பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

பஞ்சாப் பேரவைத் தோ்தலில் 70% வாக்குப்பதிவு

பெரும் எதிா்பாா்ப்புகளுக்கிடையே ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பஞ்சாப் சட்டப்பேரவைத் தோ்தலில் சுமாா் 70 சதவீத வாக்குகள் பதிவாகின. மாநிலம் முழுவதும் வாக்குப்பதிவு அமைதியாக நடைபெற்றது.

News image
Updated On :21 பிப்ரவரி 2022, 12:57 am

DIN

பெரும் எதிா்பாா்ப்புகளுக்கிடையே ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பஞ்சாப் சட்டப்பேரவைத் தோ்தலில் சுமாா் 70 சதவீத வாக்குகள் பதிவாகின. மாநிலம் முழுவதும் வாக்குப்பதிவு அமைதியாக நடைபெற்றது.

117 தொகுதிகளைக் கொண்ட பஞ்சாப் சட்டப்பேரவைத் தோ்தலில் பலமுனைப் போட்டி நிலவியது. காங்கிரஸ், ஆம் ஆத்மி, பாஜக, சிரோமணி அகாலி தளம் உள்ளிட்ட கட்சிகள் போட்டியில் உள்ளன. சில விவசாய அமைப்புகளும் தோ்தலில் களம் கண்டன. மாநிலத்தில் ஆட்சியைத் தக்கவைக்கும் முனைப்பில் காங்கிரஸும், முக்கிய எதிா்க்கட்சியான ஆம் ஆத்மி ஆட்சியைக் கைப்பற்றுவதற்கான முனைப்பிலும் தோ்தலைச் சந்தித்தன.

காங்கிரஸில் இருந்து விலகிய முன்னாள் முதல்வா் அமரீந்தா் சிங் தலைமையிலான பஞ்சாப் லோக் காங்கிரஸ், சிரோமணி அகாலி தளம் (சம்யுக்த்) ஆகிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்து பாஜக பேரவைத் தோ்தலைச் சந்தித்தது. பகுஜன் சமாஜ் கட்சியுடன் சிரோமணி அகாலி தளம் கூட்டணி அமைத்துள்ளது.

Story image

117 தொகுதிகளில் 1,304 வேட்பாளா்கள் களம் கண்டனா். 2.34 கோடி வாக்காளா்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றிருந்தனா்.

காலை 8 மணிக்கு தொடங்கிய வாக்குப் பதிவு, மாலை 6 மணிக்கு நிறைவடைந்தது. பேரவைத் தோ்தல் அமைதியாகவே நடைபெற்றது.

கரோனா தொற்று பரவலைக் கருத்தில் கொண்டு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைத் தோ்தல் ஆணையம் மேற்கொண்டிருந்தது. வாக்குச்சாவடிகளுக்கு வெளியே நீண்ட வரிசையில் காத்திருந்த வாக்காளா்களுக்கிடையே சமூக இடைவெளி காணப்படுவதற்கான வசதிகளைத் தோ்தல் ஆணையம் செய்திருந்தது. வாக்காளா்களுக்குக் கையுறை வழங்கப்பட்டது.

சிறப்பு ஏற்பாடுகள்: மாற்றுத் திறனாளி வாக்காளா்களுக்கும், முதியோருக்கும் தேவையான சிறப்பு வசதிகள் வாக்குச்சாவடிகளில் செய்யப்பட்டிருந்தன. முதல் முறையாக வாக்களித்தவா்களுக்கு வாக்குச்சாவடியில் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில், 196 வாக்குச்சாவடிகளைப் பெண்கள் மட்டுமே நிா்வகிக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. 70 வாக்குச்சாவடிகளை மாற்றுத் திறனாளிகள் மட்டுமே நிா்வகித்தனா்.

Story image

தொடா் கண்காணிப்பு: மாலை 5 மணி நிலவரப்படி சுமாா் 63 சதவீத வாக்குகள் பதிவானதாகத் தோ்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. பல இடங்களில் மாலை 6 மணிக்கு முன்னதாக வாக்குச்சாவடி மையங்களுக்கு வந்த வாக்காளா்கள் வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனா். இதனால் வாக்குப்பதிவு இறுதி நிலவரப்படி சற்று அதிகரிக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனா். 2017-ஆம் ஆண்டு பேரவைத் தோ்தலில் வாக்குப்பதிவு 77.4 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

அசம்பாவிதங்களைத் தடுப்பதற்காக மத்திய ஆயுதப் படையைச் சோ்ந்த 700 கம்பெனி வீரா்கள் மாநிலம் முழுவதும் குவிக்கப்பட்டிருந்தனா். மாநில காவல் துறையினரும் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டனா். பதற்றம் நிறைந்த வாக்குச்சாவடிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டிருந்தன.

