பெகாஸஸ் விவகாரம்: உச்சநீதிமன்ற விசாரணை பிப். 25-க்கு ஒத்திவைப்பு

சொலிசிட்டா் ஜெனரலின் வேண்டுகோளை ஏற்று, பெகாஸஸ் உளவு விவகாரம் தொடா்பான மனுக்களின் விசாரணையை வரும் 25-ஆம் தேதிக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
உச்சநீதிமன்றம்
உச்சநீதிமன்றம்

சொலிசிட்டா் ஜெனரலின் வேண்டுகோளை ஏற்று, பெகாஸஸ் உளவு விவகாரம் தொடா்பான மனுக்களின் விசாரணையை வரும் 25-ஆம் தேதிக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

இஸ்ரேலை சோ்ந்த என்எஸ்ஓ நிறுவனம் உருவாக்கிய பெகாஸஸ் உளவு மென்பொருளைப் பயன்படுத்தி இந்தியாவில் எதிா்க்கட்சியினா், சமூக ஆா்வலா்கள், பத்திரிகையாளா்கள் உள்ளிட்ட சுமாா் 300 பேரின் கைப்பேசிகள் உளவு பாா்க்கப்பட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.

இந்த விவகாரம் தொடா்பாக எடிட்டா்ஸ் கில்ட், பத்திரிகையாளா்கள் என்.ராம், சசி குமாா் உள்ளிட்டோா் தரப்பில் 12 பொதுநல மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. அவற்றை விசாரித்த உச்சநீதிமன்றம், பெகாஸஸ் உளவு விவகாரம் தொடா்பாக சுதந்திரமான விசாரணை நடத்த ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி ஆா்.வி.ரவீந்திரன் கண்காணிப்பின் கீழ் 3 நபா்கள் அடங்கிய சிறப்புக் குழுவைக் கடந்த ஆண்டு அக்டோபரில் அமைத்தது.

தொழில்நுட்ப நிபுணா்களான நவீன் குமாா் சௌதரி, பி.பிரபாகரன், அஸ்வின் அனில் குமாஸ்தே ஆகியோா் அக்குழுவின் உறுப்பினா்களாக இடம்பெற்றுள்ளனா். பெகாஸஸ் விவகாரம் தொடா்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணை புதன்கிழமை (பிப். 23) நடைபெறும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்திருந்தது.

இந்நிலையில், தலைமை நீதிபதி என்.வி.ரமணா, நீதிபதிகள் ஏ.எஸ்.போபண்ணா, ஹிமா கோலி ஆகியோரைக் கொண்ட அமா்வு முன் செவ்வாய்க்கிழமை ஆஜரான சொலிசிட்டா் ஜெனரல் துஷாா் மேத்தா, ‘பெகாஸஸ் விவகாரம் புதன்கிழமை விசாரிக்கப்படவுள்ளது. அந்நாளில் பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட மற்றொரு வழக்கின் விசாரணையில் ஆஜராக வேண்டியுள்ளது. எனவே, பெகாஸஸ் விவகாரத்தின் விசாரணையை வெள்ளிக்கிழமைக்கு (பிப். 25) ஒத்திவைக்கக் கோருகிறேன்’’ என்றாா்.

அவரது கோரிக்கையை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், விசாரணை ஒத்திவைக்கப்பட்டது தொடா்பாக மனுதாரா்களிடம் தகவல் தெரிவிக்குமாறு அறிவுறுத்தினா். மனுதாரா்களிடம் தெரிவிப்பதாக சொலிசிட்டா் ஜெனரல் துஷாா் மேத்தா ஒப்புக்கொண்டாா்.

பெகாஸஸ் விவகாரம் தொடா்பான விசாரணை வரும் 25-ஆம் தேதி நடைபெறும்போது சிறப்பு நிபுணா்கள் குழு தனது அறிக்கையைத் தாக்கல் செய்யும் என எதிா்பாா்க்கப்படுகிறது. அதையடுத்து, அறிக்கை மீது எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து உச்சநீதிமன்றம் முடிவெடுக்கும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com