அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

5 மாநில பேரவைத் தேர்தல்: மின்னணு பிரசாரத்தில் முனைப்புக் காட்டும் கட்சிகள்

உத்தர பிரதேசம் உள்பட ஐந்து மாநிலங்களில் சட்டப் பேரவைத் தேர்தல் அடுத்த மாதம் நடைபெறவுள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தங்கள் கட்சிக் கொள்கைகளை மையப்படுத்தி

News image
Updated On :18 ஜனவரி 2022, 10:46 pm

DIN

உத்தர பிரதேசம் உள்பட ஐந்து மாநிலங்களில் சட்டப் பேரவைத் தேர்தல் அடுத்த மாதம் நடைபெறவுள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தங்கள் கட்சிக் கொள்கைகளை மையப்படுத்தி பிரசாரப் பாடல்களை வெளியிட்டும், எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்கு சினிமா பாணியில் பதிலடி கொடுப்பதுபோல காட்சிகள் வரைந்தும், எதிர்க்கட்சிகளைக் கேலி செய்தும் வெளியிட்டும் மின்னணு பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
 அரசியல் கட்சிகளின் தொழில்நுட்பப் பிரிவினர் வாக்காளர்களைக் கவரும் வகையில் தங்கள் கட்சியின் அதிரடி வசனங்களையும், எதிர்க்கட்சிகளுக்குப் பதிலடி கொடுக்கும் வசனங்களையும் ஃபேஸ்புக், யூ-டியூப் போன்ற வலைதளங்களில் வெளியிடுவதற்காக இரவு பகலாக வேலை செய்து வருகின்றனர்.
 அண்மையில் பிரபலமான இலங்கை பாடகர் யோகானி டிசில்வாவின் பாடலான "மனிகே மஹே கீதே' என்ற பாடலின் மெட்டில், பிரதமர் மோடி, முதல்வர் யோகியை குறிப்பிடும்படியாக, "எல்லோருடைய இதயத்திலும் இருவர் மீது நம்பிக்கை உள்ளது' என்ற பொருளில் பாடலை வெளியிட்டு உத்தர பிரதேசத்தில் பாஜகவினர் தேர்தல் பிரசாரம் செய்து வருகின்றனர்.
 பாஜகவின் பிரசார பாடலாக உள்ள இந்தப் பாடலில், கடந்த 5 ஆண்டுகளில் மாநிலத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையில் கலவரமற்ற மாநிலமாக உள்ளது, மின் விநியோகம் அதிகரிப்பு, அயோத்தியில் ராமர் கோயில் கட்டுமானம் போன்ற நடவடிக்கைகளைக் குறித்த வரிகள் இடம்பெற்றுள்ளன. இந்தப் பாடலை பாஜக சார்பாக பகிர்ந்து வருகின்றனர். அதன் தலைவர்களும் தங்கள் சமூக ஊடக பக்கங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
 சமாஜவாதி கட்சியும் பல்வேறு பிரசாரப் பாடல்களை வெளியிட்டுள்ளது. "பாஜகவை ஆட்சியிலிருந்து அகற்றுவோம்' என்ற வரிகளுடன் பாடல்கள் அமைக்கப்பட்டு, அவை பிரசாரத்துக்குப் பயன்படுத்தப்படுகின்றன.
 கோவா மாநிலத்தில் திரிணமூல் காங்கிரஸ் கட்சி சார்பில் கொங்கணி மொழியில் பிரசார பாடல் வெளியிடப்பட்டுள்ளது. அந்தப் பாடல் வரிகளாக "இரு மலர்களைக் கொண்ட சகாப்தம் இங்கே துவங்க இருக்கிறது. இது கோவாவின் புதிய விடியல்' என்று பாடல் அமைந்துள்ளது. பாடல் வரியில் உள்ள இரு மலர்கள் என்ற சொல் திரிணமூல் கட்சியின் சின்னத்தில் இடம்பெற்றுள்ள மலர்களைக் குறிப்பதாகும்.
 பஞ்சாப் மாநிலத்தில் தேர்தல் கவர்ச்சித் திட்டங்களை அறிவித்து வரும் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னியைத் தாக்கி ஆம் ஆத்மி கட்சி நகைச்சுவைத் துணுக்குகளுடன் கூடிய துண்டுப் பிரசுரங்களை வெளியிட்டு வருகிறது.
 அதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில், ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கேஜரிவாலை விளம்பர பிரியர் எனக் கேலி செய்து வசனங்களுடன் கேலிச் சித்திரங்களை காங்கிரஸ் கட்சி வெளியிட்டு வருகிறது.
 பஞ்சாபில் முதல்வர் பதவியை ராஜிநாமா செய்துவிட்டு காங்கிரஸ் கட்சியிலிருந்து வெளியேறி, பஞ்சாப் லோக் காங்கிரஸ் என்ற புதிய கட்சியைத் தொடங்கியிருக்கும் அமரீந்தர் சிங் தனது தேர்தல் சின்னமான ஹாக்கி மட்டை, பந்துடன் பிரசாரம் செய்து வருகிறார்.
 உத்தரகண்டில் பாஜக அரசின் ராணுவ வீரர்களுக்கு "ஒரே பதவி ஒரே ஓய்வூதியம்' என்ற திட்டத்தை விமர்சித்து காங்கிரஸ் விடியோ வெளியிட்டுள்ளது. அதில் முன்னாள் படை வீரர்கள் இதுவரை இத்திட்டத்தில் முழு பலனையும் பெறவில்லை என்று கேலி செய்துள்ளது.
 இதற்கு மறுப்பு தெரிவித்து பாஜக சார்பில், முன்னாள் படை வீரர் ஒருவர் பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்துப் பேசும் விடியோவை வெளியிடப்பட்டு காங்கிரஸுக்கு பாஜக தலைமை பதிலடி கொடுத்துள்ளது. இரு பதிவுகளும் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகின்றன.
 உத்தரகண்டில் கடந்த 2017-இல் நடைபெற்ற பேரவைத் தேர்தலில் மத்திய பாஜக அரசின் ஒரே பதவி ஒரே ஓய்வூதிய திட்ட அமலாக்கம் பெரும் வெற்றியை அக்கட்சிக்குப் பெற்று தந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.