'கோட்சே என் ஆதர்சம்' பேச்சுப் போட்டி: காந்தியை விமர்சித்த மாணவருக்குப் பரிசு

குஜராத்தில் 'நாதுராம் கோட்சே என் ஆதர்சம்' என்ற தலைப்பில் நடத்தப்பட்ட பேச்சுப் போட்டியில் காந்தியை விமர்சித்து, கோட்சேவை ஹீரோவாகக் கருதிய மாணவர் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது
'கோட்சே என் ஆதர்சம்' பேச்சுப் போட்டி:  காந்தியை விமர்சித்த மாணவருக்குப் பரிசு


குஜராத்தில் 'நாதுராம் கோட்சே என் ஆதர்சம்' என்ற தலைப்பில் நடத்தப்பட்ட பேச்சுப் போட்டியில் காந்தியை விமர்சித்து, கோட்சேவை ஹீரோவாகக் கருதிய மாணவர் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

குஜராத்தில் குழந்தைகள் திறன் அறியும் மாவட்ட அளவிலான போட்டியின் பகுதியாக 11 முதல் 13 வயதுடைய மாணவர்களுக்கு பல்வேறு தலைப்பில் பேச்சுப் போட்டி நடத்த மாவட்ட நிர்வாகிகள் உத்தரவிட்டனர். வல்சாத் மாவட்டத்தில் கசம் வித்யாலயா பள்ளியில் இதற்கான ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

பள்ளி நிர்வாகிகள் அளித்த தகவலின்படி, இந்தப் போட்டியின் பல்வேறு தலைப்புகளில் நாதுராம் கோட்சே என் ஆதர்சம் என்ற தலைப்பும் இடம்பெற்றிருக்கிறது. இதில் மகாத்மா காந்தியை விமர்சித்து நாதுராம் கோட்சேவை ஹீரோவாகப் போற்றி பேசிய மாணவர் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

இதுபற்றி வல்சாத் மாவட்ட ஆட்சியர் செய்தியாளர்களிடம் கூறுகையில், "இந்த நிகழ்ச்சியை நடத்திய மாவட்ட இளையோர் மேம்பாட்டு அலுவலர் மிதாபென் காவ்லி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். இதில் மற்ற அதிகாரிகளின் பங்கு குறித்தும் நாங்கள் விசாரித்து வருகிறோம்" என்றார்.

மத்திய உள்துறை இணையமைச்சர் ஹர்ஷ் சங்க்வி காந்தி நகரில் செய்தியாளர்களிடம் கூறுகையில், "இதுதொடர்பாக விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. இதற்குப் பொறுப்பான அனைவரும் இடைநீக்கம் செய்யப்படுவார்கள்" என்றார்.

இதுபற்றி கசம் வித்யாலயா பள்ளி தாளாளர் அர்ச்சனா தேசாயை தொடர்புகொண்டபோது, "இந்த நிகழ்ச்சி முழுவதும் உள்ளாட்சி நிர்வாக அதிகாரிகளால் ஏற்பாடு செய்யப்பட்டது. இதற்கான இடம் மட்டுமே பள்ளி வளாகத்தில் ஒதுக்கப்பட்டது. இந்தப் போட்டிகளுக்கும் பள்ளிகளுக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது" என்று தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com