கட்சி மாறும் எம்எல்ஏக்கள்...உ.பி. அரசியலில் தொடரும் அமளி துமளி

தேர்தல் நடைபெறவுள்ள உத்தரப் பிரதேசத்தில், கடந்த 48 மணி நேரத்தில் இரண்டு அமைச்சர்கள் உள்பட ஆறு பேர் கட்சி மாறியுள்ளனர்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

உத்தரப் பிரதேச சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுவதற்கு இன்னும் 30 நாள்கள் கூட மிச்சமில்லாத நிலையில், யோகி ஆதித்யநாத் தலைமையிலான அமைச்சரவையிலிருந்து இரண்டு அமைச்சர்கள் ராஜிநாமா செய்து சமாஜ்வாதி கட்சியில் இணைந்தனர். இந்நிலையில், சமாஜ்வாதி கட்சியிலிருந்து இரண்டு எம்எம்ஏக்களும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஒரு எம்எல்ஏவும் பாஜகவில் இணைந்துள்ளனர்.

சமாஜ்வாதி கட்சியை சேர்ந்த சிர்சாகஞ்ச் தொகுதி எம்எல்ஏ ஹரிஓம் யாதவ், பாஜகவில் இணைந்ததை தொடர்ந்து, சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவை கடுமையாக சாடினார். இதுகுறித்து விரிவாக பேசிய அவர், "சமாஜ்வாடி கட்சி இனி முலாயம் சிங் யாதவின் (அகிலேஷ் யாதவின் தந்தை) கட்சி அல்ல. 

அகிலேஷை சூழ்ந்து கொண்டு அவரை பலவீனப்படுத்த நினைக்கும் துதிபாடுவோரின் கட்சி. நான் கட்சியில் தொடர்வதை ராம் கோபால் யாதவ் (சமாஜ்வாடி கட்சியின் பொதுச் செயலாளர் மற்றும் ராஜ்யசபா எம்பி) மற்றும் அவரது மகன் விரும்பவில்லை. நான் அவர்களின் இருப்புக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக அவர்கள் நினைக்கிறார்கள்" என்றார்.

மூன்று முறை எம்எல்ஏவாக பதவி வகித்துள்ள ஹரிஓம், கடந்தாண்டு பிப்ரவரி மாதம், கட்சிக்கு எதிராக செயல்பட்டதாகக் கூறி சமாஜ்வாதி கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். பின்னர், பஞ்சாயத்து தேர்தலில் சமாஜ்வாதி கட்சி வேட்பாளரை தோற்கடித்து பாஜக வேட்பாளர் வெற்றி பெற அவர் உதவியதால் கட்சிக்கும் அவருக்கும் இடையேயான உரசல் அதிகரித்தது.

இதனிடையே, தில்லியில் உத்தரப் பிரதேச துணை முதல்வர்கள், பாஜக மாநில தலைவர் சுவதந்திர தேவ் சிங் ஆகியோர் முன்னிலையில் அவர் பாஜகவில் இணைந்தார். இவர், முலாயம் யாதவின் உறவினர் என்பது குறிப்பிடத்தக்கது. தேர்தல் நடைபெறவுள்ள உத்தரப் பிரதேசத்தில், கடந்த 48 மணி நேரத்தில் இரண்டு அமைச்சர்கள் உள்பட ஆறு பேர் கட்சி மாறியுள்ளனர்.

முன்னாள் அமைச்சர்கள் ராதா சிங் செளகான், சுவாமி பிரசாத் மவுரியா ஆகியோர் பாஜகவிலிருந்து விலகியுள்ளனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com