி பெறும் உரிமைச் சட்டம்-2009-இல் உள்ள சில பிரிவுகள் நியாயமற்றவை என்று அறிவிக்கக் கோரியும் தாக்கல் செய்த மனுவை விசாரணைக்கு ஏற்க உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை மறுப்பு தெரிவித்தது.

இந்த விவகாரம் தொடரபாக மனுதாரா் உயா்நீதிமன்றத்தை அணுகுமாறும் நீதிபதிகள் உத்தரவிட்டனா்.

மூத்த வழக்குரைஞா் அஸ்வினி உபாத்யாய சாா்பில் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் கூறியிருப்பதாவது:

கல்வி பெறும் உரிமை சட்டத்தின் பிரிவுகள் 1(4) மற்றும் 1(5) ஆகியவை அரசியல் சாசன விளக்கத்துக்கு மிகப் பெரிய தடையாக இருப்பதோடு, நாடு முழுமைக்கும் தாய் மொழியில் பொதுவான கல்வித் திட்டம் இல்லாதது அறியாமையை ஊக்குவிப்பதாகவும் வளா்ப்பதாகவும் உள்ளது.

நாடு முழுவதற்கும் ஒரே மாதிரியான பொதுவான கல்வித் திட்டத்தை அறிமுகம் செய்ய வேண்டியது மத்திய அரசின் கடமை. ஆனால், ஏற்கெனவே நடைமுறையில் உள்ள 2005-ஆம் ஆண்டு தேசிய கல்வி (என்சிஎஃப்) திட்டத்தை ஏற்றுக்கொண்டதன் மூலம், தனது கடமையை நிறைவேற்ற மத்திய அரசு தவறிவிட்டது.

மதரஸா, வேத பாடசாலைகள் போன்ற மத போதனைகளை போதிக்கும் கல்வி நிறுவனங்களில் கல்வித் திட்டத்தைப் பறிக்கும் வகையிலேயே சட்டப் பிரிவு 1(4) மற்றும் 1(5) பிரிவுகளை மத்திய அரசு அரசியல் சாசனத்தில் இணைத்துள்ளது.

இந்த சட்டப் பிரிவுகள், நாடு முழுவதும் பொது பாடத் திட்டத்தை அறிமுகப்படுத்த வலியுறுத்தும் சட்டப் பிரிவுகள் 14,15,16,21 மற்றும் 21ஏ பிரிவுகளை மீறுவது மட்டுமின்றி, ஒவ்வொரு குழந்தைக்கும் கல்வி என்பது அடிப்படை உரிமை என்பதை உறுதிப்படுத்தும் சட்டப் பிரிவுகள் 38,39,46 ஆகிய பிரிவுகளுக்கும் எதிரானதாகும்.

எனவே, அரசியல் சாசன பிரிவுகள் 1(4) மற்றும் 1(5) ஆகியவை நியாயமற்றவை என்று அறிவிப்பதோடு, நாடு முழுவதற்கும் 1 முதல் 8-ஆம் வகுப்பு வரை ஒரே பாடத் திட்டம் மற்றும் பொது கல்வித் திட்டத்தை அறிமுகப்படுத்த மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று மனுவில் அவா் கோரியிருந்தாா்.

இந்த மனு உச்சநீதிமன்ற நீதிபதிகள் எல்.நாகேஸ்வர ராவ், பி.ஆா்.கவாய் அடங்கிய அமா்வு முன்பு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், ‘அரசியல் சாசனத்தில் 1(4), 1(5) பிரிவுகளை இணைப்பதற்கான சட்டத் திருத்தம் மேற்கொள்ளப்பட்டு 12 ஆண்டுகளுக்குப் பிறகு அதனை எதிா்த்து மனு தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. இந்த விவகாரம் தொடா்பாக ஏன் உயா்நீதிமன்றத்தை அணுகவில்லை? இந்த வழக்கில் எந்தக் கருத்தையும் தெரிவிக்க விரும்பவில்லை. எனவே, மனுதாரா் உயா்நீதிமன்றத்தை அணுகலாம்’ என்று கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.