'உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன்': திமுக அரசின் செயல்பாடுகள் குறித்து முதல்வர் (விடியோ)

திமுக அரசின் கடந்த எட்டு மாதச் செயல்பாடுகள் குறித்து தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் விடியோ வாயிலாக தமிழக மக்களுக்கு எடுத்துரைத்துள்ளார்.
'உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன்': திமுக அரசின் செயல்பாடுகள் குறித்து முதல்வர்
'உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன்': திமுக அரசின் செயல்பாடுகள் குறித்து முதல்வர்

சென்னை: திமுக அரசின் கடந்த எட்டு மாதச் செயல்பாடுகள் குறித்து தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் விடியோ வாயிலாக தமிழக மக்களுக்கு எடுத்துரைத்துள்ளார்.

"மக்களோடு வாழ் என்ற பேரறிஞர் அண்ணா சொன்ன வழியில்; முத்தமிழறிஞர் கலைஞர் பழக்கியபடி உங்களுக்கு உழைக்கவே காத்திருக்கிறேன் என்று உறுதிகூறி இதுவரையிலான என்னுடைய செயல்பாடுகளை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன்" என்று தனது சுட்டுரைப் பக்கத்தில் பதிவிட்டு, இந்த விடியோவை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ளார்.

விடியோவில் முதல்வர் ஸ்டாலின் கூறியிருப்பதாவது, அரிசி குடும்ப அட்டை வைத்திருக்கும் குடும்ப அட்டைகளுக்கு தலா 4 ஆயிரம், ஆவின் பால் விலை ரூ.3 வீதம் குறைத்து விற்பனை செய்ய, அரசுப் பேருந்துகளில் பெண்கள் கட்டணமில்லாமல் பயணிக்க, தொகுதிகள் தோறும் பெற்ற மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கும் வகையில், உங்கள் தொகுதியில் முதலமைச்சர் என்ற புதிய துறையை உருவாக்க, கரோனாவுக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதற்கான கட்டணத்தை தமிழக அரசே ஏற்கும் என்பது உள்ளிட்ட ஐந்து உத்தரவுகளில் முதல்வராக பொறுப்பேற்ற நாளே கையெழுத்திட்டேன்.

தேர்தலுக்கு முன்பு, மாவட்டந்தோறும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பொதுமக்களிடமிருந்து நான் பெற்ற இரண்டரை லட்சம் மனுக்களின் மீது 100 நாள்களில் நடவடிக்கை எடுத்துள்ளோம்.

ஒன்று மட்டும் நிச்சயம்.. கொடுத்த வாக்குறுதியை இந்த ஸ்டாலின் நிச்சயம் நிறைவேற்றுவேன். அதில் யாருக்கும் எந்த சந்தேகமும் வேண்டாம்.

தேர்தலில் சொல்லாத பல விஷயங்களையும் இந்த திமுக அரசு செய்து வருகிறது. அது பற்றியும், அமைச்சர்கள் துறை வாரியாக வெளியிட்ட அறிவிப்புகள் தொடர்பாகவும் புத்தகங்கள் வெளியிடப்பட்டுள்ளன. எனவே, நாங்கள் என்ன செய்வோம் என்பது பொது வெளியில் உள்ளது. அந்த அளவுக்கு வெளிப்படையான நிர்வாகமே எனது விருப்பம்.

எதையும் சும்மா வாய் வார்த்தைக்குச் சொல்லி மறந்துவிடுபவர்கள் அல்ல நாங்கள். அதை கல்வெட்டு போல மனதில் பதியவைத்துக் கொண்டு செயல்படுத்துவோம். செயல்படுத்தியும் வருகிறோம்.  

மக்களோடு வாழ் என்று பேரறிஞர் அண்ணா சொன்னார். அப்படித்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com