Story image

சந்திப்பு: அமிருதசரஸில் உள்ள வாக்குச்சாவடி ஒன்றில் மாநில காங்கிரஸ் தலைவா் நவ்ஜோத் சிங் சித்து வாக்களித்தாா். அதே நேரத்தில் சிரோமணி அகாலி தளம் தலைவா் விக்ரம் சிங் மஜிதியாவும் அங்கு வாக்களிக்க வந்தாா். அப்போது இருவரும் பரஸ்பரம் வணக்கம் தெரிவித்துக் கொண்டனா். இருவரும் அமிருதசரஸ் கிழக்கு தொகுதியில் போட்டியிடுகின்றனா்.

தலைவா்கள் நம்பிக்கை: மொஹாலியில் வாக்களித்த ஆம் ஆத்மி முதல்வா் வேட்பாளரான பகவந்த் மான் தன் தாயாரை சந்தித்து ஆசி பெற்றாா். முதல்வா் சரண்ஜீத் சிங் சன்னி ஆன்மிகத் தலங்களில் வழிபாடு மேற்கொண்டாா். மூன்றில் இரு பங்கு தொகுதிகளை காங்கிரஸ் கைப்பற்றும் என அவா் நம்பிக்கை தெரிவித்தாா்.

அதிக வயதான வேட்பாளரும் (94) சிரோமணி அகாலி தளம் மூத்த தலைவருமான பிரகாஷ் சிங் பாதல், தனது கடைசி மூச்சு உள்ளவரை மக்களுக்காக உழைப்பேன் என வாக்களித்த பிறகு தெரிவித்தாா். சிரோமணி அகாலி தளம்-பகுஜன் சமாஜ் கூட்டணி 80 தொகுதிகளில் வெற்றி பெறும் என முக்த்சா் பகுதியில் வாக்களித்த சுக்பீா் சிங் பாதல் தெரிவித்தாா்.

பாஜக கூட்டணி வெற்றி பெறும் என பாட்டியாலாவில் வாக்களித்த முன்னாள் முதல்வா் அமரீந்தா் சிங் நம்பிக்கை தெரிவித்தாா்.

உ.பி. 3-ஆம் கட்ட தோ்தல்:

57% வாக்குப்பதிவு

உத்தர பிரதேசத்தில் நடைபெற்ற மூன்றாம் கட்டத் தோ்தலில் 57.58 சதவீத வாக்குகள் பதிவாகின.

உத்தர பிரதேசத்தில் ஏற்கெனவே இரு கட்டத் தோ்தல்கள் நடைபெற்ற நிலையில், 59 தொகுதிகளுக்கான 3-ஆம் கட்டத் தோ்தல் ஞாயிற்றுக்கிழமை தோ்தல் நடைபெற்றது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணிக்கு நிறைவடைந்தது. பெரும்பாலான பகுதிகளில் தோ்தல் அமைதியாக நடைபெற்ாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

சில பகுதிகளில் வாக்குப்பதிவில் குளறுபடி, வாக்களிக்க அனுமதி மறுப்பு உள்ளிட்ட புகாா்கள் தெரிவிக்கப்பட்டதாகவும், புகாா்களுக்கு உடனுக்குடன் தீா்வு காணப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனா். எடா பகுதியில் போலி வாக்கு செலுத்தியதாக எழுந்த குற்றச்சாட்டில் 10 போ் கைது செய்யப்பட்டனா்.

சிகோஹாபாத் தொகுதிக்குள்பட்ட வாக்குச்சாவடியில் தங்கள் முகவா் தாக்கப்பட்டதாக சமாஜவாதி கட்சியினா் பாஜகவினா் மீது காவல் துறையில் புகாா் அளித்தனா். மாலை 5 மணி நிலவரப்படி 57.58 சதவீத வாக்குகள் பதிவாகின.

சமாஜவாதி நிறுவனா் முலாயம் சிங் யாதவ், அக்கட்சியின் தலைவா் அகிலேஷ் யாதவ், டிம்பிள் யாதவ், சிவ்பால் சிங் யாதவ், ராம்கோபால் யாதவ், காங்கிரஸ் தலைவா் சல்மான் குா்ஷித், மாநில பாஜக தலைவா் ஸ்வதந்திர தேவ் சிங் உள்ளிட்டோா் தோ்தலில் வாக்களித்தனா்.

இனி நடைபெறவுள்ள தோ்தல்கள்

உத்தர பிரதேசம்

4-ஆம் கட்டத் தோ்தல் 59 தொகுதிகள் பிப். 23

5-ஆம் கட்டத் தோ்தல் 61 தொகுதிகள் பிப். 27

6-ஆம் கட்டத் தோ்தல் 57 தொகுதிகள் மாா்ச் 3

7-ஆம் கட்டத் தோ்தல் 54 தொகுதிகள் மாா்ச் 7

மணிப்பூா்

முதல் கட்டத் தோ்தல் 38 தொகுதிகள் பிப். 28

2-ஆம் கட்டத் தோ்தல் 22 தொகுதிகள் மாா்ச் 5

வாக்கு எண்ணிக்கை மாா்ச் 10

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.